மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கொரோனா: குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு!

கொரோனா: குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு!

கொரோனா வைரசின் தாக்கத்தின் எதிரொலியாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தற்போது, இந்தியா உட்பட வல்லரசு நாடான அமெரிக்கா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளைப் பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியால் பல உலக நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியப் பொருளாதாரமும் பெரிய பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. 1.3 பில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்திய ரூபாயின் மதிப்பு, கோவிட் -19 பரவலைத் தடுக்க இந்திய அரசு எடுக்கும் முயற்சியில்தான் இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிவாரண நடவடிக்கைகள் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. 1.7 டிரில்லியன் ரூபாயை, பணம் மற்றும் உணவுத் தேவை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், “இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வந்தாலும் , கோவிட் 19 பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டுவரும் போதுதான் ரூபாய் மதிப்பு சீராகும்” என்று பொருளாதார நிபுணர் மாதவி அரோரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை இந்தியா ரூபாயின் மதிப்பு 7 சதவிகிதம் சரிந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி, டாலருக்கு 76.42 ரூபாயாகச் சரிந்துள்ளது.

இதனிடையே, மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரை ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், ரூபாய் மதிப்பு 76.39லிருந்து ஒரு வருடத்தில் 3.1 சதவிகிதம் அதிகரித்து மதிப்பு கூடும். அப்போது அமெரிக்க டாலருக்கு, நிகரான இந்திய மதிப்பு ரூ. 74ஆக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

என்றாலும், 39 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், 17 ஆய்வாளர்கள், கொரோனாவால் மட்டுமின்றி, ஏற்கனவே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் அடுத்த ஆண்டும் ரூபாயின் மதிப்பு குறையும் என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி குறைந்து 4.7சதவிகிதமாக இருக்கும் நிலையில் அது, தற்போது முடிவடைந்த மார்ச் வரையிலான காலாண்டில் 4 சதவிகிதமாகவும் குறையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon