தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12- ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவில் குறுவை சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை.
உரிய நீரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகா மறுத்து வருகிறது.
இந்நிலையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் விடுவிப்பதை கர்நாடக உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.
ஆனால் இன்று (ஜூலை 12) தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று தெரிவித்துள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “இம்முறை இயல்பான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்ட போதும், இதுவரை 28 சதவீத நீர்வரத்து பற்றாக்குறை உள்ளது. இதுதொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு முன் எங்களின் நிலைபாட்டை தெரிவித்திருந்தோம்.
ஜூலை இறுதி வரை எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். இருப்பினும் 1 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இதுகுறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.
கர்நாடகாவின் தண்ணீர் பிரச்னையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜூலை 14ஆம் தேதி) நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “
காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
குர்தாவில் ஜான்சீனா… பட்டுவேட்டியில் ரஜினி : அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபலங்கள்!
ஸ்மிருதி இரானியை இழிவாக பேசாதீர்கள் : ராகுல் காந்தி வேண்டுகோள்!