பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பொங்கல் பண்டியை முன்னிட்டு 2கோடிக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
நாளை முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை இதற்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.
இதனிடையே தஞ்சாவூர் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 2017ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் பொருட்கள் தமிழ்நாடு விவசாயிகளிடம் இருந்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொங்கல் பரிசை வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று(ஜனவரி 2) நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயக்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொங்கல் பரிசான 1000ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசுத் தரப்பில், “குறுகிய காலமே இருப்பதால் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துவது என்பது கடினம். அதோடு வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச பண இருப்பு இருக்க வேண்டும்.
எனவே பொங்கல் பரிசு செலுத்தும் பட்சத்தில் மினிமம் பேலன்ஸ் என்று கூறி மக்களின் கணக்கிலிருந்து அவற்றை வங்கிகள் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அதோடு மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால் பணம் செலுத்துவதில் நிர்வாக பிரச்சினை ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது போல ரேஷன் கார்டில் வங்கிக் கணக்கையும் இணைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு அரசு தரப்பில், “தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்கப்படும்” என்று வாதிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
பிரியா