சிறப்புக் கட்டுரை: குழிதோண்டிப் புதைக்கப்பட்ட குடியுரிமை தத்துவம்!

Published On:

| By Balaji

ராஜன் குறை

நவீன மக்களாட்சி அரசுகளின் அடிப்படையே குடி நபர் என்ற சட்டரீதியான அடையாளம்தான் என்றால் மிகையாகாது. இந்த அடையாளம் வேறு எந்த அடையாளத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதுதான் சட்டரீதியான அடையாளம் என்பதன் சிறப்பு. பாரதியின் ரத்தினச் சுருக்கமான வரையறைதான் குடிநபர் என்பதற்கான விளக்கம்: ‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள்; எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்.’

ADVERTISEMENT

ஓர் அரசின் சட்டத் திட்டங்கள் ஒரு மதத்தின் விதிகளைத் தன்னுடையதாக அனுசரிக்கும்போது அந்த அரசு, அந்த மதம் சார்ந்த அரசாக அறியப்படுகிறது. ஆனாலும்கூட அந்த நாட்டின் குடிநபர்கள் எந்த மதமாக இருந்தாலும் சம உரிமை கொண்டவர்களாக இருக்கலாம். மதத்தின் அடிப்படையில் யாருக்கும் குடியுரிமை அளிப்பதோ, பறிப்பதோ நடக்க தேவையில்லை. பொதுவாக அகவாழ்க்கை சார்ந்த வழக்கங்களில் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் அந்த மதத்தின் விதிகளை அனுசரிக்கலாம் என்று மதச்சார்புள்ள அரசுகள்கூட அனுமதிக்கலாம். இது வேறு; குடிமக்களையே மத அடிப்படையில் தரம் பிரித்து இந்த மதத்தாருக்குக் கூடுதல் உரிமை; பிற மதத்தாருக்குக் குறைவான உரிமைகள் என்று கூறுவது வேறு.

இஸ்ரேல் என்ற காலவழு

உலகிலேயே மதம் சார்ந்த குடியுரிமையை வெளிப்படையாகக் கடைப்பிடித்த நாடு இஸ்ரேல். அந்த நாடு யூதர்களின் தாயகம் எனக் கருதப்பட்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்டதால் உலகின் எந்தப் பகுதியில் உள்ள யூதருக்கும் அங்கு சென்று குடியேறும் உரிமை அளிக்கப்பட்டது. அங்கிருந்த பாலஸ்தீன அரசின் குடிமக்கள், இஸ்ரேல் உருவாக்கப் போரின்போது வெளியேறியிருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. மேலும் இஸ்ரேல் யூதர்கள் அரசாகவும், யூதர்களும் மற்றவர்களும் குடியுரிமை உள்ளவர்களாக இருந்தாலும், இஸ்ரேல் ஒரு தேசமாகவும், குடி நபர்கள் இஸ்ரேலியர்களாகவும் கருதப்படுவது இல்லை. யூத குடிமக்கள், பாலஸ்தீனிய குடிமக்கள் என்று பிரித்துதான் கூறப்படுகிறதே தவிர இஸ்ரேலிய குடிமக்கள் என்று கூறப்படுவது இல்லை. இஸ்ரேலில் குடியுரிமை கூட விரும்பாத பாலஸ்தீனியர்கள் நிரந்தர வசிப்பாளர்கள் என்ற தகுதியுடனும் வசித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இஸ்ரேல் போன்ற மதத்தை குடியுரிமையின் அடிப்படையாகக் கொண்ட நாடு உருவாக ஹிட்லரின் ஹோலாகஸ்ட் எனப்படும் யூதப் படுகொலை வழிவகுத்தது. ஜினோசைட் எனப்படும் இனப்படுகொலை என்ற சொல் உருவாகவும் ஹிட்லரே காரணம். உள்ளபடியே தங்களுக்கென்று ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதையே மத நம்பிக்கையாகக் கொண்ட யூதர்கள், தங்களுக்கான நாடு குறித்து சிந்திக்கவும், பண்டைக்காலத்தில் இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலமென நம்பப்படும் பாலஸ்தீனத்தில் அந்த நாட்டை உருவாக்கிக்கொள்ள முன்வந்ததும் ஹிட்லர் நடத்திய யூத இனப்படுகொலைதான் காரணம். ஹிட்லர் ஆரிய இனமே மேன்மையானது, அதனால் ஆரியர்களின் மேன்மையை ஐரோப்பாவில் குடியேறி குலைத்துவரும் யூதர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கருதினான். இந்த மத அடையாளம் சார்ந்த படுகொலை, வரலாற்று முரணாக மத அடையாளம் சார்ந்த நாடு உருவாகக் காரணமானது. நாடுதான் உருவாகியதே தவிர தேசம் உருவாகவில்லை.

இந்தியாவின் கடந்த காலம்!

இந்தியாவின் பாதை முற்றிலும் வேறானது. இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்தேதான் இங்கு பேரரசுகளை உருவாக்கினார்கள்; சட்டத் திட்டங்களை வகுத்தார்கள். எந்த இரண்டு மன்னர்களுக்கும் இடையிலான போர்கள் போல முஸ்லிம், இந்து மன்னர்களுக்கு இடையே போர்கள் நடந்தாலும் அவை மத அடையாளம் சார்ந்த போர்களாக இல்லை. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மதம் சார்ந்த முரண்கள் இருந்திருக்கலாம்; ஆனால் உறவும் இருந்தது. அதேபோல அவர்களுக்கிடையே வணிகம் சார்ந்த முரணும் இருந்தது; உறவும் இருந்து. அரசமைப்பு சார்ந்த உறவும் இருந்தது; முரணும் இருந்தது. மத நம்பிக்கை மட்டுமே நட்பையோ, பகையையோ தீர்மானிக்கவில்லை. அயோத்தியில் உள்ள கோயில்கள் பலவற்றுக்கு, மத அமைப்புகளுக்கு நிலங்களை முஸ்லிம் நவாப்கள் அளித்துள்ளனர். முஸ்லிம்கள் பூக்களைக் கட்டிக்கொடுத்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆங்கிலேயர்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும் முஸ்லிம்களையும், இந்துக்களையும் முற்றிலும் முரண்கொண்ட மக்கள் தொகுதிகளாகவே புரிந்துகொண்டார்கள்; கட்டமைத்தார்கள். பதினோராம் நூற்றாண்டிலேயே குடியேறி இந்திய வரலாற்றின் அங்கமாக மாறிய இஸ்லாமியர்களை அந்நியர்களாகச் சித்திரிக்க முயன்றார்கள். இந்தியாவின் பன்மைமிகுந்த வழிபாட்டு, சடங்கியல் வாழ்வை இந்து மதம் என்ற ஒற்றை பெரும்பான்மை அடையாளமாக உருவாக்கி, இஸ்லாமியர்களை அதற்கு எதிரிகளாக நிறுத்தினார்கள். இரண்டு இஸ்லாமிய மன்னர்களிடையே போர் மூளும்போது இந்து அரசர்களும் யாரோ ஒருவருக்கு ஆதரவளிப்பது போன்ற வரலாற்று தகவல்கள் அழுத்தம் பெறாமல், இந்து மன்னர்களுக்கும், இஸ்லாமிய மன்னர்களுக்குமான முரண்களே அதிகம் முன்னிறுத்தப்பட்டது. பொதுப்புத்தியில் இந்துக்கள் பூர்வகுடிகள் இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பூர்வகுடிகள்தான் இஸ்லாம் மதத்தை தழுவினார்கள்; அவர்கள்தான் பெரும்பாலான இஸ்லாமியர்கள் என்ற உண்மையே கூட பலராலும் உணரப்படுவதில்லை. ஏதோ ஒவ்வோர் இஸ்லாமியருமே இமயமலைக்கு அப்பாலிருந்து படையெடுத்து வந்ததுபோல ஒரு சித்திரிப்பு, மனப்பதிவு உருவாக்கப்பட்டது துயரகரமானது.

இந்து ராஷ்டிரம் என்ற இச்சை

இந்து ராஷ்டிரம் என்பதன் ரகசிய இச்சை என்னவென்றால், இஸ்ரேல் போல இந்துக்களின் பூர்வீகத் தாயகமாக இந்தியாவை மாற்றுவது. இந்திய சுதந்திரம் நெருங்கியபோது இந்துக்களின் பெரும்பான்மைவாத மனப்போக்குகளைக் கண்ட முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கென்று தனிநாடு கேட்டது. அதன் சரி தவறு என்பதற்குள் இப்போது போக முடியாது. ஆனால், அதை ஆதரித்தவர்கள் எல்லா தரப்பிலும் இருந்தார்கள். இந்தியாவை ஐந்து அல்லது ஆறு சுயாட்சி பிரதேச அரசுகளாகக் கட்டமைத்து, ஐரோப்பிய யூனியன் போல ஒரு கூட்டாட்சி முறையை உருவாக்கி இருந்தால், ஒரு சில மாகாணங்கள் இஸ்லாமிய ஆட்சியில் அமைந்திருக்கும்படி இருந்திருந்தால் மத அடிப்படையிலான பிரிவினையும், கலவரங்களும், படுகொலைகளும் நடந்திருக்காது. ஆனால், ஒரே இந்தியா என்ற காங்கிரஸ் கனவு, இந்து பெரும்பான்மைவாத அச்சத்தைக் கட்டமைத்து பாகிஸ்தானை உருவாக்கிவிட்டது. பாகிஸ்தான் மத அடிப்படையில் உருவானதால், இந்தியா இந்து நாடாக வேண்டும் என்ற இச்சையும் வலுவடைந்தது. ஏற்கெனவே இந்தியா இந்துக்களின் புண்ணிய பூமி, கங்கை, காசி, ராமேஸ்வரம் அப்படி இப்படியென்று புனித புவியியலொன்று சொல்லாடலில் கட்டமைக்கப்பட்டிருந்தது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ஹிட்லரின் இனச்சுத்திகரிப்பால் ஈர்க்கப்பட்ட இந்துத்துவம் ஹிட்லர் வெறுத்த ஆனால் ஹிட்லரின் படுகொலையால் உருவான யூத மத அரசான இஸ்ரேல் என்ற முன்மாதிரியையும் விரும்பத் தொடங்கியது.

குடியுரிமை சீர்திருத்தச் சட்டம்

உலகெங்கும் உள்ள யூதர்கள் இஸ்ரேலில் குடியேறுவது திரும்பி வருதல் என்றுதான் அழைக்கப்படும். அதுபோல மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சீர்திருத்தச் சட்டமும் இந்துக்கள் ‘திரும்பி வருவதைப்’ பற்றி பேசுகிறது. ஆனால் உடனடியாக இந்துக்களுக்கு பூர்வீக பூமியில் உள்ள உரிமை என்றெல்லாம் பேசாமல், மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அடக்குமுறைக்கு ஆளான ஆறு சிறுபான்மை மதத்தவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று சொல்கிறது. இந்த ஆறில் இஸ்லாமியர்கள் கிடையாது. கேட்டால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் எதனால் அடக்குமுறைக்கு ஆளாகப்போகிறார்கள் என்று கேட்கிறது.

இந்த கேள்வி அடிப்படையிலேயே குடியுரிமையையும், மதத்தையும் பிணைக்கிறது. பல்வேறு அரசியல் காரணங்களால் அடக்குமுறைக்கு ஆளாகுபவர்கள் குடியுரிமை கோரி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது சகஜம். தஸ்லிமா நஸ்ரின் என்ற பங்களா தேஷ் எழுத்தாளர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இஸ்லாமும் பன்மைத்துவம் கொண்டது. அதன் உட்பிரிவுகள் சில அடக்குமுறைக்கு ஆளாகின்றன. மேலும் மத அடையாளம் சார்ந்து அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டாலும் அது அரசியல் பிரச்சினை என்றுதான் கருதப்பட வேண்டும். எனவே, அகதியாக தஞ்சம் கோரி வருபவர்களை அங்கீகரிப்பது, குடியுரிமை வழங்குவது போன்றவை ஒவ்வொரு நபரின் பின்னணி என்ன, அவர் உண்மையிலேயே அடக்குமுறையை, உயிராபத்தைச் சந்தித்துள்ளாரா, அவர் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் பரிசீலித்துதான் வழங்க வேண்டும்.

உதாரணமாக இலங்கையில் உள்நாட்டுப் போர் என்பது உலகம் அறிந்ததுதான். அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வழக்கை விசாரித்து, அதில் போதிய சான்றுகள் இருக்கிறதா என்பதை பரிசீலித்துதான் அகதியாக அனுமதிப்பார்கள். குறிப்பிட்ட காலம் கழித்து குடியுரிமை பெற அந்தந்த நாடுகளின் சட்டங்கள்படி முயற்சி செய்யலாம். இலங்கையிலிருந்து வரும் தமிழர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்கலாம் என்று சட்டம் இயற்ற மாட்டார்கள். ‘இந்தந்த காரணங்களுக்காக அரசு என்னைத் துன்புறுத்தியது, அடக்குமுறைக்கு ஆளாகியது, அந்த நாட்டில் நான் வாழ முடியாத நிலை இருக்கிறது’ என்று ஒருவர் ஆதாரங்களுடன் கூறினால் அவருடைய கோரிக்கை ஏற்கப்படும். தனித்தனி வழக்குகளாகத்தான் கருதப்படும்.

தான்தோன்றித்தனமான சட்டம்

பிறகு ஏன் இப்படி ஒரு சட்டம் என்றால், அசாம்தான் காரணம். அசாமில் வெகுநாட்களாகப் பிற மாநிலத்தவர் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், வருவாயில் பெரும்பங்கினை அவர்கள் பெருவதும் சிக்கலாக இருந்துள்ளது. இதில் பிற இந்தியக் குடிமக்களும் அடங்குவர். ஆனால் பங்களா தேஷிலிருந்து வந்த அகதிகள் குறித்த பிரச்சினையாக இது வடிவம் கொண்டபோது, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற ஒரு முயற்சியினை பாரதீய ஜனதா ஆட்சி மேற்கொண்டது. யாரெல்லாம் குடியுரிமைக்குத் தகுதியானவர் என்பதற்குப் பல வரையறைகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்களைத் தருபவர்கள் குடிமக்கள், பிறர் அந்நியர் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதபடி, அதில் ஏராளமானோர் இந்துக்களாக இருந்தார்கள்.

பாரதீய ஜனதா கட்சி குடியுரிமை ஆதாரம் இல்லாத பங்களாதேஷ் முஸ்லிம்களைத் தடுப்பு முகாம்களில் வைக்க விரும்புகிறது. ஆனால், அவர்களோடு சேர்ந்து இந்துக்களையும் வைக்க விரும்பவில்லை. அதற்காகத்தான் அவசரமாகக் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம். பங்களாதேஷ் அகதிகளை மத அடிப்படையில் வேறுபடுத்துவது என்பது, இந்துக்களுக்கு இந்தியாவின்மீது அதிக உரிமையும், இஸ்லாமியர்களுக்குக் குறைந்த உரிமையும் இருப்பதாகச் சொல்லுவதற்குச் சமம் என்பதால் இந்தச் சட்டம் குடியுரிமையின் அடிப்படைகளைக் குழிதோண்டிப் புதைக்கிறது.

அசாமின் தேசிய குடியுரிமை பதிவேட்டை எல்லா மாநிலங்களுக்கும் விரிவாக்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய அரசு கூறுகிறது. சரியான குடியிருப்பு ஆதாரங்களைக் கொடுக்கமுடியாத ஏராளமான ஏழை முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதேபோல ஆதாரங்களைக் கொடுக்க முடியாத இந்துக்கள் எப்படியானாலும் அவர்கள் திரும்பி வரும் உரிமை உள்ளவர்கள் என்பதால் ஐந்தாண்டுகள் வசித்ததற்கான ஆதாரம் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

அகதிகளையும், குடியுரிமை வழங்குதலையும் மத ரீதியாக வரையறுப்பது என்பது எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்தியர்கள் என்ற தேசத்தின் அடிப்படையையே தகர்ப்பது. எனவேதான் இதைச் சான்றோர்களும், சிந்தனையாளர்களும், உலக நாடுகளும், மாணவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தச் சட்டம் இந்தியாவின் அடையாளத்தையே மாற்றியமைப்பது என்பதால் சாதாரணமான பிரச்சினையாக நினைக்க முடியாது.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share