IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியாவின் நட்சத்திர பவுலர் பும்ராவுக்கு ஓய்வளிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. bumrah rest in 2nd test – is gambhir concern?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், வரும் ஜூலை 2 ஆம் தேதி பர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என கம்பீர் – கில் தலைமையிலான இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஏற்கெனவே அணியில் சேர்க்கப்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனையடுத்து பணிச்சுமை காரணமாக 2வது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு கிரிக்கெட் நிபுணர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல் டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பவுலர் பும்ரா ஆவார். மொத்தம் வீசிய 43.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை அடுத்து 140 ரன்கள் கொடுத்தார். அதிக மெய்டன் ஓவர்களை (8) வீசி, சிறந்த எகானமி (3.4 & 3) கொண்டவரும் பும்ரா தான்.
மேலும் அவரை தவிர மற்ற இந்திய பவுலர்களான சிராஜ் (2 விக்கெட் – 173 ரன்கள்), கிருஷ்ணா (5 – 220) , ஜடேஜா (1 – 172), ஷர்துல் (2) ஆகியோர் விக்கெட் எடுக்க திணறியதுடன் அதிக ரன்களையும் முதல் டெஸ்ட்டில் விட்டுக்கொடுத்தனர்.
குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து 92 ஓவர்களில் 9 விக்கெட் எடுத்து 482 ரன்கள் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியை சுட்டிக்காட்டி 2வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது. இந்த முடிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அவருக்கு பதிலாக அணியில் உள்ள இரண்டு சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடருக்கு முன்னதாகவே இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பும்ரா மூன்றில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது. அதன் காரணமாகவே அவருக்கு வழங்கப்பட இருந்த இந்திய அணி கேப்டன் பொறுப்பு நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தது.