வெறுங்காலில் நடப்பது உடல் நலனுக்கு நன்மை பயக்குமா? பயக்காதா? என்பது குறித்த கருத்தில், புகழ்பெற்ற கல்லீரல் மருத்துவருக்கும், ஸோஹோ நிர்வாகி ஸ்ரீதர் வேம்புவுக்கும் இடையே சமூக வலைதளத்தில் மோதல் வலுத்துள்ளது.
அவ்வப்போது சமூகத்துக்கும், உடல் நலனுக்கும் பல நல்ல பயனுள்ள தகவல்களை ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டு வருவார். அவரை பின்தொடர்வோர், அவரது கருத்துகளையும் அதிகம் விரும்பி பின்பற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், வெறுங்காலுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஸோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சில ஆண்டு காலமாக, தான் வெறுங்காலில் நடக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபேரி கிராமத்தில், தனது பண்ணை நிலத்தில் வெறுங்காலில் நடப்பதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
மற்றவர்களும் இதுபோல, வெறுங்காலில் நடக்க பழகலாம் என்றும், இது பூமிக்கும், மனிதர்களுக்கும் ஒரு நேரடியான இணைப்பை ஏற்படுத்தி, உடல் நலனுக்கு பல்வேறு பயன்களை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், கல்லீரல் மருத்துவர் என சமூக ஊடகங்களில் அறியப்படும் டாக்டர் பிலிப் இதை ஏற்காமல் எதிர்க்கருத்தைப் பதிவிட, சமூக வலைதளத்திலேயே இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
மனித மின் அதிர்வெண்களுக்கும் பூமிக்கும் இடையே ஒரு தொடர்பை முன்வைக்கும் ‘கிரவுண்டிங்’ யோசனையை பிலிப் மறுத்து, இது நிரூபிக்கப்படாத கருத்து என்று கூறியதோடு, கால் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும், பல உடல்நலப் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அறிவியல்பூர்வமாக எந்த பலனும் மனிதனுக்கு ஏற்படாது. இது தொடர்பான பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பயனற்றதாகவே முடிந்துள்ளது என்றும் ஶ்ரீதர் வேம்புவின் சமூகப் பதிவை மேற்கோள்காட்டி பதிவிட்டிருந்தார்.
மேலும், ‘இந்திய சுகாதாரத்துறையின் மிகப்பெரிய சவால், விழிப்புணர்வு சிந்தனை, திறன்களை மக்களுக்கு ஏற்படுத்திவதில்கூட இல்லை. ஆனால், வேம்பு போன்ற உடல்நலம் தொடர்பான கல்வியறிவு இல்லாத பூமர் மாமாக்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை சாமானிய மக்களுக்கு கற்றுக்கொடுப்பதில்தான் உள்ளது’ என்று பிலிப் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பதிலுக்கு, வேம்பு கடுமையான பதிலடியைக் கொடுத்திருந்தார். ‘திமிர்பிடித்த மருத்துவர்களிடமிருந்து விலகி இருங்கள்’ என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்தி, “எனக்குத் தெரிந்த சிறந்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அடக்கமானவர்கள், ஏனென்றால் மனித உடல் எவ்வளவு சிக்கலானது மற்றும் எவ்வளவு சவாலானது என்பது அவர்களுக்குத் தெரியும்.
உடலும் மனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதும் அவர்களுக்குத் தெரியும்” என்று கூறி வார்த்தைப் போருக்கு எண்ணெய் ஊற்றியிருந்தார். இவ்வாறு சமூக ஊடகத்தில் இவர்களது மோதல் தொடர்ந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கை முட்டிகளில் கருமையைப் போக்க உதவும் மூன்று ஸ்டெப்ஸ்!
டாப் 10 நியூஸ் : அமெரிக்கா செல்லும் முதல்வர் முதல் பாரிஸ் பாராலிம்பிக் துவக்கம் வரை!
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் குக்கீஸ்
“அண்ணாமலையின் பொய்க்கால் ஆட்டத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்”…. விளாசிய ஆர்.பி.உதயகுமார்!