தமிழக மக்கள் பிரதமர் மோடியையும், நிதியமைச்சரவையும் மன்னிக்கவே மாட்டார்கள் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி.காட்டமாக பேசினார்.
2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழகத்துக்காக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 24) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது மக்களவையில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், “‘நான் தமிழனாக பிறக்கவில்லையே… அடுத்த ஜென்மத்திலாவது தமிழனாக பிறக்க வேண்டும். தமிழ் உலகத்திலேயே சிறந்த மொழி… தமிழ் பேசும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே’ என்று தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் நடப்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி பேசினார்.
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்ததும் 7ஆம் கட்ட தேர்தலுக்காக ஒடிஷா சென்று பேசிய மோடி, ஓடிசாவை தமிழன் கட்டி ஆள வேண்டுமா என்று கோவமாக கேள்வி எழுப்பினார்.
அதுபோன்று இந்த பட்ஜெட்டில் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறார். தண்டித்திருக்கிறார். அவர் சொன்னதுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறார். தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பணி செய்வேன் என்று கூறுவார். ஆனால் பிரதமர் மோடி அவரது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு கூட எதுவும் செய்யவில்லை.
தமக்கு ஆதரவு கொடுத்த கூட்டணிக் கட்சிகளின் நலனைத்தானே மோடி கவனத்தில் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக ‘மோடி கேரண்டிக்காக’ விளம்பரம் செய்ய மக்களின் வரி பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டது.
ஆனால் தேர்தலுக்கு பின்னர் அவரது கேரண்டி போய்விட்டது. ஆனால் தான் மூன்றாவது முறையாக பிரதமராக தொடர்வதற்காக தற்போது ப்ரீமியம் காப்பீடு போட்டுள்ளார்” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு கேட்ட சென்னை, கோவை மெட்ரோ திட்டம் குறித்து பேசிய அவர், “சென்னை, தூத்துக்குடியில் மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்தோம். அப்போது வந்து ஆய்வு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களை சந்தித்து பேசினார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கொடுக்கவில்லை.
அந்த சமயத்தில் அவர் கோயில்களுக்கு சென்று வந்தார். அப்போது நேரடியாக உண்டியலில் காசு போட வேண்டாம். நேரடியாக பூசாரியிடம் கொடுங்கள் என்றார்.
இதுதான் ஒரு நிதியமைச்சர் நடந்துகொள்ளும் விதமா… இப்படி பேசலாமா? இதே போன்று, தமிழ்நாட்டு மக்களே மத்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டாம்.. நமது வரிப் பணத்தை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு அள்ளி தருகிறது என்று நாங்கள் சொன்னால் சரியாக இருக்குமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அப்படி கூறலாமா? மன்னிக்கவும்… நிர்மலா சீதாராமன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, நியமிக்கப்பட்டவர்தானே…
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுத்தது எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்பட்டு போய்விடுவீர்கள். 276 கோடி ரூபாய் கொடுத்தார்கள்.
ஆனால் பீகாரில் வெள்ளம் வருவதை தடுப்பதற்காக மட்டுமே இப்போது ரூ.11 ஆயிரம் கோடியை மத்திய அரசு அள்ளி கொடுத்திருக்கிறது. ஏனென்றால் மைனாரிட்டி பாஜக தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா சீதாராமன் கற்றல் ஆற்றல் மிக்கவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன். நேற்று, ‘புதிய கிழக்கு’ என்ற கொள்கையை கொண்டு வந்தார் நிர்மலா சீதாராமன்.
புதிய கிழக்கா என்று நேற்று நான் குழம்பிக்கொண்டிருந்தேன். இந்தியாவின் புது கிழக்கில், பிகார், ஆந்திரா வந்துள்ளது. ஆனால் மேற்கு வங்கம் வரவில்லை.
ஆந்திராவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் தமிழ்நாடும் வரும்தானே.
எனவே அவரவர் வசதிக்கு ஏற்ப கொள்கையை மாற்றிக் கொள்வார்கள். இதெல்லாம் ‘எனக்கு வந்தா ரத்தம், உனக்கு வந்தா தக்காளி சட்னி’ என்பது போல் உள்ளது” என கடுமையாக விமர்சித்தார் தயாநிதி மாறன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மாணவர்கள் ரூ.1000 பெற ஆதார் அவசியம் : வேறு என்ன ஆவணங்கள் தேவை?
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு எத்தனை கோடி? மத்திய அமைச்சர் பதில்!