தடுக்கப்படுமா காவல் சித்திரவதைகள்?

Published On:

| By Minnambalam Desk

முனைவர். பாலமுருகன் பழனியாண்டி 

தமிழ்நாடு பண்பட்ட கலாச்சாரம் மற்றும் சமூக நீதிக்காக போராடும் மாநிலமாக அறியப்பட்டாலும், காவல் நிலையங்களில் நடைபெறும் கொடுமைச் சம்பவங்கள் தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளன.

ADVERTISEMENT

சமீபத்தில் காவல் துறை சித்திரவதையால் கொடூரமாக கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது முதல் நிகழ்வு அல்ல; கடைசியான நிகழ்வும் அல்ல. தற்போது மாரிமுத்து என்பவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் உள்ள வனத்துறையின் அலுவலகக் கழிவறையில் தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக தமிழகத்தில் இது போன்ற காவல் சித்திரவதையால் ஏற்படக்கூடிய மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.   

தூத்துக்குடியில் 2019ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டினால் 16பேர் காவல் துறையினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், சாத்தன்குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரும் காவல் துறையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டபோது, அப்போது எதிர்கட்சியாக இருந்த தி.மு.க கொதித்தெழுந்து போராடியது. அத்துடன், குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, பதவிக்கு வந்த தி.மு.க, தற்போதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ADVERTISEMENT

 துப்பாக்கிச் சூடு குறித்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கையை கிடப்பில் போட்டு தற்போதுவரை மௌனம் சாதித்து வருகிறது. சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே இருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். 

இந்த அரசு பதவியேற்ற பிறகு, 22 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 31 பேர் காவல் துறையால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் மாவுகட்டுப் போடப்பட்டவர்கள், மிதமான மற்றும் கடுமையான தாக்குதலுக்குள்ளானவர்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், பல சித்திரவதைகள் வெளியுலகிற்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை. 

ADVERTISEMENT

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பல்வீர் சிங் ஐ.பி.எஸ் சுமார் 20க்கும் மேற்பட்ட அப்பாவிகளை, விசாரணை என்ற பெயரில் பல்லை உடைத்து சித்திரவதை செய்தார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதா விசாரித்து முழுமையான அறிக்கையை அரசிற்கு தாக்கல் செய்துவிட்டார். அவரின் அறிக்கை இன்றுவரை அரசால் வெளியிடப்படவில்லை. நடந்த உண்மைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லியும், அவர்மீது நடவடிக்கை எடுக்காமல், பற்களை உடைத்தவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது இந்த அரசு.   

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளையாபதி கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட செய்தி அறிந்த, மாநில மனித உரிமை ஆணைய காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்து, சித்திரவதை நடத்தப்பட்டது உண்மை என்று அறிக்கை கொடுத்ததற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சித்திரவதை செய்த உதய குமார் ஐபிஎஸ் மற்றும் மற்ற அலுவலர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. இதுபோன்று பல்வேறு உதாரணங்களை எடுத்துக் கூற முடியும்.

ஆகவே எந்த அரசாக இருந்தாலும் காவல் சித்திரவதையை தடுப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கோ எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த வழக்கில் அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அதேபோல கொல்லப்பட்ட மற்ற 30 பேருக்கு என்ன மாதிரியான இழப்பீடுகள் வழங்கப்பட்டன என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை. ஊடகங்களில் செய்திகள் பெரிதாக வந்ததாலும், இச்செய்தி அனைவரையும் சென்று அடைந்ததாலும் இந்த இழப்பீடுகள் தரப்பட்டன.  இல்லையெனில் இந்த வழக்கும் மூடி மறைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் வெட்கமே இல்லாமல், எதிர்க்கட்சியினர் புனிதர்கள் போல் ஆளும் அரசை குறை கூறுவதும், ஆளும் அரசு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது போல் நடிப்பதும் வாடிக்கையாகேவே இருந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதை மக்கள் வழக்கம் போல் மறந்து விட்டு தங்கள் பணியைத் தொடருவார்கள். அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக இதை வைத்து அரசியல் செய்வதும் அடுத்த பிரச்சனை வந்தவுடன், இதை மறந்துவிட்டு, வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதும் புதிதான ஒன்று அல்ல. இந்தப் பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், காவல் சித்திரவதைக்கான காரணங்களை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்கதையாகவே இருக்கும்.  

காரணங்கள் 

தமிழ்நாட்டில் காவல்துறை சித்திரவதைகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமான காரணங்களை கீழ்க்கண்ட ஐந்து வகையாக பிரிக்கலாம்.  

1. பொறுப்பற்ற தன்மை மற்றும் தண்டனையின்மை (Impunity and Lack of Accountability):

  • குறைந்த தண்டனை விகிதம்: காவல்துறை சித்திரவதை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது பல நேரங்களில் வழக்குகள் பதியப்படுவதில்லை. ஒருவேளை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தண்டிக்கப்படுவதும் மிகக் குறைவு. பல சமயங்களில், அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதோடு நின்றுவிடுகிறது. இது காவலர்களுக்கு தைரியத்தை அளிக்கிறது.
  • அரசியல் தலையீடு: எந்த அரசாக இருந்தாலும், தங்களை விமர்சிப்பவர்களையும், அரசியல் எதிரிகளையும் பழிவாங்க / அடக்குவதற்காக காவல்துறையை பயன்படுத்தும் நிலை இருப்பதால், சித்திரவதையில் ஈடுபடும் காவலர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. அரசியல் தலைவர்கள் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தவும், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள். மக்களின் பாதுகாவலர்களாக செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் விமர்சனங்கள் உள்ளன. இது, தவறு செய்யும் காவலர்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தடுக்கிறது. அப்படியே எடுத்தாலும் கிளைகள் மட்டுமே வெட்டப்படுகின்றன. உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தற்போது நடந்துள்ள சம்பவத்தில் கூட கீழ் மட்டத்தில் உள்ள அலுவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது எந்த வழக்கும் இல்லை. கீழ் நிலை அலுவலர்கள் மட்டுமே பலி கடா ஆக்கப்படுகிறார்கள்.
  • சாட்சியங்களை மாற்றுதல்: காவல் நிலையத்தில் நடக்கும் சித்திரவதைகளுக்கு நேரடி சாட்சிகள் இல்லாததால், காவலர்கள் தங்களுக்குச் சாதகமான மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை உருவாக்குகின்றனர். “குற்றவாளி கழிப்பறையில் வழுக்கி விழுவது மற்றும் தப்பியோடும் போது கீழே விழுந்து கைகால் முறிவது போன்ற அபத்தமான காரணங்கள் கூட நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போது அஜித்குமார் கொலையிலும் அவர் வலிப்பு நோயால் இறந்தார் என்று  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது சிறந்த உதாரணம். 
  • உயர் அதிகாரிகளின் அனுமதி: பல சமயங்களில், சித்திரவதை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் முழு அனுமதியுடனே நடப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காவல் துறை தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவும் பொதுமக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கவும் சித்திரவதையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

2. சட்டத்தின் ஓட்டைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள்:

  • சித்திரவதைக்கென தனிச் சட்டம் இல்லாமை: இந்தியாவில் சித்திரவதையைத் தடுப்பதற்கான ஒரு தனித்த மற்றும் விரிவான சட்டம் இல்லாதது ஒரு பெரிய குறைபாடு. ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை இந்தியா இன்னும் முழுமையாக ஏற்புறுதி (ratify) செய்யவில்லை. இதனால், சித்திரவதைக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர முடிவதில்லை.
  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் சிக்கல்: காவல்துறையினருக்கு எதிராக FIR பதிவு செய்வது மிகவும் கடினம். பொதுமக்கள், மற்றும் சாட்சிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் அல்லது புகார்களைப் பதிவு செய்யத் தயங்குகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர் குடும்பத்தினரை உள்ளூரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களை அல்லது ரவுடிகள் மூலம் மிரட்டி சமரசம் செய்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.
  • விசாரணையில் குறைபாடுகள்: நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், காவலில் மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் வெளிப்படையானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இருப்பதில்லை. விசாரணை அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படா வண்ணம், காவல் துறையினரை பாதுகாக்க முயல்வதை கண்கூடாக காண முடியும்.
  • தடயவியல் சவால்கள்: உடற்கூறு ஆய்வுகள் சில சமயங்களில் காவல்துறையின் கூற்றுக்கு ஆதரவாக அமைவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அஜித்குமார் வழக்கிலும், உடற்கூராய்விற்கு முன்பாக, உடலை ஸ்கேன் செய்வது மற்றும் X-ray எடுப்பதும் செய்யப்படவில்லை. இது உடலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுகள் மற்றும் உட் காயங்களுக்கான ஆதாரமாக பயன்படும். 

3. காவல் துறையின் அழுத்தங்கள் மற்றும் மனநிலை:

  • வேகமான நீதி வழங்க அழுத்தம்: குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற அரசியல் மற்றும் சமூக அழுத்தம் காவல்துறையினர் மீது விழுகிறது. இதனால், குறுக்குவழிகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கிறது.
  • மனித உரிமை விழிப்புணர்வின்மை: காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு இல்லாதது. குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களும் அடிப்படை மனித உரிமைகளைக் கொண்டவர்கள் என்ற புரிதல் குறைவாக உள்ளது.
  • சமூகத்தின் பொதுப்புத்தி : சித்திரவதையின் மூலம் “வேகமான நீதி” கிடைக்கிறது என்ற பொதுப்புத்தியை திட்டமிட்டு அரசு உருவாக்குவது, சமூகத்தின் மத்தியில் காவலர்கள் செய்வது சரியென ஆதரிக்கத் தோன்றுகிறது. அதனால் தான் வழுக்கி விழுந்து கைகால் உடையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் பொங்கி எழுவதில்லை.   
  • பணியில் உள்ள மன அழுத்தம்: மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை இல்லாதது, பணிச்சுமை, நீண்டநேர வேலை போன்ற காரணங்களால் காவலர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதுவும் சில சமயங்களில் வன்முறைக்கு வழிவகுக்கும்.

4. கண்காணிப்பு மற்றும் சீர்திருத்தங்கள் இல்லாதது

  • CCTV கேமராக்களின் நிலை: காவல் நிலையங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும், அவை சரியாக செயல்படுவதில்லை அல்லது பதிவுகள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை கண்காணிக்க வேண்டிய மாநில மேற்பார்வைக் குழு (State Oversight Committee) மற்றும் மாவட்ட மேற்பார்வைக் குழு (District Oversight Committee) தமிழகத்தில் எங்குமே செயல்படவில்லை.  
  • சுதந்திரமான விசாரணை அமைப்புகள் இல்லாமை: காவல்துறையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஒரு சுதந்திரமான மற்றும் சக்திவாய்ந்த அமைப்பு இல்லாதது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகிக்கிறது. தற்போதுள்ள அமைப்புகள் பெரும்பாலும் காவல்துறைக்குள்ளேயே இருப்பதால், அவை பாரபட்சமின்றி செயல்படுவதில்லை.
  • நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமை: சித்திரவதையைத் தடுப்பதற்கான பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் நடைமுறையில் மதிக்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்படுவதில்லை.  நீதி மன்றங்களும் கண்காணிப்பதில்லை. 
  • நடைமுறைப்படுத்தப்படாத SOP : ஏற்கனவே காவல்துறையில் நிலையான இயக்க நடைமுறைகள் (SoP) உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவில் மட்டுமே உள்ளன.  செயல்படுத்தப்படுவதில்லை; முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.
  • தேசிய / மாநில மனித உரிமை ஆணையங்களின் பாராமுகம்: மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேசிய / மாநில மனித உரிமை ஆணையங்கள் பெரும்பாலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. உறுப்பினர்கள் அனைவரும் அரசால் நியமிக்கப்படுபவர்களாக இருப்பதால், அரசுக்கு எதிராக எந்த செயல்பாட்டையும் செய்வதில்லை. இவர்கள் சுதந்திரமான, தனிப்பட்ட அமைப்பாக செயல்படுவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த தகவலின் படி, 2017 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை காவல்துறையினரால் 17393 பேர் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது. இது மனித உரிமை ஆணையங்களின் செயல்பாட்டின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

5. சமூகப் பொருளாதார பாகுபாடுகள்:

  • விளிம்புநிலை மக்களின் பாதிப்பு: பெரும்பாலும், ஏழைகள், பட்டியலினத்தவர் மற்றும் மற்ற விளிம்புநிலை சமூகத்தினர் காவல்துறை சித்திரவதைக்கு எளிதில் இலக்காவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளைக் காட்டுகிறது. இவர்களுக்கு ஏற்படும் சித்திரவதைகள் பொதுவெளிக்கு வராமல் மறைக்கப்படுகிறது.  

இந்தக் காரணங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டில் காவல்துறை சித்திரவதைகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கான ஒரு சிக்கலான சூழலை உருவாக்குகின்றன.

சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள்:

  • சித்திரவதையை குற்றமாக்கும் தனிச் சட்டம்: தற்போது இந்தியாவில் சித்திரவதையைத் தனிப்பட்ட குற்றமாக வரையறுக்கும் ஒரு விரிவான சட்டம் இல்லை. சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் (UNCAT) இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், அதை முழுமையாக ஏற்புறுதி (ratify) செய்யவில்லை. இதனால், சித்திரவதைச் சம்பவங்கள் பெரும்பாலும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC / BNS) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC / BNSS) ஆகியவற்றின் கீழ், “கடுமையான காயம் ஏற்படுத்துதல்” அல்லது “தாக்குதல்” போன்ற பிரிவுகளில் பதிவு செய்யப்படுகின்றன. இது சித்திரவதையின் முழு தீவிரத்தையும், நோக்கத்தையும் உள்ளடக்குவதில்லை. எனவே, சித்திரவதையை தெளிவாக வரையறுத்து, அதற்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் ஒரு தனிச் சட்டம் இயற்றப்படுவது மிகவும் அவசியம். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெறுவதற்கும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதற்கும் ஒரு உறுதியான சட்டக் கட்டமைப்பை வழங்கும்.
  • காவல்துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்க சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பு  பிரகாஷ் சிங் வழக்கில், நீதிமன்றம், மாநில காவல் புகார் பணிக்குழு (State Police Complaints Authority) ஒய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி அவர்கள் தலைமையிலும், மாவட்ட காவல் புகார் பணிக்குழு (District Police Complaints Authority) ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அவர்கள் தலைமையிலும் அமைக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளது. காவல்துறைக்கு எதிரான புகார்களை, குறிப்பாக சித்திரவதை அல்லது வன்முறை தொடர்பான புகார்களை, காவல் துறைக்குள்ளேயே விசாரிப்பது பாரபட்சமான முடிவுகளுக்கு வழிவகுக்கும். நீதித்துறை, மனித உரிமை ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் போன்றவர்களை உள்ளடக்கிய, காவல்துறையிலிருந்து முற்றிலும் சுதந்திரமான ஒரு அமைப்பை உருவாக்குவது அவசியம். இந்த அமைப்பு புகார்களை நியாயமான முறையில் விசாரித்து, தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். இது காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
  • காவலர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் நெறிமுறை சார்ந்த பயிற்சி: காவலர்களுக்கு அவர்களின் கடமைகளைச் செய்யும்போது மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விரிவான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சித்திரவதை சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், நெறிமுறையற்றது என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். குற்றவாளிகளைக் கையாள்வதற்கும், விசாரணை செய்வதற்கும் வன்முறையற்ற, சட்டப்பூர்வமான முறைகள் உள்ளன என்பதை அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். இந்த பயிற்சி காவல்துறை பணியாளர்களிடையே மனப்பான்மை மாற்றத்தை கொண்டு வந்து, மனிதநேயமிக்க காவல் துறைக்கு வழிவகுக்கும்.
  • அனைத்து காவல் நிலையங்களிலும், விசாரணை அறைகளிலும் செயல்படும் CCTV கேமராக்கள்: பரம்வீர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டுதலின்படி சிசிடிவிகள் காவல் நிலையங்களில் அமைக்கப்பட வேண்டும். காவல் நிலையங்களில், குறிப்பாக விசாரணை அறைகள், லாக்-அப் பகுதிகள் மற்றும் பொதுவான இடங்களில், செயல்படும் CCTV கேமராக்கள் (Functional CCTV) கட்டாயம் இருக்க வேண்டும். இந்த கேமராக்கள் சித்திரவதையைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய தடையாக செயல்படும். ஏதேனும் சித்திரவதை நிகழ்ந்தால், அது தொடர்பான ஆதாரங்களை பதிவு செய்ய உதவும். இந்த வீடியோ பதிவுகள் 18 மாத காலத்திற்குப் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் தேவைப்படும்போது விசாரணைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். CCTV செயல்படுவதை, இதற்கென அமைக்கப்பட்ட  மாநில / மாவட்ட மேற்பார்வைக் குழு (State / District Oversight Committee) உறுதி செய்ய வேண்டும் 
  • விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை: சித்திரவதை அல்லது காவல் நிலைய வன்முறை தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் உடனடியாகவும், முழுமையாகவும், பக்கச்சார்பின்றியும் விசாரிக்கப்பட வேண்டும். விசாரணையில் எந்தவித தாமதமும் இருக்கக்கூடாது. குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட காவலர்கள் மீது அவர்களின் பதவி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நீதியை நிலைநாட்டுவதோடு, மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையும். மூன்று மாதங்களில் இருந்து அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்
  • சாட்சிகளுக்குப் போதுமான பாதுகாப்பு: காவல் துறைக்கு எதிராக சாட்சியமளிக்கும் நபர்கள் பெரும்பாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். சாட்சிகள் பயமின்றி உண்மையை வெளிப்படுத்த, அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சாட்சி பாதுகாப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவை தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கும்.
  • வெளிப்படைத்தன்மை: காவல் மரணங்கள் மற்றும் காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். காவல் நிலையத்தில் நடக்கும் மரணங்கள், காயங்கள் மற்றும் காவல்துறை முறைகேடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அரசு மற்றும் காவல்துறை வெளிப்படையாக வெளியிட வேண்டும். எந்தெந்த காவலர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இது காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையைப் பெறும்.
  • நீதிமன்ற விசாரணை: கொடுமை தொடர்பான ஒவ்வொரு புகாரும் நீதிமன்றக் கண்காணிப்பில் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். சித்திரவதை அல்லது காவல் துறை வன்முறை தொடர்பான ஒவ்வொரு புகாரும் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும். இது விசாரணையின் நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும். நீதிமன்றம் நேரடியாக தலையிடுவதால், காவல்துறை உள் விசாரணைகளில் ஏற்படும் பாரபட்சத்தைத் தவிர்க்க முடியும்.
  • உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம்: காவல்துறை முறைகேடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். காவல்துறை முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால், தாமதமின்றி சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதோடு, காவல் துறையினரிடையே பொறுப்புக்கூறலை வலியுறுத்தும்.
  • ஆணையங்களின் செயல்பாடு: காவல்துறையினரால் நடைபெறும் சித்திரவதையைத் தடுப்பதில் மனித உரிமைகள் ஆணையங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.  குறைந்த பட்ச நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கைதிகளுக்கான உரிமைகளை எல்லா காவல் நிலையங்களிலும் தகவல் பலகை மூலம் பொதுமக்கள் அறியும்படி வைக்க வலியுறுத்த வேண்டும்.  காவல்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைப் பிரிவு, மனித உரிமை மீறல்களை உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றைக் குறைக்கவும், தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.  தாமாக முன்வந்து  (suo moto) மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்களை விசாரிக்க வேண்டும். அனைத்து சித்திரவதை வழக்குகளிலும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிய ஆணையிடுவதுடன், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.   
  • சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் 2018: காவல் சித்திரவதை வழக்குகளில் சாட்சிகள் மிரட்டப்படுவதால் / பாதுகாப்பு இல்லாததால் சாட்சியம் அளிக்கத் தயங்குகிறார்கள் ஆகவே பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு, சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் 2018 கீழ் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி  ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • மனநல மேம்பாடு: காவல்துறைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான பணிச்சூழல், மன அழுத்தம் மற்றும் உளவியல் சவால்களைக் கையாள, அவர்களுக்கு மனநல மேம்பாட்டுத் திட்டங்கள் அத்தியாவசியமானவை. மனநல ஆலோசகர்கள், உளவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் அடங்கிய பல்துறை நிபுணர் குழுவின் ஆதரவுடன் மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள், மது மற்றும் சூதாட்ட அடிமைத்தனம், ஆக்ரோஷமான போக்குகள் மற்றும் பிற உணர்ச்சி ரீதியான சவால்களை எதிர் கொள்ள காவலர்களுக்கு உதவவும், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பணித்திறனை அதிகரிக்கவும் இவை வழிவகுக்கின்றன.

அஜித்குமார் மரணம், தமிழகத்தில் காவல்துறை சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு காவல் துறையை உருவாக்குவது அரசு, நீதித்துறை, மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இதை உணர்ந்து அரசு உடனடியாக மேற்சொன்ன பரிந்துரைகளை நிறைவேற்றி, காவல் சித்திரவதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட வேண்டும். 

கட்டுரையாளர்:

முனைவர். பாலமுருகன் பழனியாண்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்.

மின்னஞ்சல் : Balaviji2003@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share