தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூர் சிஎம்சி கல்லூரி விழாவில் ‘சுகாதாரத்துறையில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாக’ இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி விமானம் மூலமாக இன்று(மே 4) காலை சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த குடியரசுத் தலைவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் வரவேற்றனர்.
ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் சென்ற ராம்நாத் கோவிந்த், வேலூர் சிஎம்சி கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய ராம்நாத் கோவிந்த், சுகாதாரத் துறையில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது .இந்தியாவில் 1.47 மில்லியன் பொறியியல் இடங்கள் உள்ளது, ஆனால் 67,352 மருத்துவ இடங்களே உள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு வருடத்தில் 20 சதவீதமான அளவிற்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப் பட்டுள்ளது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நாராயணி மருத்துவக் கல்லூரியில் இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைப் பிரிவுக் கட்டிடத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர், அதன் பின்னர் வேலூர் பொற்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.மேலும், மாலை 6 மணிக்கு சென்னை திரும்பும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் இரவு 7.30 மணி முதல் 8.00 மணிவரை முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
நாளை (மே 5) சென்னை பல்கலைக் கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் அதனைத் தொடர்ந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார். கல்லூரி வளாகத்தில் கலையரங்கு ஒன்றையும் திறந்து வைக்கிறார். அதன் பின்னர், மதியம் 1.25 மணிக்கு தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.,”
