இது என்ன ’மாதிரியான’ படம்?!
சின்னத்திரையில் புகழ் பெறும் ஒருவர் பெரிய திரையை நோக்கி நகர்வதைக் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் கண்டு வருகின்றனர். அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் கவின் உடன் அறிமுகமானவர் ராஜு ஜெயமோகன். ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் அருண்ராஜா காமராஜ் உடன் மூவரும் நடித்திருந்தனர். அதன்பின் படங்களில் சிலகாலம் திரையில் தலைகாட்டாமல் இருந்தவர், ‘பன் பட்டர் ஜாம்’ வழியே நாயகனாக ‘ஹாய்’ சொல்லியிருக்கிறார்.
ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள ‘பன் பட்டர் ஜாம்’மில் மைக்கேல் தங்கதுரை, பாவ்யா த்ரிஹா, ஆதியா பிரசாத், விஜே பப்பு, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
’பன் பட்டர் ஜாம்’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது? bun butter jam movie review july 21

கிண்டலடிக்கக்கூடிய கதை! bun butter jam movie review july 21
’பன் பட்டர் ஜாம்’ படத்தின் கதை என்று சொல்லத் தொடங்கினால், அதில் இரண்டுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள் தென்படும். ஆனால், பிரதானமாக இருப்பதென்னவோ சந்துரு (ராஜு ஜெயமோகன்) எனும் மாணவன் ஒரு பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தபிறகு வாழ்வில் சந்திக்கிற சில மாற்றங்கள் தான்.
இந்தக் கதையின் ஊடே சரவணன் (மைக்கேல் தங்கதுரை) உடன் எப்படிப்பட்ட இறுக்கமான நட்பினை சந்துரு கொண்டிருந்தார் என்பது சொல்லப்படுகிறது.
காதல் திருமணமே கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சந்துருவின் தாய் லலிதா (சரண்யா பொன்வண்ணன்) திடீரென்று தனது மனதை மாற்றிக் கொள்கிறார். தோழி உமாவின் (தேவதர்ஷினி) மகள் மதுமிதாவை (ஆதியா பிரசாத்) தனது மருமகள் ஆக்கத் திட்டமிடுகிறார். அதற்காக, மகன் காதல் கொள்வதற்கான சூழலைத் தானே உருவாக்க மெனக்கெடுகிறார்.
மதுமிதா ஒரு இளைஞரைக் காதலிக்க, இன்னொரு பக்கம் நந்தினி (பாவ்யா த்ரிஹா) எனும் பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார் சந்துரு. அதே பெண்ணைச் சரவணனும் ஒருதலையாகக் காதலிக்கிறார்.
இப்படிப் பல ‘காதல்கள்’ கலந்து நிற்கிற ‘பன் பட்டர் ஜாம்’ கதையானது, இதில் வரும் இளைய தலைமுறையினர் வாழ்க்கை குறித்தான புரிதலைப் பெற்றார்களா, அது எத்தகையதாக உள்ளது என்பதைச் சொல்வதோடு நிறைவுறுகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் இக்கதை கிண்டலடிக்க ஏதுவானதாகத் தெரியலாம்.
கும்பலாகச் சேர்ந்து சில ஆண்களோ, பெண்களோ பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டால் இது போன்ற பல கதைகளைக் கேட்க நேரிடலாம் என்பதே நிஜம். அந்த உண்மையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இப்படம் பிடித்துப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரவலாகியிருக்கும் பார்வை! bun butter jam movie review july 21
‘மனதுக்குப் பிடித்தமான இணை யார்’ என்று அறிய, அடுத்தடுத்து பலரோடு பழகுகிற போக்கு இன்றைய ஆண்கள், பெண்கள் இடையே அதிகமாகி வருகிறது. அதில் சில ஆண்கள் / பெண்கள் தங்களுடைய இணை ஏற்கனவே சில ஆண் / பெண்ணோடு பழகியதை ’சகஜமாக’ எடுத்துக்கொள்கிற நிலையும் அதிகரித்து வருகிறது.
ஒருகாலத்தில் அந்த போக்கினை ‘இளிச்சவாய்தனம்’ என்று கிண்டலடித்திருக்கிறது சமூகம். இன்று அவ்விஷயத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் பார்வையில் சிந்திக்கிற மனப்பாங்கு பரவலாயிருக்கிறது.
அந்த வகையில், ‘பன் பட்டர் ஜாம்’ இன்றைய ‘ஜென்ஸீ’ தலைமுறைக்கான படம் எனச் சொல்லலாம்.
படத்தைத் தயாரித்திருக்கும் சுரேஷ் சுப்பிரமணியன் இதன் கதையை ஆக்கியிருக்கிறார். அதனை எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் ராகவ் மிர்தாத்.
டிஷ்யூ பேப்பர் காற்றில் பறப்பது, காதல் இணையோடு ஈசிஆர் செல்வது என்று இதில் சில ‘அடல்ட்ஸ் ஒன்லி’ காட்சியமைப்பு உண்டு. ஒருகாலத்தில் ‘சுவரேறிக் குதிப்பது’ என்று சொல்லப்படுவதற்கு இணையான காட்சியொன்று இப்படத்தில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவையாகக் காட்டப்பட்டிருக்கிறது.
சில ரசிகர்கள் ‘இதெல்லாம் நல்லாவா இருக்கு’ என்று முகம் சுளிக்கலாம். எரிச்சலடையலாம்.
அதனைக் கடந்துவிட்டால், ஒரு பீல்குட் ‘கம்மிங் ஆஃப் ஏஜ் பிலிம்’ ஆக ‘பன் பட்டர் ஜாம்’ தெரியக்கூடும். அதற்கேற்ற உள்ளடக்கம் இதிலுண்டு.
இந்தக் கதையில் சந்துரு எனும் மையப்பாத்திரத்திற்கு தந்திருக்கும் முக்கியத்துவம் நந்தினி, சரவணன் பாத்திரங்களுக்குப் போதுமான அளவில் தரப்படவில்லை என்பது ஒரு பலவீனம் தான்.

அதேநேரத்தில் இதர பாத்திரங்களைப் போதுமான அளவுக்கு விவரித்திருக்கிறார் இயக்குனர்.
பதின்ம வயதினர் பார்த்துக் குதூகலிக்கிற வகையில் முன்பாதி இருக்கிறது என்றால், பின்பாதியானது அனைத்து வயதினரும் ரசிக்கிற ‘காதல்’ எபிசோடு ஆக உள்ளது. அதில் இயக்குனர் சொல்லியிருக்கிற சில பாடங்கள் சிலருக்கு ஒவ்வாமையைத் தரலாம்.
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றித் துளியும் யோசிக்காமல் நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என்பது அவற்றில் ஒன்று. அதனை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்வதற்கேற்ற காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.
ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு இயக்குனர் அமைத்துள்ள காட்சிகளுக்கு ஏற்ற ஆக்கத்தைத் திரையில் தந்திருக்கின்றனர் ஒளிப்பதிவாளர் பாபு குமார், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம், கலை இயக்குனர் ஸ்ரீ சசிகுமார், விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர் ஸ்டாலின் சரவணன், ஒலி வடிவமைப்பு செய்த ஸிங் சினிமா உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பின்னணி இசை வழியே நம் சிரிப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆனால், பாடல்கள் அதற்கு ஈடு செய்யும் வகையில் இல்லை என்பது ஒரு குறையே.
காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் அனைத்தும் தனக்குக் கைவரும் என்பதை உணர்த்தும்விதமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் ராஜு. குறிப்பாக, காமெடி ஒன்லைனர்களை அள்ளிவிடுகிற பாங்கு அவருக்குக் கனகச்சிதமாக வருகிறது.
நாயகிகளாக வரும் பாவ்யா த்ரிஹா, ஆதியா பிரசாத் இருவரில் பின்னவர் சட்டென்று நடிப்பில் கவர்கிறார்.
மைக்கேல் தங்கதுரை மற்றும் விஜே பப்பு இருவரும் சில காட்சிகளே வந்தாலும் ஈர்க்கும்படியான ‘பெர்பார்மன்ஸ்’ தந்திருக்கின்றனர்.
சார்லி, சரண்யா, தேவதர்ஷினியோடு விக்ராந்தும் இந்தப் படத்தில் உண்டு. இவர்கள் ஒவ்வொருவரும் ‘ஸ்கோர்’ செய்கிற வகையில் சில காட்சிகள் அமைந்திருக்கின்றன. பப்புவின் தந்தையாக வருபவர் ஒரு சில ஷாட்கள் வந்தாலும் நம்மை அசரடிக்கிறார்.
இது போகச் சிலர் திரையில் வந்து போகின்றனர். அவர்களுக்குப் பெரிதாக முக்கியத்துவம் தரப்படவில்லை.
கலாசாரம், பாரம்பரியம் சம்பந்தமாகத் தமிழ் திரைப்படங்கள் இதுவரை முன்வைத்துள்ள கருத்தாக்கங்களை மட்டுமே கண்டு வந்தவர்களுக்கு ‘இது என்ன மாதிரியான படம்’ என்ற கேள்வி எழக்கூடும். அதேநேரத்தில், சிலர் இதனை ரசித்துக் கொண்டாடவும் கூடும்.
’பன் பட்டர் ஜாம்’ வெறுமனே ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ மற்றும் ‘மெச்சூர்டு ரொமான்ஸ்’ படமாக அமைந்திருந்தால் வேறுவகையான திரையனுபவம் கிடைத்திருக்கும். ஆனால், மக்களை ஈர்க்க ‘காமெடி’ அவசியம் என்று திரைக்கதை ட்ரீட்மெண்டில் சில விஷயங்களை சேர்த்திருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத். அது தியேட்டர்களில் கூட்டம் கூட வழி வகுத்திருக்கிறது. அதுவே, என்றென்றைக்குமான சிறந்த படம் என்ற அந்தஸ்தை அடையவிடாமல் தடுத்திருக்கிறது.
அப்படியிருந்தும், இப்படம் தருகிற திரையனுபவம் ’ஓகே’ எனும் வகையில் உள்ளது என்பதைச் சொல்லியாக வேண்டும். அடுத்த படைப்பினை இன்னும் சிறப்பாகத் தர ‘பன் பட்டர் ஜாம்’ டீமுக்கு வாழ்த்துகள்..!
