கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா இருவரும் ஆஜராகியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, துணைப் பொதுச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுசாமிபுரத்தில் உள்ள வணிகர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய்யின் பிரச்சார பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் பெற்று விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ.
இந்நிலையில் இன்று (நவம்பர் 24)தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கரூர் பொதுப்பணி தறையின் சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகியுள்ளனர்.
அவர்களிடம் செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சாரம் நடத்த அனுமதி வாங்கியது முதல் விஜய் வந்து சென்றது வரை பல்வேறு விஷயங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருவதாக தகவல்கள் வருகின்றன.
