மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

சிறப்புச் செய்தி: பொது சுகாதாரக் கட்டமைப்பை பாதிக்கும் சமத்துவமின்மை!

சிறப்புச் செய்தி: பொது சுகாதாரக் கட்டமைப்பை பாதிக்கும் சமத்துவமின்மை!

ரகுநாத்

சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்தும் சேர்ந்து செய்யும் செலவு, பல ஆண்டுகளாக நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 1.5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு அரசு செய்யும் செலவைவிட, மக்கள் தங்களுடைய கையில் இருந்து செய்யும் செலவே (out-of-pocket expenditure) அதிகம் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை 2017-18; மூன்றில் ஒரு பங்கு செலவை மட்டுமே அரசு ஏற்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம். இந்தியாவில் மருத்துவ சேவைகள் பெறுவதைத் தீர்மானிப்பது தனிநபர்களின் வாங்கும் சக்தி/திறன் (purchasing power) என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

சுகாதாரம், மருத்துவ வசதிகளை வழங்குவதென்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்கிறது அரசியல் சாசனம். ஆனால், அதே அரசியல் சாசனம் பொறுப்புகளை மாநிலங்களுக்கு அதிகமாகவும், அதிகாரங்களை ஒன்றிய அரசுக்கு அதிகமாகவும் வழங்குகிறது. அந்த அதிகாரங்களில் ஒன்றுதான் வரி வசூலிக்கும் அதிகாரம். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மாநிலங்களிடையே வரி வசூலிக்கும் திறனும் வேறுபடுகிறது. ஒரு மாநிலத்தில் மக்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருந்தால், அவர்களிடமிருந்து அந்த மாநில அரசுக்கு அதிகளவில் வருவாய் வராது. அதனால், அம்மாநில மக்களுக்கு தரமான அடிப்படை வசதிகளை மாநில அரசால் ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் சமமற்ற நிதிப்பகிர்வு, மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வு என இவ்விரண்டையும் சமன்செய்ய அரசியல் சாசனம் நிதிக்குழு (Finance Commission) என்ற ஏற்பாட்டை வழங்கியுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களில் வாழும் மக்களும், முன்னேறிய மாநிலங்களில் வாழும் மக்களும் ஒரே மாதிரியான, தரமான அடிப்படை வசதிகளைப் பெறுவதை உறுதிசெய்யும் சமத்துவமும், நியாயமும் கலந்த கோட்பாட்டின் (equity principle) அடிப்படையில் நிதிப்பகிர்வு செய்வது அதன் பொறுப்பு. இந்த நோக்கங்களை அடைய உதவும் நிதிப்பகிர்வு சூத்திரம் ஒன்றை இதுவரை அமைக்கப்பட்ட பதினைந்து நிதிக்குழுக்களால் பரிந்துரைக்க முடியவில்லை.

பின்தங்கிய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானத்தைவிட, முன்னேறிய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானம் மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாக, மாநிலங்களுக்கிடையே சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. நோய்வாய்ப்பட்டுள்ள மக்களில் 75 விழுக்காட்டினர் ஒன்பது மாநிலங்களில் வாழ்கின்றனர்; அதே ஒன்பது மாநிலங்களில்தான் நாட்டின் 75 விழுக்காடு ஏழைகளும் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

ஒரு மக்கள்நலன் சார்ந்த சுகாதார அமைப்பு பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்: மக்களுக்கு நெருக்கமாக இருப்பது; மக்களை நேரடியாக ஈடுபடுத்துவது; பாரபட்சம் பார்க்காமல் சேவைகளை வழங்குவது; மற்றும் சுற்றுப்புறத் தூய்மைக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அங்கீகரிப்பது. சுதந்திரம் பெற்று இத்தனை காலம் கடந்த பிறகும்கூட இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு பொது சுகாதாரக் கட்டமைப்பை நம்மால் ஏன் ஏற்படுத்த முடியவில்லை? தனியார்மயமான மருத்துவம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் சமமற்ற நிதிப்பகிர்வு, மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் - இம்மூன்றும் சேர்ந்து, ஒரு வலுவான, தரமான பொது சுகாதாரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்குவதற்கு தடையாக உள்ளன.

நோய்களைத் தடுக்கும் சுகாதார அமைப்பை உருவாக்காமல், முறையாக நெறிப்படுத்தப்படாத தனியார் மருத்துவ சேவைகளை நோக்கி மக்களைத் தள்ளியதன் விளைவாக, பொது சுகாதார அவசரநிலையின்போது அரசு இயந்திரம் திக்குமுக்காட வேண்டியிருக்கிறது. இனியேனும் இந்த பிற்போக்கான அமைப்பை மறுபரிசீலனை செய்வோமா?

வெள்ளி, 3 ஏப் 2020

அடுத்ததுchevronRight icon