அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் கடந்த ஐந்து நாட்களாக மிகப்பெரிய அளவில் போராட்டங்களும் கலவரங்களும் நடந்து கொண்டிருக்கிறது. california governor gavin angry words on trump
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை அந்நாட்டில் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிவதற்கான சோதனையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அந்நகரில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன.
லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலிபோர்னியா மாகாணத்தின் தேசிய காவல் படையை பயன்படுத்தினார். இதனால் போராட்டம் மேலும் வலுவடைந்து அது வன்முறையாக மாறியது.
இதனைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் நடக்கும் போராட்டங்களைப் பற்றி அந்த மாநிலத்தின் ஆளுநரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கேவின் தனது வலையொலியில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் போராட்டக்காரர்கள் செய்த தவறையும் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடந்தது என்ன என்பதை பற்றியும் அவர் விரிவாக கூறியுள்ளார்.
”கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கின்ற முக்கியமான விஷயங்களை பற்றி நான் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
கடந்த வாரம் லாஸ் ஏஞ்சலஸைப் மையமாக கொண்டு பெரிய அளவிலான சோதனைகள் நடைபெற்றன.
அமெரிக்காவின் குடிவரவு சட்டங்களை அமல்படுத்துவது புதிய விஷயம் இல்லை. ஆனால், இதுவரை இரு கட்சிகளும் ஆதரித்தது போல குற்றப் பதிவுகள் உள்ள சட்டவிரோத குடியாளர்களை மட்டும் குறி வைத்து நடவடிக்கை எடுத்தோம்.
ஆனால் தற்பொழுது அதற்கு பதிலாக இப்போது, இந்த ஆட்சித் தலைமை, எந்த வேறுபாடும் இல்லாமல், உழைக்கும் குடியேறிய குடும்பங்களை நேரடியாக குறிவைத்து வெளியேற்ற முயற்சிக்கிறது. இது மிகவும் அபாயகரமான நடவடிக்கையாக இருக்கிறது.
சனிக்கிழமை காலை, ஹோம் டிபோ பார்க்கிங் பகுதிக்கருகே ஒரு அடையாளமற்ற வாகனத்திலிருந்து ஏஜெண்ட்கள் இறங்கினர்.
அவர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் லத்தீனோ (ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய) மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதேபோல, நகரத்தின் மத்திய பகுதியில் உள்ள ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஒரு 9 மாத கர்ப்பிணியான பெண், அமெரிக்க குடிமகள் என்றபோதிலும் கைது செய்யப்பட்டார். மேலும் 4 வயது சிறுமி தன்னுடைய குடும்பத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளானாள்.
இதை எதிர்த்து, லாஸ் ஏஞ்சலஸை சேர்ந்த மக்கள் சாலையில் இறங்கி, தங்களது உரிமையை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அமைதியை பேண களமிறங்கினர். பெரும்பாலும், அமைதியாக போராட்டத்தை கையாள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் போலீசாரின் வேறுபட்ட அணுகு முறை பிரச்சனையாக மாறியது.
திடீரென கண்ணீர் புகை குண்டுகள், வெடிக்கும் ஒலி குண்டுகள், ரப்பர் துப்பாக்கி குண்டுகள் என அனைத்தும் விதமான ஆயுதங்களும் பொதுமக்கள் மீது பயன்படுத்தப்பட்டது. மத்திய அரசு, அவர்களது உரிமைகளை மீறி, பலரை கைது செய்தது.
ட்ரம்ப், கலிஃபோர்னியா காவல்துறை தலைவர்களுடன் ஆலோசிக்காமலே, சட்டவிரோதமாக 2000 தேசிய காவல்படையினரை நகருக்குள் அனுப்பி வைத்தார்.
இதனால் நிலைமை மேலும் மோசமானது. இது மக்கள் மற்றும் கலிபோர்னியா மாகாணத்தின் தேசிய பாதுகாப்புப் படையினர் என இருதரப்பினரும் ஆபத்தில் சிக்கினர்.
இரவு நேரத்தில் சிலர் வன்முறையிலும், சேதப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டனர். காவல்துறையை தாக்க முயற்சி செய்தனர். வாகனங்கள் தீயில் எரிந்தன. இது நடக்கவே கூடாது ஒன்று. இது குற்றமாகும்.
இவ்வாறு செயல்பட்டவர்கள் சட்டப்படி முழுமையாக எதிர்கொள்ள நேரிடும். இதுவரை 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைகள் நடக்கின்றன.
அமைதிப் போராட்டம் நடத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் தைரியமாக தங்களது உரிமைகளைப் பயன்படுத்தினர்.
ஆனால் ட்ரம்ப் மேலும் வன்முறையை தூண்டினார். மேலும் 2000 தேசிய பாதுகாப்புப் படையினரை அனுப்பினார். அத்தோடு 700 கடலோர காவல் படையினரையும் (Marines) நகரில் களமிறக்கினார்.
இவர்கள் நாட்டின் எல்லை பாதுகாப்புக்காக பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் நாட்டு மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டியவர்கள் அல்ல.
இப்போது பள்ளி வளாகங்களில் அடையாளமற்ற வாகனங்கள் நிற்கின்றன. மாணவர்கள் பட்டமளிப்பு விழாவுக்குப் பயந்து வரவில்லை.
ட்ரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பயத்தை உருவாக்கி மக்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். கைக்கூலி தொழிலாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள், பெண்கள் என யாரும் விட்டுவைக்கப்படவில்லை. இது பலவீனத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
அமெரிக்க இராணுவத்தை சட்டவிரோதமாக டொனால்ட் ட்ரம்ப் கலவரங்களையும் பிரசாரங்களையும் செய்வதற்காக அவர் தனது பிறந்தநாளை (ஜூன் 14) பயன்படுத்துகிறார். இது நாசிக்களின் போக்கை நினைவுபடுத்துகிறது.
இந்தச் சூழ்நிலையை நாம் புறக்கணிக்க முடியாது.
அரசியல், சட்டம், கல்வி, ஊடகம் அனைத்தையும் ட்ரம்ப் தகர்த்தெறிகிறார். அரசு கணக்கெடுப்பு தரவுகள் அழிக்கப்படுகின்றன.
நிருபர்களின் உரிமைகள் குறைக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் பாடங்கள் ஒடுக்கப்படுகின்றன. நீதித் துறையின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இது எல்லாம், ஜனநாயகத்தின் மீது தாக்குதல்தான். நாம் அனைவரும் விழிக்க வேண்டிய தருணம் இது.
நீங்கள் பொதுமக்களாக இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மையான அதிகாரம். ஜனநாயகத்தில் “முக்கியமான பதவி” என்பது ஜனாதிபதி அல்ல, ஆளுநரல்ல, அது குடிமகனின் பதவிதான்.
இப்போது நாம் அமைதியாக, ஆனால் உறுதியுடன் நின்று பேச வேண்டிய நேரம் இது. உங்கள் உரிமைகளை பயன்படுத்துங்கள். ஆனால் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும்.
ட்ரம்ப் விரும்புவது உங்கள் மௌனம், உங்கள் பயம். அதற்கு யாரும் இடமளிக்க வேண்டாம்” என்று ஆளுநர் கேவின் கூறியுள்ளார்.
