மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

சரிவை நோக்கி உலகப் பொருளாதாரம்!

சரிவை நோக்கி உலகப் பொருளாதாரம்!

உலகின் பல பகுதிகளும் கொரோனா வைரசால் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாகப் பொருளாதாரத்தையே இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இதன் விளைவாக உலகப் பொருளாதாரமே ஒரு பெரும் வீழ்ச்சியை நோக்கி நகர்வதைப் பலரும் கணிக்கின்றனர்.

கொரோனா வளர்ந்த நாடுகளுக்குப் பரவத் தொடங்கியதும் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் தடைப்பட்டபோது 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய அதே அளவு எதிர்மறைத் தாக்கத்தை வரப்போகும் மாதங்களில் காணமுடியும் என்ற பேச்சு ஊடகங்களில் தோன்றியது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனாவின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், 1930களில் ஏற்பட்ட The Great Depression என்று சொல்லப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சியின்போது உற்பத்தியில் ஏற்பட்ட வரலாறு காணாத சரிவு தற்போது ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதாவது, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமிழக்கப் போவதைப் பற்றி நாம் பேசவில்லை; உலகப் பொருளாதாரமே சுருங்கும் ஒரு மந்தநிலையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

1930களில் தங்குதடையற்ற உலகமயமாக்கல் என்பது இல்லை; இன்று உலக நாடுகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருப்பதால் சீனா, அமெரிக்கா என ஒருசில பெரிய பொருளாதாரங்களில் கொரோனா ஏற்படுத்தப்போகும் எதிர்மறையான தாக்கத்தின் அதிர்வலைகள் உலகெங்கும் உணரப்படும். இன்று பொருட்கள் உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் ஒருங்கிணைந்த உலகளாவிய உற்பத்தி சங்கிலித்தொடர்களை (global value chains) நாம் உருவாக்கியுள்ளோம்.

மேலும், 1980க்கு பின் ஏற்பட்ட உலகமயமாக்கலின் மிக முக்கியமான அம்சம், மூலதனம் (capital) என்பது பணமாகவே எப்போது வேண்டுமானாலும் ஒரு நாட்டுக்குள் வரலாம், நாட்டைவிட்டு வெளியிலும் செல்லலாம் எனும் ஏற்பாட்டை பன்னாட்டு நிதி அமைப்புகள் உருவாக்கி இருப்பதே ஆகும். பல காலமாக, மூலதனம் என்பது பெரும்பாலும் பொருட்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் உற்பத்திக் கருவிகளின் வடிவிலேயே இருந்துவந்தது. ஆனால், 80களில் அதன் தன்மை மாறிய பிறகு, முதலாளித்துவத்தின் தன்மையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.

இன்று மூலதனத்திற்கு நாடு சார்ந்த அடையாளம் இல்லை; அது பணவடிவில் பன்னாட்டு நிதி மூலதனம் ஆகிவிட்டது. அது பல நாடுகளில் பங்குச் சந்தையிலும், கடன்பத்திரங்களிலும், அந்நியச் செலாவணி சந்தையிலும், ஊக வணிகத்திலும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது. சேமிப்பு குறைவாக இருக்கும் நாடுகள், பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள், தங்களின் குறுகியகால அந்நியச்செலாவணிக்கான தேவையை, பன்னாட்டு நிதி மூலதனத்திற்குப் பல சலுகைகள் அளித்து வரவேற்று, சமாளித்துக் கொள்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான சிறிய அறிகுறிகள் தோன்றியவுடன் அந்நாட்டை விட்டு வெளியேறும் தன்மை கொண்டது இந்த மூலதனம். வரப்போகும் நாட்களில் இந்த மூலதனம் எந்த அளவிற்கு அமெரிக்க டாலரை நோக்கிப் பறக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

2020-21 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் உலகப் பொருளாதார உற்பத்தி சரிவடைந்து, அடுத்த இரண்டு காலாண்டுகளில் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கும் என்று சிலர் கணிக்கின்றனர். ஆனால், கொரோனா இன்னும் எத்தனை காலத்திற்குத் தங்கும் என்று தெரியாத நிச்சயமற்ற நிலையில், மனிதகுலம் சந்திக்கப்போகும் இழப்புகளைப் பற்றி முடிவாக எதையும் சொல்லமுடியாத ஒரு சங்கடமான புள்ளியில் நாம் நிற்கிறோம்.

-ரகுநாத்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon