எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும் சிலர், வாரத்தில் ஒருநாளான இன்று வீட்டில்தானே இருக்கிறோம் என்று பழங்கள் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி வெறும் பழங்களை மட்டுமே பிரதான உணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதா… இதனால் எடைக் குறையுமா? fruits to lose weight
“அரிசி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியைவிடப் பழங்கள் பரவாயில்லை. ஆனால் நாள் முழுக்க நமக்குத் தேவையான கலோரிகள் பழங்கள் மூலம் கிடைக்க வேண்டும் என்றால் 3-4 கிலோ சாப்பிட வேண்டும். இந்த அளவுக்குப் பழங்கள் சாப்பிடும்போது, அதில் உள்ள பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் சர்க்கரைகள் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்சினைகளை அதிகப்படுத்த வாய்ப்புண்டு.
சர்க்கரை, உடல் பருமன் போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் வேண்டுமானால் இப்படி எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாட்கள் முயற்சி செய்யலாம். மற்றவர்கள் மற்ற உணவுகளுடன் சேர்த்து மிதமான அளவு பழங்களை எடுத்துக்கொள்வதே நல்லது.
பழங்களை மட்டுமே நம்பியிருப்பது பல்வேறு உடல்நல சவால்களுக்கு வழிவகுக்கும். பழங்கள் கொண்ட உணவில் புரதம், கொழுப்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம். ஹார்மோன் உற்பத்தி உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு கொழுப்புகள் அவசியமாகிறது.
இந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் இருந்தால் தசை இழப்பு, சோர்வு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும்.
நம் உணவில் பழங்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும். ஆனால், உணவில் பழங்களும் ஒரு பகுதியாக இருக்கலாமே தவிர, பழங்களே பிரதான உணவாக இருக்கக் கூடாது.
இன்னும் சொல்லப் போனால், உணவுடன் பழங்களைச் சாப்பிடுவதையும் உணவாகவே பழங்களைச் சாப்பிடுவதையும்விட, இரு உணவு இடைவேளைகளுக்கு நடுவில் சாப்பிடுவதுதான் சரியானது” என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். fruits to lose weight