தேர்தல் நேரத்தில் சிஏஏ அமல் : ஸ்டாலின், பினராயி, மம்தா கடும் எதிர்ப்பு!

Published On:

| By Kavi

caa amendment stalin slams

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு முதல்வர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2019 திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த சட்டம் இன்று (மார்ச் 11) முதல் அமலுக்கு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்

குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் – இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பாஜக அரசு.

அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் – 2019-ஐ, ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் தீர்மானம் நிறைவேற்றியது கேரளாதான். முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் செயல்படுத்தப்படாது.

தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது தேசத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும்.

இது பொதுமக்களிடையே வகுப்புவாத பிளவுகளை ஏற்படுத்தவும் நமது அரசியலமைப்பின் அடிப்படை சித்தாந்தத்தை அழிக்கவும் வழிவகுக்கும்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் ஏன் இதை அறிவிக்க வேண்டும்?  நாடாளுமன்றத்தில் சட்டம்  இயற்றப்பட்டு 4 ஆண்டுகாலம் ஆன நிலையில், இப்போது அமல்படுத்துவது ஏன்? எல்லாம் அரசியல் காரணம்.

ரம்ஜான் பண்டிகை தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக ஏன் இதை அறிவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், இச்சட்டத்தை எப்போதும் திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கும்.

இவ்வாறு எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும் கணடனம் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இரட்டை இலை சின்னம் : எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Arun Vijay ‘மிஷன் சேப்டர் 1’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share