தமிழ் திரைப்படங்களில் நெல்லை, மதுரை, கோவை, சென்னை வட்டாரங்களைக் காட்டிய அளவுக்கு வேறு பகுதி மக்களின் கலாச்சாரமோ, வாழ்க்கை முறையோ காட்டப்பட்டதில்லை.
அந்த வகையில் நாகர்கோவில் வட்டாரத்தை முன்னிறுத்திய ‘பைரி பாகம் 1 – நான்காம் தலைமுறை ராஜலிங்கம் கதை’யின் ட்ரெய்லர் நம்மை வசீகரிப்பதாக அமைந்தது. படத்தின் தலைப்பான ‘பைரி’ பந்தய புறாக்களை விரட்டி தாக்கும் பருந்தினை குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதைப் பார்த்தவுடனேயே, இது சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சுயாதீனப் படம்’ எனும் எண்ணம் எழுந்தது. தியேட்டரில் பார்க்கும் அளவுக்கு அதன் காட்சியாக்கம் அமையுமா? புறாக்களை வளர்த்துப் பந்தயத்திற்குத் தயார்படுத்தும் அதன் கதை ரசிகர்களை வசீகரிக்குமா என்ற என்ற கேள்வியை எழுப்பியது.
சரி, ‘பைரி பாகம் 1’ அக்கேள்விகளுக்கு என்ன பதில்களைத் தருகிறது?
புறா பந்தய ‘வெறி’
நாகர்கோவிலில் உள்ள அருகுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (சையது மஜீத்). பொறியியல் படிப்பை முடித்தாலும், சில பாடங்களில் ’அரியர்’ என்ற காரணத்தால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கிறார். அவற்றில் தேர்ச்சி பெற்றதும் சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் சென்று மகன் வேலை பார்க்க வேண்டுமென்பது அவரது தாயின் (விஜி சேகர்) ஆசை. ஆனால், லிங்கமோ புறா பந்தயம் மீது வேட்கை கொண்டு திரிகிறார்.
ராஜலிங்கத்தின் தந்தை, தாத்தா, சித்தப்பா, மாமா என்று உறவினர்கள் பலரும் புறா பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் தான். ஆனால், அதில் காட்டிய ஈடுபாட்டை வர்த்தகத்திலும், வாழ்க்கையிலும் காட்டாமல் தோல்விகளைச் சந்தித்தவர்கள். அதனாலேயே, மகனாவது நல்ல வாழ்வைப் பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறார் லிங்கத்தின் தாய்.
லிங்கத்தின் உயிர் நண்பன் அமல் (ஜான் கிளாடி) புறாக்களை வளர்த்து விற்பனை செய்வதில் கில்லாடி. அவரது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. பொய் சொல்லிப் புறாக்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மது போதை, விலை மகளிருடன் உல்லாசம் என்று பொழுதைக் கழிப்பவர். அதே அளவுக்கு, இயலாமையில் தவிக்கும் தனது தந்தையைக் கவனிப்பதிலும் ஆர்வம் காட்டுபவர் அமல்.
அந்த வட்டாரத்தில் நடைபெறும் புறா பந்தயங்களின் ஆணிவேராகத் திகழ்பவர் ரமேஷ் பண்ணையார் (ரமேஷ் ஆறுமுகம்). அரசியல் சார்பற்றவர்; ரவுடிகள் கூட பணிந்துபோகிற அளவுக்கு உடல் வலுமிக்கவர்; அப்பகுதியில் உள்ள ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சிறு வயதில் இருந்து அமலும், லிங்கமும் அவரைப் பார்த்து வளர்ந்தவர்கள். அதனால், அவரைப் போலவே புறா பந்தயத்தில் பெரிய வெற்றியைக் காண வேண்டுமென்று விரும்புகின்றனர்.
ரமேஷின் புறா வானில் 26 மணி நேரம் 5 நிமிடம் பறக்க, அன்று முதல் தானும் அதில் ஈடுபட வேண்டுமென்று முடிவு செய்கிறார் லிங்கம். ஆனால், அவரது தாய் அதனைத் தீவிரமாக எதிர்க்கிறார். தானும் அதில் விழுந்து உழன்ற காரணத்தால், தந்தையால் லிங்கத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில், புறா வளர்ப்பில் லிங்கத்திற்கு உதவும் வகையில் ‘கூடு’ அமைத்து அமல் உதவுகிறார்.
அமல்தான் தனது மகன் ஊர் சுற்றக் காரணம் என்றெண்ணும் லிங்கத்தின் தாய், அவரிடம் விரோதம் பாராட்டுகிறார். புறா வளர்ப்பினால் அப்பகுதியில் உள்ள வில்லியத்தோடு (கார்த்திக் பிரசன்னா) லிங்கம் கொள்ளும் மோதல் அதனை அதிகமாக்குகிறது.
புறா பந்தயம் தொடங்கியபிறகு, வில்லியத்தின் சூழ்ச்சியால் சுயம்பு (வினு லாரன்ஸ்) எனும் ரவுடியோடு நேருக்கு நேராக மோதுகிறார் லிங்கம். அது அவரது வாழ்வையே புரட்டிப் போடுகிறது. உயிருக்கே ஆபத்து எனும் நிலையை உருவாக்குகிறது. அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘முதல் பாகம்’ என்று டைட்டிலிலேயே சொல்லிவிடுவதால், படத்தின் முடிவு நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால், அது திருப்தி தருவதாக இல்லை என்பதுதான் முக்கியமான பிரச்சனை. வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்தில் சேவல் சண்டையைக் காட்டியது போலவே, இதில் புறா பந்தயம் காட்டப்படுகிறது. அதில் ஈடுபடுத்தப்படும் புறாவைப் பந்தய நாளன்று வானில் பறக்க விட வேண்டும்.
தரையிறங்காமல் அது எத்தனை மணி நேரம் வானில் பறக்கிறது எனும் காலக் கணக்கை வைத்து, பந்தயத்தில் எந்த புறா வெற்றி பெற்றது என்பது தீர்மானிக்கப்படும். போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நாள் அவகாசம் வழங்கப்படும்.
அன்றைய தினம், நடுவர் ஒருவர் அவர் வீட்டுக்கு வந்து 24 மணி நேரம் வரை அந்த புறா பறப்பதைக் கண்காணித்துப் பதிவு செய்வார். இந்தச் செயல்பாட்டில் பயிற்சி அளிப்பதில் தொடங்கி பந்தயத்தில் பறப்பது வரை, புறாவுக்குத் தொந்தரவுகள் தரப்படும்போது அதனை வளர்ப்பவர்கள் இடையே மோதல் எழும். அதை இப்படம் ரத்தமும், சதையுமாகப் பேசுகிறது.
ஈர்க்கும் காட்சியனுபவம்
புறாக்களை ஆசை ஆசையாக வளர்த்துப் பந்தயத்திற்குத் தயார் செய்வதை ரொம்பவே ‘டீட்டெய்ல்’ ஆகச் சொல்கிறது ‘பைரி பாகம் 1’. அதுவே, படம் தொடங்கிய சில நொடிகளில் கதையோடு நம் மனது ஒட்டிக் கொள்ளக் காரணமாகிறது.
சரண்யா ரவிச்சந்திரன், மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா தவிர்த்து இதில் நடித்துள்ள பலரும் புதுமுகங்களே; தொழில்முறை நடிப்புக்கலைஞர்கள் கிடையாது. ஆனால், அவர்களது நடிப்பு பாந்தமாகக் கதையோடு பொருந்தி நின்ற காரணத்தால் நம் கவனம் திரையில் இருந்து வேறுபக்கம் நகர்வதே இல்லை. அதுவே இப்படத்தின் முதல் வெற்றி.
இதில் நாயகனாக சையத் மஜித் நடித்துள்ளார். காதல், வெட்கம், ஆத்திரம், உருக்கம் என்று பல உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், பெரும்பாலான காட்சிகளில் அவர் கோபத்துடனே திரிவது கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது.
நாயகனின் காதலியாக மேகானா வந்து போயிருக்கிறார். ஒரு பாடல் தவிர்த்து இரண்டொரு காட்சிகளில் மட்டுமே அவர் தலைகாட்டியிருக்கிறார். நாயகனின் மாமா மகளாக வரும் சரண்யாவுக்கும் அதே அளவு முக்கியத்துவமே தரப்பட்டுள்ளது.
நாயகனின் தாய் மட்டுமே, இக்கதையில் அதிக நேரம் இடம்பெறும் பெண் பாத்திரம். அதற்கேற்ப, அவ்வேடத்தை ஏற்று நடித்துள்ள விஜி சேகர் திறம்படத் திரையில் தோன்றியுள்ளார். குழாயடி சண்டை, கணவனைத் திட்டுதல், மகனது நண்பனிடம் வசை பேச்சு என்று சாதாரண பெண்களின் இயல்புகளைத் திரையில் வெளிப்படுத்துகிறார்.
மகன் உருப்படாமல் இருப்பதற்கு அவனது நண்பனே காரணம் என்று அவரை ‘வேசி மகனே’ என்று திட்டும் அப்பாத்திரம், வெளியூருக்கு மகன் சென்றபிறகு வீட்டுக்கு வரும் அந்த இளைஞரிடம் ‘தோசை சுடுறேன், சாப்பிட்டுப் போ’ என்று ஒரு காட்சியில் வாஞ்சையாகச் சொல்லும். அதுவும் கூட, சாதாரண பெண்களின் மனம் எப்படிப்பட்டது என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது.
நண்பன் அமல் ஆக இயக்குனர் ஜான் கிளாடி தோன்றியிருக்கிறார். தன் மீது உமிழும் அமில வார்த்தைகளைக் கூட, நட்புக்காகத் துடைத்தெறிந்துவிட்டுப் பழையவாறே பழகும் அவரது பாத்திரம் நிச்சயம் புதிது. வீராவேசமாக வசனம் பேசிவிட்டு, வில்லனை நேரடியாகத் தாக்காமல் பின்னால் இருந்து குத்த அப்பாத்திரம் தயாராகும் காட்சியில், ‘இப்படியொரு மனிதனா’ என்ற ஆச்சர்யம் நம்மைத் தொற்றும்.
ரமேஷ் ஆறுமுகத்தின் தோற்றமும், நடிப்பும் இக்கதையில் அவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தருகிறது. அவரது பாத்திரத்திற்கு அவரே டப்பிங் பேசியிருந்தால், அதற்காகத் தனியே பாராட்ட வேண்டும். போலவே, வில்லனாக வரும் வினு லாரன்ஸ், அவரது மச்சானாக வருபவர், பஞ்சாயத்து செய்யும் அரசியல்வாதிகள் என்று பலரும் திரையில் வந்து போகின்றனர். ஆனால், போலீஸ் பாத்திரங்கள் மட்டும் ‘அளவாக’ திரையில் காட்டப்படுகின்றன.
இவர்கள் தவிர்த்து நாயகனின் நண்பர்களாக வருபவர்கள், எதிர் தரப்பினர் என்று பெருங்கூட்டமே படத்தில் உண்டு. அவர்களது அபார நடிப்புதான், ஒவ்வொரு பிரேமும் முக்கியம் எனும் உணர்வை உண்டாக்குகிறது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்தகுமார் நிச்சயமாகப் பல இயக்குனர்களால் தேடப்படும் நபராக மாறுவார். காரணம், கதை நிகழும் களத்தை ‘லைவ்’வாக உணரச் செய்திருக்கும் அவரது உத்திகள். பல இடங்களில் கேமிராவின் தரத்தையும் மீறி, அவர் காட்டியிருக்கும் ஈடுபாடு தனித்து தெரிகிறது.
அருண்ராஜின் பின்னணி இசை இப்படத்தை உயிரோட்டமிக்கதாக மாற்றுகிறது. ’நீ பார்க்கும் பார்வை’ பாடல் நம்மைச் சட்டென்று ஈர்க்கும் மெலடி மெட்டு. ராஜலிங்கத்தை அறிமுகப்படுத்தும் விதமான வில்லிசைப் பாட்டு, அப்பாத்திரத்தோடு கதையின் ஆதார மையத்தையும் அற்புதமாகச் சொல்லிவிடுகிறது.
நாகர்கோவில் வட்டாரம்
புதிதாக ஒரு களத்தைக் கண்ணில் காண்பிக்கிறோம் என்ற பொறுப்புடன், முழுக்க நாகர்கோவில் வட்டாரத்தை முன்னிறுத்தும் அம்சங்களையே திரையில் நிறைத்திருக்கிறது அனிஷின் கலை வடிவமைப்பு.
ஆர்.எஸ்.சதீஷ்குமாரின் படத்தொகுப்பில் பல காட்சிகள் வெட்டியெறியப்பட்டுள்ளது, பல இடங்களில் வசனம் மூலமாக நமக்கு உணர்த்தப்படுகிறது. அதையும் மீறி, நேராக நாமே அந்த உலகத்தின் அங்கமாகிவிட்ட உணர்வை ஏற்படுத்துவதுதான் அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.
புறா சத்தத்தை மட்டுமே பின்னணியில் ஒலிக்கவிடாமல், வேறு பல ஒலிகளைத் தந்திருக்கிறார் அதனை வடிவமைத்துள்ள சதீஷ். அதே அளவுக்கு விக்கியின் சண்டை வடிவமைப்பும் நம்மைக் கவர்கிறது. கிட்டத்தட்ட ‘உறியடி’ தாபா சண்டைக்காட்சி போலவே இதில் வரும் பல மோதல்கள் உள்ளன.
விஎஃப்எக்ஸை பொறுத்தவரை, பல இடங்களில் நேர்த்தி ‘மிஸ்ஸிங்’. குறிப்பாக, வானில் புறா பறப்பதாகக் காட்டுமிடங்களில் வெறும் பொம்மையைப் பார்த்த உணர்வு. அது பட்ஜெட்டால் ஏற்பட்ட குளறுபடி என்பது இதர ஷாட்களில் கொட்டப்பட்டுள்ள உழைப்பில் இருந்து தெளிவாகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இயக்குனர் ஜான் கிளாடி தரும் காட்சியனுபவம் கொஞ்சம் புதிதாக இருக்கிறது. அதற்கேற்ற உழைப்பைச் சக கலைஞர்களிடம் இருந்து பெற்று அபாரமாகத் திரையில் ஒன்றிணைத்துள்ளார்.
நாயகன், அவனது குடும்பத்தினர், நண்பர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் என்று தொடங்கி வில்லன் வரை அனைத்து பாத்திரங்களின் பலங்களையும் பலவீனங்களையும் ரத்தமும் சதையுமாகத் திரையில் காட்ட முனைந்திருக்கிறார். சில காட்சிகள் கதையோட்டத்தின் வேகத்தினால் வெட்டியெறியப்பட்டிருக்கின்றன.
அதையும் தாண்டி, படத்தின் முடிவு பாதியில் முடிந்த பயணத்திற்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் நிலையை உருவாக்குகிறது. வன்முறை அதிகம் இருக்கிறதே என்ற பதைபதைப்பைத் தருகிறது. இன்னும் நேர்த்தி கூட்டியிருந்தால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக அமைந்திருக்குமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், ‘பைரி பாகம் 1’ நம்மைப் பலவிதங்களில் ஆச்சர்யப்படுத்தும். அந்த வகையில், அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பதே இது பெற்றிருக்கும் முதல் வெற்றி!
மொத்தத்தில் இந்த ‘பைரி’ புறா ரேஸ் பின்னணியில் ஒரு ‘ஆடுகளம்’!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒருவர் இறந்தால் துக்கம் அனுஷ்டிக்கணுமா?
WPL: ‘ஆரம்பமே அதகளம்’ கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து… திரில் வெற்றியை ருசித்தது மும்பை
பிரதமர் குறித்து அவதூறு: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!