விருத்தாசலம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். குடிபோதையில் இயக்கியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
விருத்தாசலம் எருமனூர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன், TN04AP7584 என்ற பதிவெண் கொண்ட மாருதி சுசுகி சுவிஃப்ட் டிசையர் காரை இயக்கி சென்றுள்ளார். அந்த காரில் வெங்கடேசனின் நண்பர்களான ஐயப்பன் , ஆதினேஷ், வேல்முருகன், கண்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். இன்று (ஆகஸ்ட் 20) நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கொளஞ்சியப்பர் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்து சித்தலூர் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் இடதுபுறம் வேகமாக இழுத்துச் சென்று மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் வெங்கடேசனின் நண்பர்கள் ஆதினேஷ் , ஐயப்பன் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்கள்.
மற்றொரு இளைஞரான வேல்முருகன் படுகாயங்களுடன் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி வேல்முருகனும் உயிரிழந்துவிட்டார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
வெங்கடேசன், கண்ணன் ஆகியோர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
“விசாரணையில் இளைஞர்கள் மதுபோதையில் இருந்து தெரியவந்தது. குறிப்பாக காரை இயக்கிய வெங்கடேசனும் மது அருந்தியிருந்தார். அதோடு நள்ளிரவில், எங்கேயாவது பிளாக்கில் மது விற்பனை செய்கிறார்களா? என காரை எடுத்துக் கொண்டு அங்கும் இங்கும் அழைந்துள்ளனர். அதிலும் காரில் சத்தமாக பாட்டுபோட்டுக்கொண்டு வைஃப் செய்துகொண்டே அலட்சியமாக இயக்கியதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது” என்கிறார்கள் விருத்தாசலம் காவல்துறை வட்டாரத்தில்.
இளைஞர் மதுபோதைக்கு அடிமையாகி இதுபோன்று விபத்தில் இறப்பது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
