வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட போட்டோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே கோட்டை சோர்சுகளிடம் கொஞ்ச நேரம் உரையாடிவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஜனவரி 23ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் இலாகா இல்லாத அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மற்றும் உடல்நல குறைவால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தவிர மற்ற அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் மிக முக்கியமான முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஜனவரி 5ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்? என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த செய்தியில், ’ஜனவரி இறுதி வாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அவர் வெளிநாடு சென்று தமிழ்நாடு திரும்பும் வரையில் உதயநிதியிடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்து செல்வார் என்பது திமுக உயர் மட்ட புள்ளிகள் விவாதித்துக் கொள்ளும் விஷயமாக இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி இறுதி வாரத்தில் வெளிநாடு செல்கிறார் என்றும் அப்போது உதயநிதியை பொறுப்பு முதலமைச்சராக நியமிக்க இருக்கிறார் என்றும் இரண்டு எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள் அன்றைய டிஜிட்டல் திண்ணையில் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த பின்னணியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணம் பற்றி அமைச்சர்களிடம் விளக்கியதோடு… தனது வெளிநாட்டு பயணத்தின் போது உதயநிதியை பொறுப்பு அமைச்சராக நியமிப்பது பற்றி நிர்வாக ரீதியான அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றுள்ளார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இதன்படி வரும் 27 ஆம் தேதி அமைச்சர் உதயநிதி பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
ஏற்கனவே கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு சென்ற காலகட்டத்தில் அவர் யாரையும் பொறுப்பு முதல்வராக நியமிக்கவில்லை. அதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் சென்றபோதும் பொறுப்பு முதல்வரை நியமிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே துணை முதல்வர் ஆகலாம் என்று கூறப்பட்ட அமைச்சர் உதயநிதி, பொறுப்பு முதல்வர் ஆகப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
இன்று மாலை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் பொருளாளர் டி. ஆர். பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ’இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல இருப்பதால் அதிகாரிகளோடு முக்கிய கலந்தாலோசனை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே நான் முன்கூட்டியே பேசிவிட்டு புறப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை பொறுப்பு அமைச்சராக்குவதற்கான நிர்வாக ரீதியான ஒப்புதலை பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து முக்கிய உயர் அதிகாரிகளுடன் அடுத்தகட்ட ஆலோசனை நடத்தியுள்ளார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
AK63: அஜித் ஜோடியாக நடிக்கப்போவது இவர் தானா?
உச்ச நீதிமன்றம் சென்ற அமைச்சர்கள்: அதிமுக, பாஜக கேவியட் மனு!