‘பல் போனால் சொல் போச்சு’ என்பார்கள். இது முகத்தின் அழகையும் பாதிக்கும் என்பதால் பற்களைப் பேணிக்காப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
நமது பற்களில் ஏற்படும் மிகப் பொதுவான பிரச்சினை பல் சொத்தை. ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் பிரஷ் செய்பவர்களுக்கு கூட பல் சொத்தை ஏற்படத்தான் செய்கிறது. பற்களில் சொத்தை ஏற்பட்டவர்கள் அனைவரும் அதை அகற்றிவிட வேண்டுமா? முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“பல்லில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல்புற அடுக்கின் பெயர் எனாமல். அதுதான் பல்லின் மிகக் கடினமான பகுதியும்கூட. அந்தப் பகுதியில் பல் சொத்தை ஏற்படும்போது பற்கூச்சம், வலி இருக்காது. சிறிய கறுப்பு கோடு போலவோ அல்லது புள்ளி போலவோ தோன்றும்.
பெரும்பாலானவர்கள் அந்த அறிகுறியை அலட்சியம் செய்து விடுவார்கள். அந்த நேரத்திலேயே சிகிச்சை செய்துவிட்டால் சொத்தையை அகற்றிவிட்டு, அந்த இடத்தை அடைத்துவிடலாம். அதன்பிறகு வாய் சுகாதாரத்தை சரியாகப் பேணி வந்தால் மீண்டும் அந்தப் பல்லில் பாதிப்பு ஏற்படாது.
பல்லின் இரண்டாம் அடுக்கு ‘டென்டின்’ (Dentin). அந்த இடத்தில் சில நரம்புகள் முடிவடையும். எனவே, பல் சொத்தை இரண்டாம் அடுக்குப் பகுதிக்குப் பரவும்போது பற்கூச்சம் ஏற்படும். ஆனால், பெரும்பாலும் வலி இருக்காது.
குளிர்ச்சியாகவோ, சூடாகவோ, இனிப்பாகவோ ஏதாவது சாப்பிடும்போது வலி போன்ற உணர்வு ஏற்படும். சாப்பிட்டு முடித்தவுடன் அந்த வலி போய்விடும். இதுவும் வலி அல்ல, பற்கூச்சம்தான். அதற்குப் பிறகும் வலி நீடித்தால் மூன்றாவது அடுக்கான ‘பல்ப்’ (Pulp) வரை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
அங்குதான் பற்களின் முக்கிய நரம்புகள், ரத்தக்குழாய்கள் உள்ளன. அந்தப் பகுதி வரை பற்சொத்தை பாதிப்பை ஏற்படுத்தும்போது வலி ஏற்படும். இதில் முதல் அடுக்கு, இரண்டாம் அடுக்கில் பாதிப்பு ஏற்பட்டால் சொத்தையை அகற்றிவிட்டு பல்லை அடைத்துவிடுவார்கள். ஆனால், மூன்றாவது அடுக்கு வரை பாதிக்கப்பட்டுவிட்டது என்றால் இரண்டு வகை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஒன்று பல்லை அகற்றுவது, இரண்டாவது ரூட் கனால் சிகிச்சை செய்வது.
பல் எடுக்க வேண்டும் என்று சொன்னாலே பலருக்கும் பயம் வந்துவிடும். வாயில் ஊசி போட்டு, பிறகு பல்லை எடுக்கும் சிகிச்சை என்றாலே பயம் வருவது இயல்புதான். ஆனால், தொடர்பில்லாத வேறு பயங்கள் எல்லாம் இருக்கின்றன.
குறிப்பாக மேல் வரிசைப் பல் எடுத்தால் மூளையில் பாதிப்பு ஏற்படும், முக அழகை பாதிக்கும் என்றெல்லாம் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை பல்லின் அமைப்பு (Structure) நன்றாக இருக்கிறது என்றால் ரூட் கனால் சிகிச்சை செய்து, அந்தப் பல்லின் மேல் பகுதியில் தொப்பி போன்ற அமைப்பை (பற்களின் நிறத்திலேயே) பொருத்த முடியும். இதனால் இயற்கையான பல்லை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஒரு பல் மருத்துவருக்கு பல் அகற்றுவது என்பது மிகவும் பொதுவான, இயல்பான சிகிச்சை. அவர்களுக்கு எளிதான வேலையும்கூட. பாதிக்கப்பட்ட பல்லை அகற்றிவிட்டு, உலகத்தர சிகிச்சை அளித்து உயர்தர செயற்கைப் பற்கள் பொருத்தினால்கூட, அது இயற்கையான பற்களுக்கு நிகராகாது.
ரூட் கனால் சிகிச்சை செய்யும்போது அந்தப் பல், பல்லின் வேர்ப்பகுதி அப்படியே தக்கவைக்கப்படும். பல் சொத்தையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் நரம்புகள், ரத்தக்குழாய்களை மட்டும் அகற்றிவிட்டு அந்த இடத்தை அடைத்து, அதற்கு மேல் ‘கேப்’ (Cap) பொருத்தப்படும்.
இதனால் பல்லின் இயற்கையான தோற்றமும் முகத்தின் அழகும் அப்படியே நீடிக்கும். ரூட் கனால் சிகிச்சையுடன் செயற்கைப் பல் பொருத்தும் (Implant) சிகிச்சையை ஒப்பிட்டுப் பார்த்தால், செயற்கைப் பல் பொருத்தும் சிகிச்சை தோல்வியடைய ஒரு சதவிகிதம் வாய்ப்பும் உள்ளது. அதனால் முடிந்தவரை இயற்கையான பல்லைக் காப்பாற்றுவதற்குத்தான் முயற்சி செய்வோம்… முக அழகைக் காப்போம்”என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – நான்ஸ்டிக் பாத்திரங்கள்… எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!
மோடியை எதிர்த்து 2 முறை என்.டி.ஏ-விலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு; மோடி 3.0 நிலைக்குமா?
கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? : விஜய்சேதுபதி விளக்கம்!