கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் உள்ளிட்டோரை தாக்கிய இளைஞரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா போதையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், அதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
கஞ்சா புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தமிழக அரசும், காவல் துறையும் கூறுகின்றன. ஆனால், தினசரி கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. இன்று கூட 1000 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டதாக தஞ்சாவூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சாவால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப தமிழகத்தில் அடுத்தடுத்து குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன.
அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர்கள் செய்த காரியம் நெஞ்சை பதறவைக்கிறது.
என்ன நடந்தது?
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் ரயில்வே மேம்பாலம் அருகே TN32N4026 என்ற அரசு பேருந்து கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி இன்று (செப்டம்பர் 9) காலை வந்து கொண்டிருந்தது. வழியில் பழமலைநாதர் நகரை சேர்ந்த சிவா என்கிற விக்னேஷ்(20), கந்தவேல்(21), பாலாஜி(21) ஆகிய மூன்று பேர் ஏறினர்.
கஞ்சா போதையில் இருந்த இந்த மூன்று இளைஞர்களும் பயணிகளிடம் தகராறு செய்ததுடன், சின்னசேலத்தைச் சேர்ந்த ஓட்டுநரான கணேசன்(58) மீது தாக்குதல் நடத்தினர். தாங்கள் மறைத்து வைத்திருந்த பாட்டிலை கொண்டு தாக்கியதில் ஓட்டுநர் கணேசன், தலையில் படுகாயம் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 13 தையல்கள் போடப்பட்டு உள்நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக விருத்தாசலம் போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்தில் ஏறி ரகளை செய்வதற்கு முன்னதாகவே அதிகாலை வேளையில் போதையில் பலரை தாக்கிவிட்டு வந்தது தெரியவந்தது.
பழமலைநாதர் நகர் ரைஸ் மில் அருகே அதிகாலை 4 மணிக்கு தூங்கி கொண்டிருந்த கார்த்திக்(25) என்ற இளைஞரை இரும்பு கம்பி, பாட்டிலால் தலையில் தாக்கி உள்ளனர்.
அதிகாலை 05.30 மணியளவில் விருத்தாசலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள டீ கடையில் நின்றுகொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி ஆகியோரையும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கார்த்திக்கிற்கு தலையில் 35 தையலும், ராஜேந்திரனுக்கு தலையில் 6 தையலும், சுந்தரமூர்த்திக்கு நெற்றியில் 2 தையலும் போடப்பட்டுள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள் மற்றவர்களை தாக்கும்போது அதை வீடியோ எடுத்து கந்தவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒருவரை இந்த மூன்று பேரும், கத்தி, கடப்பாறையால் தாக்குகின்றனர். இதில் வேண்டாம்… அடிக்காதீங்க என்று அந்த நபர் காலில் விழுந்து கெஞ்சுகிறார். எனினும் விடாமல் தாக்கியதில் அவரது முகமே தெரியாத அளவுக்கு ரத்தம் கொட்டுக்கிறது. கட்டியிருந்த லுங்கி, சட்டை முழுவதும் நனைந்து ரத்தம் சொட்டுகிறது. அந்த அறை முழுவதும் ரத்தம் தெறித்து கிடக்கிறது.
கொஞ்சம் கூட ஈவு இறக்கம் இல்லாமல் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருப்பது அந்த வீடியோ மூலம் தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரான பழமலை நாதன் நகரைச் சேர்ந்த கார்த்திக் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், குற்ற எண்.543/25, சட்டப்பிரிவு 329 (3) (அத்துமீறுதல்), 296 (b) (பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்ளுதல்), 118(1) (வெட்டுதல் அல்லது ஆபத்தான ஆயுதங்களை கொண்டு தாக்குதல்), பி.என்.எஸ் 109 – கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான சுந்தரமூர்த்தி, அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன் அளித்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து குற்றம்புரிந்த சிவா என்கிற விக்னேஷ்(20), கந்தவேல்(21), பாலாஜி(21) ஆகிய மூன்று பேரையும் போலீசார் தேடினர்.
இந்த தேடுதல் வேட்டையில் விருத்தாசலம் பெரிய கண்டியாங்குப்பம் ரயில்வே கேட் அருகே உள்ள முந்திரி தோப்பில் இவர்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சந்துரு, தலைமை காவலர்கள் வீரமணி, வேல்முருகன் ஆகியோர் அந்த முந்திரி தோப்புக்கு சென்று மூன்று பேரையும் கைது செய்ய முற்பட்டனர்.
அப்போது தப்பியோட முயன்றதால் போலீசார் கந்தவேலை சுட்டு பிடித்தனர்.
இதுதொடர்பாக விருத்தாசலம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “இந்த மூன்று பேரையும் கைது செய்ய முற்பட்ட போது கந்தவேல் தனது கையில் வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் வேல்முருகனின் இடது முழங்கையிலும், மற்றொரு காவலர் வீரமணியின் இடது தோல்பட்டை அருகிலும் வெட்டினார்.
அதன்பின்னரும் தாக்க முற்பட்டதால் தற்காப்பிற்காக கந்தவேலின் வலது முழங்காலில் உதவி ஆய்வாளர் சந்துரு துப்பாக்கியால் சுட்டார். எனினும் மீண்டும் தப்பியோடி கீழே விழுந்ததில் கந்தவேலுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மற்றொரு நபரான சிவா அங்கிருந்து தப்பியோட முயன்றபோது அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து கால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்றாவது நபரான பாலாஜி தப்பியோடிவிட்டார்.
தற்போது கந்தவேல் மற்றும் சிவா இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த போலீசாரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் கஞ்சா போதையில்தான் இன்று காலையில் குற்றச்செயல்களின் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.
போலீசாரின் விசாரணையில் கந்தவேல் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், கோயம்பேடு சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், ராணிபேட்டை மாவட்டம், ஆவலூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பதும், சிவா என்கிற விக்னேஷ் மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
வெறும் 20, 21 வயதில் இத்தனை வழக்குகளா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது.
இந்தநிலையில் இளைஞர்களின் நலன் கருதியும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
