உலகப் பொருளாதாரத்தின் போக்கை மாற்றுமா கொரோனா வைரஸ்?

business

உலகளாவியத் தொற்றாக விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் , நூறாண்டுகளுக்கு முன்பு 5 கோடி – 10 கோடி உயிர்களை விழுங்கிய ‘1918 ஸ்பானிஷ் காய்ச்சல்’ என்று சொல்லப்படும் இன்ஃபுளுவென்சா தொற்றோடு ஒப்பிடப்படுகிறது. 1918-21 காலத்தில் இந்தியாவில் மட்டும் 1.6 கோடி – 2.1 கோடி மக்கள் இதனால் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

நூறாண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளில் சிறப்பாகச் செயல்படும் பொது சுகாதார அமைப்பு இல்லை; நவீன மருத்துவ வசதிகள் இல்லை. அதே வேளையில், உலக நாடுகளும் இப்போது இருக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருக்கவில்லை.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றைச் சிலர் 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினரைக் கொன்றதாகக் கருதப்படும் Black Death எனும் கொள்ளை நோயோடு (Plague) ஒப்பிடுகின்றனர். கொரோனா வைரஸ் உலகப் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாகக் கணிக்கப்படுவதால், 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோய் எத்தகைய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதைப் பின்னோக்கிப் பார்த்து நாம் பாடங்கள் ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா என்று சிந்திக்கின்றனர்.

கொள்ளை நோய் தாக்கப்பட்டு மக்கள்தொகை கணிசமாகச் சரிந்ததால் பொருட்களுக்கான கிராக்கி குறைந்து, பணவீக்கம் பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டது என்கின்றனர் அந்த நிகழ்வை ஆராய்ந்துள்ள வரலாற்று அறிஞர்கள். மக்களின் உற்பத்தித்திறன் அதிகரித்ததன் விளைவாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பணக்கூலியின் அளவு உயர்ந்தது; விலைவாசி கட்டுப்பாட்டிலிருந்ததால் மக்களின் வாங்கும் திறன் (Purchasing Power) அதிகரித்தது. மக்கள் மத்தியில் பொருட்களுக்கான கிராக்கி உயர உயரப் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான மூலதனத்தைக் குறைந்த வட்டிக்குப் பெற முடிந்தது. பல ஐரோப்பிய நாடுகளில் Black Deathக்கு முன்பு சராசரி வட்டி விகிதங்கள் 20% – 30% ஆக இருந்தது; அந்த நிகழ்வுக்குப் பின்பு அது 8%-10% எனக் குறைந்தது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வாழ்க்கை நிலையற்றது, அதனால் மரணிப்பதற்கு முன் வாழ்க்கையை நன்கு அனுபவிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பகிரப்பட்டதால் இவையெல்லாம் சாத்தியமானது என்று எழுதப்பட்டிருக்கிறது.

இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறுதியிட்டுக் கூறுவது கடினம். ஆனால் நம்முடைய சமகால பொருளாதார சவால்கள் சிலவற்றை ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் பிரதிபலிக்கின்றன. 2008 உலக நிதி நெருக்கடிக்குப் பின் பல ஐரோப்பிய நாட்டு அரசுகள் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று மக்கள்நலனுக்குத் தேவையான பல செலவினங்களை வெட்டின. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்துள்ளன. ஆனால், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்குக் கிடைத்த பங்கு அதிகரிக்காமலேயே இருந்தது. இதனால் பல்வகைப் பொருட்களுக்கான கிராக்கி ஒருபுறம் அதிகரிக்காமல் இருக்க, மறுபுறம் பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்தது.

இந்த மாற்றங்களால் மேற்கத்திய உலகின் பொருளாதாரத்தில் உண்டான பலவீனங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கொரோனாவை எதிர்த்துப் போராடவும், மக்களுக்கு நிவாரணம் அளித்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் அந்நாடுகளின் அரசுகள் வரலாறு காணாத அளவுக்குச் செலவு செய்யப் போவதாக அறிவித்துள்ளன; மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை வெட்டி வருகின்றன.

இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த பிறகு மீண்டும் பழைய பாதையில் அரசுகள் பயணிக்க முடிவு செய்யக் கூடாது. ‘மக்கள் ஒன்று கூடி பயணிப்பதால், வேலை செய்வதால்தானே கொரோனா வைரஸ் போன்ற தொற்றுகள் பொருளாதாரத்தை நெருக்கடிக்குத் தள்ளுகின்றன’ என்று உற்பத்திக்கு ரோபோட்களையும் செயற்கை நுண்ணறிவையும் அதிகளவில் பயன்படுத்தும் போக்கு வலுவடைய வாய்ப்புள்ளது. அப்படியொன்று நடக்குமானால், அனைவருக்குமான அடிப்படை வருமானம் (Universal Basic Income) போன்ற திட்டங்களை அமல்படுத்தி மனிதக்குலத்தின் நலனைக் காப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வது அவசியம்.

**-ரகுநாத்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *