வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இல்ல திருமண விழா புகைப்படங்களும் வீடியோக்களும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”இன்று ஜூன் 19ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜின் மகன் திருமண விழா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
காலை 9:30 மணிக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திருமண விழா நடைபெறுவதாக இருந்தது. இதை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் இருந்து அறிவாலயம் வரைக்கும் போலீசாரும் அலர்ட் செய்யப்பட்டனர்.
ஆனால் திடீரென முதலமைச்சர் சற்று சோர்வாக இருப்பதால் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் 11:30 மணிக்கு மேல் வருவார் என்றும் அறிவாலயத்துக்கும் அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த தகவலும் அப்டேட் செய்யப்பட்டு, முதலமைச்சர் வரவில்லை, முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் திருமண விழாவில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை மணமக்களோடு முதலமைச்சரை அவரது இல்லத்தில் வந்து சந்திக்குமாறும் அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உதயநிதி உள்ளிட்ட பல அமைச்சர்கள், திமுக தலைமைக் கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்திய நிலையில்… ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைக்க வேண்டிய திருமண விழாவை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்தார். அமைச்சர் கயல்விழியின் இல்ல திருமண விழாவுக்கு முதலமைச்சர் வராதது கொங்கு பகுதியில் இருந்து வந்திருந்த அமைச்சர் ஆதரவாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
நேற்று கூட கோட்டைக்கு வந்து பல்வேறு அலுவல்களை கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் இல்லத் திருமணத்திற்கு வராதது குறித்து திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் விவாதம் தொடங்கி இருக்கிறது.
’அமைச்சரவை மாற்றம் என்று கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி அமைச்சரவை மாற்றம் பற்றி செய்திகள் வரும்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றப்படுவார் என்றும் அப்போது தகவல்கள் அடிபட்டன.
இந்த நிலையில் நேற்று கோட்டைக்கு வந்து அலுவல்களை கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கயல்விழி செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளாதது அமைச்சரவை மாற்றத்திற்கான விதையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த திருமணத்துக்கு வரும் பட்சத்தில் கயல்விழி செல்வராஜின் துறை ரீதியான நடவடிக்கைகளை புகழ வேண்டிய நிலை முதலமைச்சருக்கு ஏற்படும். பிறகு அமைச்சரவை மாற்றம் நடைபெறும்போது கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டால்… முதலமைச்சரே புகழ்ந்து விட்டு இப்படி மாற்றுகிறாரே என்ற ஒரு பேச்சும் எழும். இதை தவிர்ப்பதற்காக தான் முதலமைச்சர் விழாவில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார் என்ற விவாதமும் அமைச்சர்களுக்குள்ளேயே நடந்து வருகின்றன.
அதே நேரம் அமைச்சரவை மாற்றம் எப்போது என்ற கேள்வியும் வளர்ந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் தேசிய அளவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருக்குமேயானால் தமிழ்நாட்டில் உடனடியாக அமைச்சரவை மாற்றத்தை செய்ய திட்டமிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனால் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போன நிலையில் உடனடியாக அமைச்சரவை மாற்றம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அதே நேரம் கனிமொழிக்கு நாடாளுமன்ற குழு தலைவர் என்ற பதவி அளிக்கப்பட்ட நிலையில் இங்கே உதயநிதிக்கு அடுத்த கட்ட பிரமோஷன் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.
சட்டமன்றம் 20ஆம் தேதி முதல் நடக்க இருக்கிற நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பும் அதை ஒட்டி அமைச்சரவை மாற்றங்களும் நடைபெறலாம்.
இந்த வகையில் கயல்விழி செல்வராஜ் அமைச்சரவையில் இருந்து ஒருவேளை அகற்றப்படும் பட்சத்தில் அந்த துறையை பெற மானாமதுரை தமிழரசியும் சங்கரன்கோவில் ராஜாவும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்’ என்று மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: ஸ்டாலின் இரங்கல்!
“ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்” : ஸ்டாலின் வாழ்த்துக்கு ராகுலின் சுவாரஸ்ய பதிவு!