திருச்சியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் மைக் கோளாறு காரணமாக தவெக தலைவர் விஜய் பேசுவது புரியாமல் போனது.
திருச்சி மரக்கடை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பேசி வருகிறார்.
அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விஜய் கையில் இருந்த மைக்கில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் என்ன பேசுகிறார் என்று கூட்டத்தில் இருந்தவர்களுக்கு புரியாததால், கூச்சலிட்டனர்.
“மைக்கை மாற்றிவிட்டார்கள்… அண்ணா முன்பு வைத்திருந்த மைக்கே நன்றாக கேட்டது” என தொண்டர்கள் சத்தம் போட்டனர்.
விஜய் பேசும் இடத்தில் சுற்றி நிற்கும் தொண்டர்களின் ஆரவாரம் , மைக் கோளாறு ஆகிய காரணங்களால் கூட்டத்தில் இருந்தவர்களால் விஜய் பேசுவதை கேட்க முடியவில்லை.
ஊடகங்கள் வாயிலாகயும் நேரலை மூலமும் விஜய் பேசுவதைக் கேட்கக் காத்திருந்தவர்களுக்கும், அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல், வெறும் சத்தம் மட்டும் கேட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதலில் ஒரு மைக்கில் விஜய் பேசிக் கொண்டிருந்தார். பிறகு வேறொரு மைக்கில் பேசத் தொடங்கியபோது வாகனத்திலிருந்த ஸ்பீக்கர்கள் வேலை செய்யாமல் போனது. இதனால் விஜய் பேசுவது அங்கிருந்தவர்களுக்கும், நேரலையில் பார்த்தவர்களுக்கும் கேட்காததால் அவர் என்ன பேசப்போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்..
