– மாடக்கண்ணு
ம.தி.மு.க., தே.மு.தி.க-வில் இருந்து மாவட்டச் செயலாளர்களை இழுக்கும் படலத்தை தொடங்கியிருக்கிறது தி.மு.க. பலம் வாய்ந்த ஜோயலில் (மாநில நிர்வாகி) தொடங்கி யுவராஜ் வரை இழுப்பு நடந்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் விலகலால் ஒரு கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?
வை.கோ. மதிமுக-வை தொடங்கியபோது கோவை கண்ணப்பன், செஞ்சி. ராமச்சந்திரன், ஈரோடு கணேசமூர்த்தி உள்ளிட்ட பவர்ஃபுல் மாவட்டச் செயலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் திமுக-வில் இருந்து விலகி மதிமுக-வில் இணைந்தனர். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வே மகத்தான வெற்றிபெற்றது. மதிமுக, ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை (வைகோ உள்பட)
திமுக-வை பலம்வாய்ந்த கூட்டணியாகக் காட்ட இப்போது மு.க.ஸ்டாலின் தேமுதிக மாவட்டச் செயலாளர்களைக் குறிவைத்து தங்கள் பக்கம் சேர்த்துவருகிறார்.
இவை, திமுக-வுக்கு பலம் சேர்க்குமா? தூத்துக்குடி அதிமுக-வில் சக்திமிகுந்தவராக கருதப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திமுக-வுக்கு அழைத்து வரப்பட்டார். கடந்த தேர்தலில் அவர் மட்டுமே அந்த மாவட்டத்தில் வெற்றி பெற்றார்.
இவர்போலவே, அதிமுக-வில் ஸ்ட்ரீட் பைட்டர்கள் (தெருவில் இறங்கியும் சண்டை போடுபவர்கள்) என்று அழைக்கப்பட்ட சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன், சேகர்பாபு போன்றோர் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றே போனார்கள். இவர்கள். அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்கள். மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களே பலம்வாய்ந்த கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், அவர்களால் கட்சிக்கு என்ன லாபம்? ஒருநாள் தலைப்புச்செய்தி என்பதைத் தவிர, வேறு எதுவும் லாபம் இல்லை என்பதே நிதர்சனம்.
தி.மு.க-வில் சேர்ந்திருக்கும் ம.தி.மு.க, தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் சிலருக்கு இந்த தேர்தலில் தொகுதிகள் கிடைக்கலாம். அவர்களின் வெற்றி வாய்ப்பை அலசுவதற்குமுன் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர்களின் ‘ரேங்க் கார்டை’ பார்க்கலாம்.
ஜெ.அன்பழகன் (சென்னை) எ.வ. வேலு (திருவண்ணாமலை), பெரிய கருப்பன் (சிவகங்கை) சுப.தங்கவேலன் (ராமநாதபுரம்) ஆகிய நான்கு மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கடந்த தேர்தலில் ’பாஸ்’ ஆனார்கள். சக்திவாய்ந்த மாவட்ட ச் செயலாளர்கள் ’பெயில்’. அவர்கள் பட்டியல்: வீரபாண்டி ஆறுமுகம் (சேலம்), பொங்கலூர் பழனிச்சாமி (கோவை), என்,கே,பி,பி ராஜா (ஈரோடு), சாத்தூர் ராமச்சந்திரன் (விருதுநகர்), கருப்பசாமி பாண்டியன் (நெல்லை), கே.என். நேரு (திருச்சி), பொன்முடி (விழுப்புரம்), தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம்).
மேலே குறிப்பிட்ட பெரும் தலைகள் எல்லாம் தங்களது மாவட்டங்களில் பவர்ஃபுல்லாக பவனி வந்தவர்கள். காங்கிரஸ்-பா.ம.க-முஸ்லிம் லீக்-விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தபோதே தோற்றுப் போனார்கள். பா.ம.க- விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து அறுத்துக்கொண்டு சென்றுள்ளநிலையில், திமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் வெற்றி வாய்ப்பே கேள்விக் குறியாகியுள்ளநிலையில், மதிமுக-வின் ஜோயல்கள், தே.மு.தி.க-வின் யுவராஜ்கள் எப்படி வெற்றி பெறமுடியும். எந்தக் கட்சியிலும் சரி, மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்கான ஓர் அடையாளம்! வெறும் அம்பு! ஆணிவேர் அல்ல என்பதே உண்மை.
இன்னும் சொல்லப்போனால், அடுத்த கட்சிகளில் இருந்து மாவட்டச் செயலாளர்களை இழுப்பதற்கு அச்சாரம் போட்டவர் எம்.ஜி.ஆர்தான். 1977ல், எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதலமைச்சர் ஆனார். அந்தத் தேர்தலில் தென் மாவட்டங்களில் வெற்றியை அறுவடை செய்த அதிமுக, வட மாவட்டங்களில் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது.
குறிப்பாக- சென்னை (அந்தத் தேர்தலில் சென்னை மாவட்டம் திமுக-வின் கோட்டையாக வலுப்பெற்றிருந்தது.) திமுக-வின் கோட்டையை உடைக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் சபதம். காய்நகர்த்த ஆரம்பித்தார். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த RT. சீதாபதிக்கு குறிவைக்கப்பட்டது. அவர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அதிமுக-வுக்கு இழுக்கப்பட்டார் ( டி.ஆர். பாலு மாவட்டத்தின் திமுக செயலாளராக ஆக்கப்பட்டார்.) சீதாபதியால் அதிமுகவுக்கு ஏதாவது லாபம் கிடைத்ததா?. எம்.ஜி.ஆர். காலத்தில் திமுக-வின் சென்னை கோட்டையில் எந்த ஒரு ஓட்டையும் விழவில்லை.
ஆக, மாவட்டச் செயலாளர்களால் ஒரு கட்சியின் அடித்தளத்தை அசைக்க முடியாது என்பதற்கு சீதாபதியே உதாரணம்.
எம்.ஜி.ஆரின் அஸ்திரத்தை இப்போது மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக-வில் முட்டல் – மோதல். புதிய வரவுகளால் சச்சரவுகள்தான் அதிகரிக்குமே தவிர, திமுக-வுக்கு எந்த வரவும் வரப்போவதில்லை என்பதே கள நிலவரம்.
(கட்டுரையாளர்: மாடக்கண்ணு, மூத்த பத்திரிகையாளர். கடந்த இருபது ஆண்டுகளாக தொலைக்காட்சி செய்திச் சானல்களில் பணியாற்றிவருகிறார்).









