விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு, அதன் பணிகள் கவனம் பெற்றன. Car Race Supreme Court
சென்னை பார்முலா 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை மூன்று ஆண்டுகள் நடத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், தனியார் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. சென்னை தீவுத் திடலைச் சுற்றி முதல் பார்முலா 4 கார் பந்தயம் 2024 ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
கார் பந்தயத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கார் பந்தயம் நடத்துவதற்கு தடையில்லை என்று உத்தரவிட்டது. அதே சமயம் கார் பந்தயத்துக்கு தமிழ்நாடு அரசு செலவிட்ட 42 கோடி ரூபாயை தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் எனவும், அடுத்த ஆண்டு பந்தயம் நடத்துவதற்கான ரூ.15 கோடியை முன்னரே டெபாசிட் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தனியார் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தரப்பில், “கார் பந்தயம் நடத்துவதற்கு அதிகப்படியான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு இல்லாமலும், உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும் நடத்தப்பட்டுள்ளது. ஆகவே, வரும் காலங்களில் இதுபோன்ற கார் பந்தயங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.
இதற்கு நீதிபதிகளோ, கார் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவது மாநில அரசு தொடர்புடைய விஷயமாகும் என்று தெரிவித்தனர். அதில் நீதிமன்றம் எப்படி தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கார் பந்தயத்துக்கான செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தனர்.
இதன் மூலம் இந்த ஆண்டும் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இது கார் பந்தய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Car Race Supreme Court