தியேட்டர்களில் திருவிழாவை நிகழ்த்துமா ‘கேப்டன் பிரபாகரன்‘ ரீரிலீஸ்?!

Published On:

| By uthay Padagalingam

தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த திரைப்படங்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவது ஆர்.கே.செல்வமணியின் ‘கேப்டன் பிரபாகரன்’. தமிழ் திரையுலகில் நூறாவது படத்தை ‘ப்ளாக்பஸ்டர்’ ஆக்கிய நாயகர்களில் முதன்மையானவராக விஜயகாந்தை இடம்பெறச் செய்த திரைப்படம். இது போக இன்னும் பல சிறப்புகள் அப்படத்திற்கு உண்டு.

சந்தனக்கடத்தல் வீரப்பனை முன்மாதிரியாகக் கொண்டு ‘வீரபத்ரன்’ என்றே இப்படத்தில் வில்லன் பெயர் முன்னிறுத்தப்பட்டது. அந்த பாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் ‘சோலையம்மா’ புகழ் கரிகாலன். ஆனால், மன்சூர் அலிகான் அந்த வேடத்தில் நடித்தார். அதற்கு முன்னர் ‘வேலை கிடைச்சிடுச்சு’ படத்தில் நடித்தபோதும், அவரைக் கொடூர வில்லனாகப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது ‘கேப்டன் பிரபாகரன்’ தான்.

ADVERTISEMENT

அதுவரை வில்லனாகவும் குணசித்திர பாத்திரங்களிலும் நடித்து வந்த சரத்குமாரை இரண்டாவது நாயகன் போன்று காட்டியது ‘கே.பி’. இப்படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது என்பதையும், இதற்குப் பிறகே காவல் நிலையம், இதயவாசல், சேரன் பாண்டியன் போன்ற படங்கள் வெளியானது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதுவே, ஆர்.கே.செல்வமணியின் ‘தீர்க்கமான’ பார்வையைக் காட்டும்.

நாயகியாகப் பெரிய வெற்றியைப் பெறாமல் இருந்த ரம்யா கிருஷ்ணன் மீது புகழ் வெளிச்சம் படக் காரணமானது ‘கே.பி’தான். ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலானது, ‘இப்படியும் இவரைத் திரையில் காட்ட முடியுமா’ என்ற எண்ணத்தைப் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடத்தில் ஏற்படுத்தியது. அதன்பிறகே, அவர் தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் இடம்பிடித்தார். ஆனாலும், தமிழில் ‘படையப்பா’வுக்குப் பிறகே புகழ் பெற்றார்.

ADVERTISEMENT

மிகப்பெரிய ‘ஆக்‌ஷன்’ படத்தில் திரைக்கதை தொடங்கியவுடனேயே நாயகனை அறிமுகப்படுத்துகிற வழக்கத்தைப் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் பார்க்கலாம். ஆனால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி போன்றவர்கள் நடித்த படங்களில் அதனைக் காண முடியாது. கதையிலுள்ள முக்கியப் பிரச்சனை, வில்லன் பின்னணி, களத்தில் இருக்கிற வினோதமான அம்சங்களைச் சொன்ன பிறகே நாயகனின் அறிமுகம் திரையில் காட்டப்படும். அதற்குள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை படம் ஓடியிருக்கும்.

அதன்பிறகு திரையில் தோன்றுகிற நாயகன் இறுதியாக ‘வணக்கம்’ இடுகிற வரை நம் முன்னே நின்றாலும் போரடிக்காது. அந்த உத்தியை இதில் பயன்படுத்தி வெற்றி கண்டார் ஆர்.கே.செல்வமணி.

ADVERTISEMENT

சமீபத்தில் வெளியான ‘பீனிக்ஸ்’ படத்தில் கூட இதே உத்தி பின்பற்றப்பட்டிருக்கும். ’அதீத’ ஹீரோயிசத்தை ரசிகர்கள் கிண்டலடிக்காமல் இருக்க இது ரொம்பவே உதவும் என்பதை தொண்ணூறுகளில் ரசிகர்களுக்கு உணர்த்தியவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.

ரமேஷ் சிப்பி இயக்கத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஹேமாமாலினி, சஞ்சீவ் குமார், அம்ஜத்கான் நடித்த ‘ஷோலே’ படம் போன்ற திரையனுபவத்தைத் தர நினைத்த செல்வமணி, அதற்கு அர்ப்பணம் செய்யும் விதமாக ‘கே.பி.’யைத் தந்தார்.

முதலிரண்டு படங்களை ‘ப்ளாக்பஸ்டர்’ ஆகத் தந்தவர், பின்னாட்களில் அது போன்ற ஆக்‌ஷன் திரையனுபவங்களைத் தரவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம்தான்.

விஜயகாந்த் படம் என்றால் இன்னென்ன விஷயங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் தலையாயது ‘கேப்டன் பிரபாகரன்’.

இதில் விஜயகாந்தின் தாயாக நடித்த காந்திமதி, அமைச்சர் சபாநாயகமாக வரும் வி.எம்.ஜான், இன்னொரு கடத்தல்காரர் கிருஷ்ணமூர்த்தியாக வரும் லிவிங்ஸ்டன் என்று பலரது பாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய 4கே தரத்தில் மெருகேற்றி இப்படம் வெளியாகவிருப்பது ஒளிப்பதிவாளர்கள் ராஜராஜன், ரமேஷ்குமார் முதல் படத்தோடு சம்பந்தப்பட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்புகளை வியப்பதாக அமையும். அனைத்துக்கும் மேலாக, தனக்கு ரொம்பவும் பிடித்துப் போகிற கமர்ஷியல் படத்திற்கு இளையராஜா எப்படி பின்னணி இசை அமைப்பார் என்பதைத் துல்லியமாக உணர்த்தும் இப்படம்.

இப்படிப் பல விஷயங்கள், வரும் ஆகஸ்ட் 22 அன்று ‘ரீரிலீஸ்’ ஆகிற ‘கேப்டன் பிரபாகரன்’ குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும். கூடவே, தியேட்டர்களை திருவிழா கோலம் பூண வைக்குமா என்ற கேள்வியையும் பூதாகரமாக்கும்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share