சிறப்புக் கட்டுரை: வெகுமக்கள் நலனைப் புறக்கணித்த பட்ஜெட் 2020-21

Published On:

| By Balaji

நா. ரகுநாத்

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

-திருவள்ளுவர்

வந்திருக்கும் நோயாளியின் உடலின் எந்த பகுதியில் நோய் ஏற்பட்டுள்ளது, அதன் தன்மை என்ன என்பதை நன்கு ஆராய்ந்து கண்டறிந்த பின்பு, அந்த நோயைப் போக்குவதற்கான மருந்து இன்னது என்பதை சரியாகத் தெரிந்துகொண்டு அந்த நோயகற்றும் பணியை மருத்துவர் மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தைப் பற்றிக்கொண்டிருக்கும் நோய் என்ன, அதன் தன்மை என்ன என்பதைப் பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், கண்டறியப்பட்ட நோயினை சரிசெய்யும் வகையில் நிதிநிலை அறிக்கை 2020-21 தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கிராக்கியில் சுணக்கமும், தனியார் முதலீடுகளில் தேக்கமும் ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரம் வேகமிழந்துள்ளது என்று தெரிவித்தது பொருளாதார ஆய்வறிக்கை. கிராக்கியைத் தூக்கிவிடாமல் தனியார் முதலீடுகளை மீட்டெடுக்க முடியாது.

மேலும், ஊரக இந்தியாவில் தங்கள் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் விவசாயிகளின் வருமானமும், செலுத்தும் உழைப்புக்கு நியாயமான கூலியும் கிடைக்காததால் கூலித்தொழிலாளர்கள் வருமானமும் பெரிதும் அடிவாங்கியதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாகவே ஊரக இந்தியா பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அரசின் புள்ளிவிவரங்கள், தனியார் துறையின் மதிப்பீடுகள் மற்றும் கள ஆய்வுகள் என அனைத்தும் ஊரகப் பகுதிகளில் உள்ள கிராக்கிப் பிரச்சனையைத் தெள்ளத்தெளிவாக படம்பிடித்துக் காட்டியுள்ளன.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நிதிநிலை அறிக்கையின் தலையாய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு பிரச்சனை இருப்பதையே அங்கீகரிக்க மறுத்துவிட்ட நிதியமைச்சர் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கை என்னதான் சாதித்தது என்று பார்ப்போம்.

வராத வரி வருவாய், குறைக்கப்பட்ட அரசின் செலவுகள்!

வரப்போகும் நிதியாண்டில் பொருளாதாரம் எந்த வேகத்தில் வளரும் என்று சரியாக கணித்தால்தான், அதன் அடிப்படையில், எவ்வளவு வரி வருவாய் வரும்; செய்யவேண்டிய செலவுகளுக்கும் எதிர்பார்த்த வருவாய்க்கும் ஏற்படப் போகும் இடைவெளியின் அளவான நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit) எவ்வளவு இருக்கக்கூடும்; அந்த இடைவெளியை சரிசெய்ய எங்கிருந்து கடன் வாங்க வேண்டியிருக்கும் ஆகியவற்றைத் திட்டமிட முடியும். பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பே தவறாகப் போனால், எதிர்பார்த்த வரி வருவாய் வராது. அந்த நிலையில், அதிகரிக்கப் போகும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு மேலும் கடன் வாங்குவதற்கு பதிலாக, செய்யவேண்டிய செலவுகளைக் குறைத்துக்கொள்ளும். அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

இதுதான் 2019-20 இல் நடந்துள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை 2019 ஜூலை மாதம் தாக்கல்செய்யப்பட்டபோது, இந்த நிதியாண்டில் பொருளாதாரம் 12 விழுக்காடு வேகத்தில் வளரும் என்றார் நிதியமைச்சர். ஆனால், அந்த மதிப்பீடு திருத்தப்பட்டு, பொருளாதாரம் 8 விழுக்காடு வேகத்தில்தான் வளரும் என்று இப்போது சொல்லப்படுகிறது. இதன் விளைவு என்ன தெரியுமா? தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வருமான வரிகளில் இருந்து அரசுக்கு கிடைக்கும் நேரடி வரிவருவாய் 2019-20 நிதியாண்டின் முதற்பாதியில் 5.2 விழுக்காடு வேகத்தில்தான் வளர்ந்தது; இது 18.6 விழுக்காடு வேகத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மறைமுக வரியைப் பொறுத்தவரை, 2019-20 நிதியாண்டின் முதற்பாதியில் அரசுக்கு கிடைத்த ஜிஎஸ்டி வரிவருவாய், 2018-19 நிதியாண்டின் முதற்பாதியில் கிடைத்த ஜிஎஸ்டி வரிவருவாயைவிட 3.5 விழுக்காடு குறைவு. நேரடி வரிகள், மறைமுக வரிகள் இரண்டிலும் இதே போக்கு தொடரும் என்றே பலரும் கணிக்கின்றனர்.

வருவாய் குறைந்ததால், திட்டமிட்டபடி அரசு செலவுகளை மேற்கொள்ள முடியாது என்கிறது 2020-21 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள 2019-20 நிதியாண்டிற்கான செலவுகள் பற்றிய திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (Revised Estimates). இவ்வளவு செலவு செய்ய வேண்டும்; அதற்கு தேவையான வருவாயை எப்படிப் பெற வேண்டும் என்பது ஒரு முற்போக்கான அரசின் அணுகுமுறை. எதிர்பார்த்த வருவாய் வரவில்லை; அதனால் மக்கள் நலனுக்கு அவசியமான செலவினங்களைக் குறைத்தாவது நிதிப்பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பிற்போக்கான அரசின் அணுகுமுறை.

கோடிக்கணக்கான மக்களை நேரடியாக பாதிக்கும் முக்கியமான செலவினங்களுக்கு 2019-20 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை, இவ்வளவுதான் செலவு செய்ய முடியும் என்று சொல்லும் இப்போது திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் 2020-21 நிதியாண்டில் அந்த செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை இம்மூன்றையும் அட்டவணை 1 இல் பார்ப்போம்:

அட்டவணை 1: பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 2019-20, பட்ஜெட் ஒதுக்கீடுகள் 2020-21 – குறிப்பிட்ட சில துறைகள், நலத்திட்டங்களுக்கு:

ஆதாரம்: நிதிநிலை அறிக்கை ஆவணங்கள்

பல முக்கியமான நலத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிடக் குறைவான தொகையே செலவு செய்யப்படும் என்பது இந்த அட்டவணையில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல, நிதிக்குழு (Finance Commission) பரிந்துரையின் அடிப்படையில் 2019-20 நிதியாண்டில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய வரிவருமானம் ரூ. 8,09,133 கோடி; திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ரூ.6,56,046 கோடி. அதாவது, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி மாநிலங்களுக்கு வழங்க முடியாமல் போகும் என்கிறது நடுவணரசு. இந்த பணம் மாநிலங்களின் உரிமை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நிதிநிலை அறிக்கை புறக்கணித்த வேளாண் மற்றும் முறைசாராத் துறைகள்

ஒதுக்கப்பட்ட தொகையைவிட செலவு செய்யப்போகும் தொகை பல முக்கிய செலவினங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது 2019-20 நிதியாண்டிற்கான கதை. 2020-21 நிதியாண்டில் பொருளாதாரம் 10 விழுக்காடு வேகத்தில் வளரும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நிதியமைச்சர். பொருளாதார வளர்ச்சியின் வேகம் 2017-18 நிதியாண்டில் இருந்தே குறைந்துகொண்டு வந்தது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி இவ்விரண்டு நடவடிக்கைகளும் முறைசாராத் துறையைத்தான் (informal sector) பெரியளவில் பாதிக்கும் என்று பல பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர். அந்தத் துறையில் ஏற்பட்ட பாதிப்பு, தற்போது முறைசார்ந்த துறையில் (formal sector) இருக்கும் பெருநிறுவனங்களின் மீது ஏற்படுத்தியிருக்கும் எதிர்மறைத் தாக்கத்தின் காரணமாகத்தான் பொருளாதாரம் வேகமிழந்துள்ளது என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், முறைசாராத் துறை சந்திக்கும் சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வுகாண்பதற்கான அவசியம் இருந்தது. அதையொட்டி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2016 ஆம் ஆண்டிலிருந்தே விவசாயிகளின் வருமானத்தை 2022 க்குள் இரட்டிப்பாக்கப் போகிறோம் என்று சொல்லி வருபவர்கள், அதை இந்த நிதிநிலை அறிக்கையிலும் தவறாமல் சொன்னார்கள்; அதற்காகவே புதிதாக 16 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யப்படும், அந்த திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை எப்படி இரட்டிப்பாக்கும் என்று எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையைப் பார்க்கும்போது, புதிய திட்டங்களைச் செயல்படுத்த அரசு போதிய முனைப்பைக் காட்டி செலவுகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தோன்றவில்லை.

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 2019-20 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட பத்தாயிரம் கோடி கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை, அதனால் ஊரக மக்கள் மத்தியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, 2020-21 நிதியாண்டில் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்காமல், நடப்பாண்டில் செய்யப்போகும் செலவைவிட ரூ.9,500 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் பொருளாதார அணுகுமுறை

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், பெருநிறுவனங்களுக்கு வருமானவரி விகிதங்கள் குறைக்கப்பட்டது. அதனால் ஏற்படவிருக்கும் வரியிழப்பு 2019-20 நிதியாண்டில் மட்டும் ரூ. 1.45 லட்சம் கோடி வரை இருக்கும் என்று அரசே தெரிவித்தது. அந்த சலுகைகளும், அவற்றால் அரசுக்கு ஏற்படும் வரியிழப்பும் இந்த நிதியாண்டிலும் தொடரும். எதிர்பார்த்த வரிவருவாயே வராத நிலையில் மேலும் வரியிழப்பை சந்திக்க அரசு தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முறைசாராத் துறையில் இயங்குபவர்களை தண்டிப்பதும், முறைசார்ந்த துறையில் இயங்கும் பெருநிறுவனங்கள், தனிநபர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள் வழங்குவதும்தான் இந்த அரசின் அணுகுமுறையாக உள்ளது. அது இந்த நிதிநிலை அறிக்கையில் ஊர்ஜிதமாகியுள்ளது. ஏற்கனவே யார் கையில் பணம் இருக்கிறதோ, அவர்களுடைய வாங்கும் திறனையே வலுப்படுத்தும் நடவடிக்கைகள் இந்த நிதிநிலை அறிக்கையிலும் தொடர்ந்துள்ளன.

பொறுப்பிலிருந்து விலக விரும்பும் அரசு

நடப்பாண்டில் நடந்தது போலவே, வரப்போகும் நிதியாண்டிலும் வரிவருவாயின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடக் குறைவாகத்தான் இருக்கப் போகிறது என்பதை மறைமுகமாக நிதிநிலை அறிக்கை அங்கீகரிக்கிறது. எப்படி தெரியுமா? பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை விற்று அதிலிருந்து ரூ.2,10,000 கோடி ஈட்டத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. நடப்பாண்டில் இதற்கு ரூ.1.05,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பங்கைக்கூட அரசு விற்கமுடியவில்லை. இருந்தாலும், அந்த இலக்கை இரட்டிப்பாக்கி இருக்கிறது நிதிநிலை அறிக்கை 2020-21. இது வரவேற்கத்தக்க போக்கு அல்ல. நாட்டு மக்களின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களைத் திறம்பட நடத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. குறுகியகால ஆதாயங்களுக்காக அந்த சொத்துக்களைத் தனியாருக்கு விற்பது ஏற்கத்தக்கதல்ல.

கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியப் பொதுச் சேவைகளை லாப நோக்கில்லாமல் அரசே வழங்கினால்தான் வாங்கும் திறன் குறைவாக உள்ள ஏழை எளிய மக்களுக்கும் அவை கிடைக்கும். அவற்றிலும் லாப நோக்கோடு இயங்கும் அந்நிய முதலீடு, தனியார் முதலீடுகளை மேற்கொள்ள அனுமதித்து, அரசு தன் பங்கைக் கணிசமாகக் குறைத்துக்கொள்வதற்கான ஏற்பாட்டிற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலு சேர்த்துள்ளது.

பொருளாதாரம் துவண்டு கிடக்கும் தருணங்களில் அதைத் தூக்கி நிறுத்த அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் எனும் கோட்பாட்டைக் குழிதோண்டி புதைக்கும் முயற்சி சிறப்பான முறையில் நடந்தேறி இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற ஒன்று எதற்கு இருக்கிறது என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.

கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சியளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share