தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சிஏபிஎஃப் தேர்வு நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஆயுதப்படையில் (சிஏபிஎஃப்) பணிபுரிவதற்கான தேர்வு அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தது. அதில் கணினித் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பானது இந்தி பேசும் மாநில இளைஞர்களுக்கு மட்டும் சாதகமானதாக இருக்கிறது என்றும் பிற மாநில மொழிகளிலும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் எழுந்தது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். திமுக இளைஞரணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மாநில மொழிகளில் தேர்வு
இந்நிலையில் சிஏபிஎஃப் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழியுடன் இணைந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முயற்சியால், உள்ளூர் இளைஞர்கள் சிஏபிஎஃப் தேர்வில் பங்கேற்பதற்கும் பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கில மொழிகளுடன் கூடுதலாக 13 மாநில மொழிகளில் ஜனவரி 1 2024 முதல் தேர்வு நடத்தப்படும். இந்த முடிவின் விளைவுகளாக லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் தாய்மொழி, பிராந்திய மொழியில் தேர்வை எழுத முடிவதோடு, அவர்களுக்கான தேர்வு எழுதும் வாய்ப்பும் அதிகரிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் வரவேற்பு
சிஏபிஎஃப் தேர்வு தமிழில் நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “நான் எழுதிய கடிதத்தின் விளைவாக மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளிலும் சிஏபிஎஃப் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் மற்றும் அனைத்து யூனியன் அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிஏபிஎஃப் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஏப்ரல் 17 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிஏபிஎஃப் தேர்வுகள் அனைத்தும் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 1 2024 முதல் மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிஏபிஎஃப் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடைபெறவுள்ளது.
மோனிஷா
“இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது“: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்!
