சிஏஏ போராட்டம்: போலீஸாரின் புதிய திட்டம்!

Published On:

| By Balaji

சிஏஏ போராட்டங்களைக் காவல் துறையினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமியர்கள் பகல் இரவு போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். சிஏஏ சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் மிக முக்கியமான கோரிக்கை. தமிழகத்தில் போராட்டங்களைக் கண்காணிப்பதற்கென ஆறு சிறப்பு அதிகாரிகளையும் டிஜிபி நியமித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (மார்ச் 11) தொடங்கி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டமன்றம் நடைபெறும் நேரத்தில் சிஏஏ போராட்டம் நடந்தால் அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனக் காவல் துறை கருதுகிறது. இதனால் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவர வழி இருக்கிறதா என்றும் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதுதொடர்பாகக் காவல் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்…

ADVERTISEMENT

“காவல் துறை தரப்பிலிருந்து போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட காவல் துறையின் சிறப்புப் படை அதிகாரிகள் சாதாரண உடையில் பவனி வருகிறார்கள். அதில் இஸ்லாமியர்களும், உருது மற்றும் இந்தி பேசக்கூடிய அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதனால் போராட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சந்தேகம் எழவில்லை. அவர்கள் போராட்டக்காரர்கள் போலவே அமர்ந்து அனைத்தையும் நோட்டமிடுவார்கள்.

அதிகாரிகளின் முக்கிய நோக்கம் போராட்டம் நடத்துவதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிவதுதான். ஏனெனில், நிதி கொடுப்பவர்கள் அதை நிறுத்திவிட்டால் போராட்டங்கள் தானாக வலுவிழந்துவிடும் என்பது அதிகாரிகளின் எண்ணமாக இருக்கிறது. போராட்டக் களத்தில் நிதி திரட்டுவதற்காக ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் தங்களால் இயன்ற நிதியை அதில் செலுத்துகிறார்கள். சொற்ப அளவில் சேரும் அந்த பணத்தைக் கொண்டு இவ்வளவு நாட்கள் போராட்டங்களை நடத்த முடியாது. ஆகவே, போராட்டம் தொடருவதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வருகிறது, யார் யார் நிதி அளிக்கிறார்கள் போன்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டிவருகிறார்கள்.

ADVERTISEMENT

அடுத்து, போராட்டங்களில் முன்னின்று தீவிரமாக இயங்குபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போராட்டக் களங்களில் தீவிரமாக இயங்குபவர்களின் பெயர்களைக் குறிப்பெடுத்து மேலிடத்திற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்து செய்யலாம் என்ற ஆலோசனைகள் நடந்துவருகின்றன. இதுபோன்ற பல வழிகளிலும் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறோம்” என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும், எத்தனை தடைகள் வந்தாலும் சிஏஏவைத் திரும்பப் பெறும்வரை தங்களது போராட்டத்தை யாரும் முடக்க முடியாது, ஏதாவது ஒரு வழியில் தொடர்ந்து கொண்டுதான் இருப்போம் என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

**-வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share