2017-18ஆம் நிதியாண்டில் அதற்கு முந்தைய மூன்று நிதியாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரக்குப் போக்குவரத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனாலும், உற்பத்திப் பொருட்கள் மற்றும் மூலப் பொருட்களின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சி, உலகளாவிய வர்த்தகப் போர் போன்ற சில காரணங்களால் நடப்பு ஆண்டில் ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
ஜிஎஸ்டி ரீஃபண்ட்கள் தாமதமாவதும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஆபத்தாக முன் நிற்கிறது. ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை செலுத்துவதை துரிதப்படுத்தாவிட்டால், கடந்த ஆண்டில் எட்டிய வளர்ச்சியை மீண்டும் தக்கவைத்துக் கொள்வது மிகக்கடினம். உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 4.1 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. வேளாண் பொருட்களின் விரிவாக்கம் 3.1 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. மற்ற சரக்குகளின் (பெரும்பாலும் மூலப் பொருட்கள்) ஏற்றுமதி 2.3 சதவிகித வளர்ச்சியை எட்டித் தொடர்ந்து சரிந்து வருவதாக நோமுரா நிறுவனத்தின் மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.
உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில், பொறியியல் தயாரிப்புகளின் ஏற்றுமதி பிப்ரவரியை விட மார்ச் மாதத்தில் சிறப்பாக இருந்துள்ளது. மருந்துகள், மின்னணு சாதனங்கள், ஜவுளிப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி மிதமான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. நகைகள் மற்றும் ரத்தினக் கற்களின் ஏற்றுமதி மதிப்பு பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மொத்தமாக, சரக்கு ஏற்றுமதி மதிப்பு பிப்ரவரி மாதத்தில் 4.5 சதவிகிதத்தில் இருந்து மார்ச் மாதத்தில் 0.7 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.,