இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவுற்றது. இதனையடுத்து, இரு தொகுதிகளில் இருந்தும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான காவல் துறையினர் விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், பனையபுரம் என தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளிட்ட திருமண மண்டபங்கள், விடுதிகளில் வெளியூர் ஆட்கள் தங்கியுள்ளனரா என்று நேற்று இரவு முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுகிறதா என்பதை அறிய வாகன சோதனையும் நடத்தப்பட்டது. தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதியில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இது ஒருபக்கம் இருக்க தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 275 வாக்குச் சாவடிகளுக்கும், நாங்குநேரி தொகுதியிலுள்ள 299 வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று (அக்டோபர் 20) காலை முதல் நடைபெற்று வருகிறது.
நாங்குநேரியில் 95 சதவிகித வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அளிக்கும் பணி முடிந்துவிட்டதாக தெரிவித்த ஆட்சியர் ஷில்பா பிரபாகர் “வழக்கமாக பதற்றமான வாக்குச் சாவடிகளில் மட்டும் வாக்குப் பதிவு வெப் கேமரா மூலமாக கண்காணிக்கப்படும். ஆனால் இந்த முறை 299 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவும் வெப் கேமரா மூலமாக கண்காணிக்கப்படவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு, “தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தொகுதிகளிலும் ரூ.56 லட்சம் பணம் மற்றும் ரூ.27 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மூன்றரை லட்சம் மதிப்பிலான வெள்ளி பரிசுப் பொருட்களும், ரூ.14 லட்சம் மதிப்பிலான இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நாங்குநேரியில் திமுக எம்.எல்.ஏ சரவணகுமார், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த சர்ச்சை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சீமானின் சர்ச்சைப் பேச்சு குறித்த அறிக்கையும் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.