மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனவும், மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள் நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்குமாறும், அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்யுமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 27) விசாரணைக்கு வந்தபோது, மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
“குறைவான வாக்குகள் பெற்றதால் கடந்த 2010 முதல் மதிமுக தேர்தல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சின்னத்தை கேட்க குறைந்தது இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் மதிமுக போட்டியிட வேண்டும். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் சின்னம் கேட்க உரிமை உள்ளது” என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்ற நீதிபதிகள், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைவதால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
முன்னதாக இன்று (மார்ச் 27) திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, “பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு சின்னங்களை நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சௌமியாவுக்காக, ’இடைத் தேர்தல்’ பாணியில் தர்மபுரியில் குவிந்த பாமக நிர்வாகிகள்: பாஜக ஷாக்!