உலகின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான லைகா மொபைல் தனது ஸ்பெயின் கிளையை, அந்நாட்டின் மற்றொரு முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில்லிற்கு( MASMOVIL) 372 மில்லியன் யூரோவிற்கு (இந்திய மதிப்பில் 3024 கோடி ரூபாய்) விற்பனை செய்துள்ளது.
2006ல் தொடங்கப்பட்ட லைகா மொபைல் நிறுவனம் உலகம் முழுவதும் 23 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 2010ல் ஸ்பெயினில் தனது கிளையை லைகா குழுமம் தொடங்கியது. 15 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தை தற்போது MASMOVIL வாங்கியுள்ளது. இதனை, வாங்கியிருந்தாலும், லைகா மொபைல் எனும் பெயரிலேயே நீண்ட காலத்துக்கு இயங்கும் என்று MASMOVIL அறிவித்துள்ளது.
லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன் இதுகுறித்து கூறுகையில், “ஸ்பெயினில் எங்கள் கிளையை நிறுவும் போது, நாட்டின் மிகப் பெரிய அதி உயர்தரமான தொலைத்தொடர்பு சேவையைக் குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும் என்று கனவு கண்டோம். அந்த கனவு தற்போது நனவாகிவிட்டது. எங்கள் பணியில் வெற்றி கண்டுள்ளோம். லைகா பெயரிலேயே நீண்ட காலத்துக்கு இந்நிறுவனம் இயங்கும் என்று MASMOVIL அறிவித்தது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. MASMOVIL நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
”உலக சந்தையை நோக்கி எங்கள் திசையைத் திருப்பவுள்ளதாகவும், ஏற்கனவே 23 நாடுகளில் இருக்கும் தொலைத் தொடர்பு சந்தையில் பிரம்மாண்ட செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டதுடன் புதிய நாடுகளிலும் தனது சேவையை விரிவாக்கும் செயலில் லைகா ஈடுபட்டுள்ளதாகவும் புதிதாக உகாண்டாவில் சேவை தொடங்கியிருப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.
MASMOVIL-ஐ பொறுத்தவரை ஸ்பெயினில் 8.6.மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது தற்போது. லைகாவின் வாடிக்கையாளர்களையும் சேர்த்து 23.6 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தனதாக்கிக்கொண்டிருக்கிறது.
**கவிபிரியா**�,”