சிறப்புச் செய்தி: கொரோனாவும் பொருளாதாரமும் – என்ன சொல்கிறார் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர்?

Published On:

| By Balaji

ரகுநாத்

அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை ஒன்றிய அரசுக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பொது சுகாதார அவசர நிலை பற்றியும், அதன் விளைவாகப் பொருளாதாரம் சந்திக்கப் போகும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும் அரவிந்த் சுப்ரமணியன் NDTV ஆங்கிலத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதன் சாராம்சம் இந்த கட்டுரையில்:

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை 2008இல் உலகை உலுக்கிய உலகளாவிய நிதி நெருக்கடியோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. அதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இந்த நெருக்கடி இதற்கு முன்பு உலகளவில் ஏற்பட்ட மற்ற நெருக்கடிகளைவிட மிகப்பெரியது. பொது சுகாதார அவசரநிலையாகத் தொடங்கி, பொருளாதார நடவடிக்கைகளை முடக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இந்த கொரோனா வைரஸ், உலகின் பெரும்பான்மை நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கியிருக்கிறது. இதனால் ஏற்படப்போகும் வேலையிழப்புகளும், பொருளாதாரச் சேதங்களும் வரலாறு காணாத அளவுக்குப் பெரிதாக இருக்கும்.

இரண்டாவதாக, இதன் நிச்சயமற்ற தன்மை நம்மைத் திக்குமுக்காட வைக்கிறது. எந்த வேகத்தில் இந்த தொற்று பரவும், இதைச் சமாளிக்கும் அளவுக்கு வலுவான சுகாதார – மருத்துவக் கட்டமைப்புகள் எத்தனை நாடுகளில் உள்ளன, எத்தனை காலத்துக்கு சமூகக் கலப்பைத் தவிர்த்து வாழ வேண்டியிருக்கும் போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இல்லை.

மூன்றாவதாக, இது ஒரு அசாதாரணமான நெருக்கடி. பொதுவாக பொருளாதார நெருக்கடி என்பது பொருட்களுக்கான கிராக்கி – அளிப்பு சமநிலையில் இல்லாமல் போவதாலும், நிதித் துறை சார்ந்த பிரச்சினைகள் பொருட்களின் உற்பத்தியை பாதிப்பதாலும் ஏற்படும்; பல நேரங்களில் குறிப்பிட்ட சில துறைகள் மட்டும் பாதிக்கப்படும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் பல நாடுகளில் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஏற்கனவே வேகமிழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த பொருளாதாரத்துக்கு, கொரோனாவால் ஏற்படப்போகும் பாதிப்புகள் மிகவும் தீவிரமானதாக இருக்கும். இந்தியாவின் மருத்துவ – சுகாதார அமைப்பு வலுவற்ற ஒன்றாக இருப்பதால், தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரிழப்புகளைக் குறைப்பதற்குமே பெரியளவில் பொருளாதார வளங்கள் தேவை. மேலும், பொருளாதாரம் முடக்கப்படுவதால் கோடிக்கணக்கான முறைசாராத் தொழிலாளர்கள் நிர்கதியாய் நிற்கும் அவலத்தைத் தடுப்பதற்கு உடனடியாக அரசு போதிய நிவாரணங்களை அவர்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டும்.

ஒன்றிய அரசு அறிவித்துள்ள ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிவாரணத் தொகுப்பு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வெறும் 1 விழுக்காடு மட்டுமே; இது 5 விழுக்காடு வரையிலாவது உயர்த்தப்பட வேண்டும். ஆதார் அட்டை, ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசின் நிவாரணம் என்ற அணுகுமுறை சரியாக இருக்காது. இந்த நேரத்தில் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள்நலனை உறுதி செய்ய எவ்வளவு செலவு செய்ய வேண்டுமோ அதனைச் செய்தாக வேண்டும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share