1டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது தொடர்பாக தன்னிடம் யாரும் தொடர்புகொண்டு பேசவில்லை என முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பிரதான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான முரளி விஜய், மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து பாதியிலேயே கழற்றி விடப்பட்டார். இதனையடுத்து தற்போது இந்தியா விளையாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்திய அணியில் தான் புறக்கணிப்பட்டுவருவதாக முரளி விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மும்பை மிரர் ஊடகத்துக்குப் பேட்டியளித்த முரளி விஜய், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டை முடித்துவிட்டு நான் இந்தியா வந்த பிறகு அணியினரோ, தேர்வுக் குழுவோ, இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இங்கிலாந்தில் இருந்து கிளம்பும் முன் சிலருடன் பேசி இருந்தேன். அதன் பின் யாரும் என்னை மீண்டும் அழைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரராக வலம்வந்த முரளி விஜய், கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு சதத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார். தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரது இடத்தைப் பிடித்துள்ள ப்ரித்வி ஷா, அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். இதனால் தற்போது டெஸ்ட் அணியில் முரளி விஜய்யின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.,”
