நா. ரகுநாத்
2020-21 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அதாவது பட்ஜெட், பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரிதும் வேகமிழந்த நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் ஏற்கனவே இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றியும், நேர்மையான நிதிநிலை அறிக்கையின் அவசியத்தைப் பற்றியும் [தீவிர சிகிச்சைப்பிரிவில் இந்தியப் பொருளாதாரம்?](https://minnambalam.com/k/2019/12/29/18) மற்றும் [உங்கள் பட்ஜெட்டில் நேர்மை இருக்குமா?](https://minnambalam.com/k/2020/01/17/17) ஆகிய கட்டுரைகளில் எழுதியிருந்தோம்.
11 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி
2019-20 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலேயே பொருளாதார வளர்ச்சியின் வேகமிழப்பு மிகவும் தீவிரமாக இருப்பது உறுதியானது. அதை மோடி அரசு முதலில் அங்கீகரிக்க மறுத்து, பின் வேறு வழியின்றி பொருளாதாரம் தொய்வடைந்துள்ளதை வேண்டாவெறுப்பாக ஒப்புக்கொண்டது. ஆனால், பொருளாதாரம் எதனால் வேகமிழந்துள்ளது என்பது பற்றிய அரசின் புரிதல் முற்றிலும் தவறானதாக இருந்தது.
பொருளாதாரத்தில் கிராக்கி (Demand) சுணக்கம் கண்டுள்ளதால்தான் வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. கிராக்கியைத் தூக்கிவிட எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், புதிய முதலீடுகள் மேற்கொண்டு அளிப்பை (Supply) அதிகரிக்க பெருநிறுவனங்களுக்கு வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டது. அதனால் ஏற்படவிருக்கும் வரியிழப்பு 2019-20 நிதியாண்டில் மட்டும் ரூ.1.45 லட்சம் கோடி வரை இருக்கும் என்று அரசே தெரிவித்தது. 2019-20 நிதியாண்டின் முதல் பாதியில் நேரடி வரி வருவாயில் எந்த வளர்ச்சியும் ஏற்படாத நிலையில், ஜிஎஸ்டி மறைமுக வரி வருவாய் ஒவ்வொரு மாதமும் அரசு எதிர்பார்த்ததைவிட குறைவாகவே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கார்ப்பரேட் வரிகள் வெட்டப்பட்டன. இவை எந்த நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியப் பொருளாதாரம் 2019-20 நிதியாண்டில் 5 விழுக்காடு வேகத்தில்தான் வளரும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் இதுவே மிகக்குறைவான வளர்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.
கிராக்கி சொல்லும் வரலாற்றுப் பாடம்
இப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த ஒரு சூழலில்தான் நிதிநிலை அறிக்கை 2020-21 தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் பொருளாதாரத்தைத் தூக்கிவிடுமா, இல்லையா என்பதை முடிவு செய்யப்போவது அரசு மேற்கொள்ளப்போகும் செலவின் (Government Expenditure) அளவுதான். ஒரு பொருளாதாரம் வேகமிழந்த நிலையில் இருக்கும்போது, கடன் வாங்கியாவது அரசு கூடுதலாக செலவு செய்து மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும்; கையில் கிடைத்த பணத்தை மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வுக்காகப் பயன்படுத்தும்போது மீண்டும் கிராக்கி அதிகரிக்கும். மக்கள் மீண்டும் நுகர்வை அதிகரிக்கத் தொடங்கும்போது உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்; அவர்கள் மீண்டும் முதலீடுகளை மேற்கொண்டு, வேலைக்கு ஆட்களை அமர்த்தி உற்பத்தியை மேற்கொள்வார்கள். இவற்றின் விளைவாகப் பொருளாதாரம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என்பது வரலாற்றுப்பாடம்.
அதாவது, தங்களுடைய பொருளாதார எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும்போதுதான் மக்கள் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு கூடுதலாகச் சேமிக்கத் தொடங்குவார்கள். அந்த அச்சத்தைப் போக்குவதற்கு அரசு எடுக்க வேண்டிய முயற்சிகளில் மிகவும் முக்கியமானது கிராக்கியை தூக்கிவிடுவது. இந்த கிராக்கி என்பது, நுகர்வுக்கான கிராக்கி (Consumption Demand) மற்றும் முதலீடுகள் மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பணத்துக்கான கிராக்கி (Investment Demand) என்று இரு கூறுகளைக் கொண்டது. நுகர்வுக்கான கிராக்கி இல்லையென்றால், முதலீடுகள் மேற்கொள்வது அர்த்தமற்ற நடவடிக்கை. காரணம், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையே கிராக்கி இல்லாததால் விற்க முடியவில்லை; அதனால்தானே பொருளாதாரம் வேகமிழந்துள்ளது. ஆக, நுகர்வைக் குறைத்துக்கொண்டு, மக்கள் தங்களுடைய சேமிப்பை அதிகரித்தாலும் அந்தப் பணத்தைக் கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு உற்பத்தியாளர்கள் முன்வரமாட்டார்கள்.
தனி நபர் நுகர்வு, தனியார் முதலீடுகள், அரசாங்கத்தின் நுகர்வு மற்றும் நிகர ஏற்றுமதிகள் (ஏற்றுமதி – இறக்குமதி) எனும் நான்கு கூறுகளும் சேர்ந்துதான் ஒரு பொருளாதாரத்தின் வளர்ச்சியின் வேகத்தைத் தீர்மானிக்கின்றன. இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தீர்மானிப்பதில் தனிநபர், குடும்பங்கள் செய்யும் நுகர்வின் (Private Consumption Expenditure) பங்கு கிட்டத்தட்ட 60 விழுக்காடு. மக்கள் பொருட்கள் நுகர்வதைக் குறைத்துக்கொண்டால் அது பல தொழில்களில் முதலீடுகளை பாதிக்கும்; அது வேலையிழப்புகளையும் ஏற்படுத்தும். வளர்ச்சியின் வேகம் குறையும்போது, பரவலாக பல துறைகளில் முதலீடுகள் குறையும். இதுதான் கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்துள்ளது. ஆக, நுகர்வுக்கான கிராக்கியைத் தூக்கிவிட்டால் மட்டுமே பொருளாதாரம் மீண்டுவர முடியும் என்பது திண்ணமாகத் தெரிகிறது.
நலத்திட்டங்களுக்குச் செய்யப்படாத செலவு
ஆனால், இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவதாக, கடந்த சில ஆண்டுகளாகவே தனிநபர் நுகர்வு, தனியார் முதலீடுகள் இவ்விரண்டின் வளர்ச்சியைவிட, அரசு செய்யும் செலவு வேகமாக வளர்ந்துள்ளது. அரசு கூடுதலாகச் செலவு செய்தால் பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவர முடியும் என்று பார்த்தோம். ஆனால், அதுபோன்ற நேர்மறையான விளைவுகள் ஏற்படவில்லை. எதற்கு செலவு செய்தால் கிராக்கியைத் தூக்கிவிட முடியுமோ, அதற்கு அரசு செலவு செய்யவில்லை என்று இதைப் புரிந்துகொள்ளலாம். இரு உதாரணங்களைப் பார்ப்போம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக 2018-19 இல் செய்யப்பட்ட செலவு ரூ. 61,084 கோடி; 2019-20 நிதியாண்டில் அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ. 60,000 கோடி. அதாவது, முந்தைய நிதியாண்டில் செய்த செலவை விட இந்த நிதியாண்டில் அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை குறைவு. மேலும், பல மாநிலங்களில் அந்தத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் ஊரக மக்களுக்குச் செலுத்தவேண்டிய கூலி நிலுவையில் இருக்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து வேளாண் குடும்பங்களுக்கும் நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.6,000-த்தை மூன்று தவணைகளில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தும் PM-KISAN திட்டத்துக்கு 2019-20 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.75,000 கோடி. ஆனால், ரூ.50,000 கோடிதான் செலவு செய்ய முடியும் என்று வேளாண் அமைச்சகத்தின் துணைச்செயலாளர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். மேலும், டிசம்பர் 2018 – டிசம்பர் 2019 காலத்தில் இத்திட்டத்தின்கீழ் மூன்று தவணைகளையும் பெற்ற வேளாண் குடும்பங்களின் பங்கு 25 விழுக்காடாக மட்டுமே இருக்கக்கூடும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (RTI) பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரக மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பணம் அவர்களைச் சென்று சேராததால் அவர்களுடைய வாங்கும் சக்தி நலிவடைந்தது.
யாருடைய வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும்?
ஜூலை 2017 – ஜூன் 2018 காலத்தில் நுகர்வோர் செலவீட்டு ஆய்வை (Consumer Expenditure Survey) NSSO நடத்தியது. இந்தியாவில் ஒரு தனிநபர், நுகர்வுக்காக ஒரு மாதத்தில் செய்யும் செலவு (Monthly per Capita Expenditure) 2011-12 – 2017-18 காலத்தில் 3.7 விழுக்காடு சரிந்துள்ளது; நகர்ப்புறங்களில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே வளர்ந்த இந்த நுகர்வுச் செலவு, ஊரகப் பகுதிகளில் 8.8 விழுக்காடு சரிந்துள்ளது என்பது தெரியவந்தது.
பொருளாதார வளர்ச்சி கடந்த ஆறு காலாண்டுகளாக இறங்குமுகத்தில் இருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதன் விளைவாகவே இந்தத் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று பொருளியல் அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வாங்கும் சக்தியானது கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே சரியத் தொடங்கியது என்பதையே இந்த 2017-18 நுகர்வோர் செலவீட்டு ஆய்வின் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஊரக இந்தியாவில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடியில் இருக்கின்றனர் என்பதே இந்த ஆய்வு மட்டுமின்றி, அனைத்துப் பொருளாதாரக் குறியீடுகளும், கள ஆய்வுகளும் நமக்குச் சொல்லும் சேதி. ஆக, ஊரக இந்தியாவில் வாழும் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதே பட்ஜெட்டின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் எனும் கருத்து பரவலாக இருக்கிறது.
வருமான வரி
இது ஒருபுறம் இருக்க, வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு வரிகளை வெட்டினால், செலவு செய்வதற்கு அவர்கள் கையில் அதிகமாகப் பணம் இருக்கும்; அதை அவர்கள் சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு செலவு செய்யும்போது கிராக்கி அதிகரித்து பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்பும் என்ற வாதத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 5 கோடி முதல் 6 கோடி மட்டுமே. மேலும், வரிச்சுமை குறைவதால் கையில் கூடுதலாகத் தங்கும் பணத்தில் பெரும்பகுதியை அவர்கள் செலவு செய்வார்களா இல்லை, அந்தப் பணத்தை சேமித்து வைத்துவிடுவார்களா என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. அப்படியே அவர்கள் அந்தப் பணத்தைச் செலவு செய்ய முடிவு செய்தாலும், வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கு வரிகளை வெட்டுவதால் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஒரு சிறு பகுதி மக்கள் மட்டுமே பயனடைவார்கள் எனும் வாதத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
எங்கிருந்து பணத்தைத் திரட்டப் போகிறார்கள்?
இரண்டாவது சிக்கல், கூடுதல் செலவுக்கான நிதியை அரசு எங்கிருந்து திரட்டப் போகிறது என்பது பற்றியது. வரப்போகும் நிதியாண்டில் வரவுக்கும் செலவுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும், அந்த இடைவெளியை நிரப்ப அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதே அந்த நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit). அதன் அளவு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்படும். நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று 2003-04இல் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. எதன் அடிப்படையில் 3 விழுக்காடு என்னும் உச்சவரம்பை முடிவு செய்தார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், ஒருமுறைகூட நிதிப்பற்றாக்குறை 3 விழுக்காட்டுக்குக் கீழ் இருந்ததே இல்லை. உண்மையில் அப்படி இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. படிப்படியாக அதைக் குறைத்து 2020-21 நிதியாண்டில் 3 விழுக்காட்டை அடைந்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
2020-21 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படப் போகிறது. ஊரக மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த அரசு முடிவு செய்தால், அதற்குப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் மீதான வரி விதிப்பை நிச்சயமாக அரசு கூட்டாது. அதிகமாக நேரடி வரி வசூலித்து மக்கள் நலனுக்காகச் செலவு செய்யும் எண்ணமோ, விருப்பமோ, திராணியோ சமீபத்திய வரலாற்றில் எந்த அரசுக்கும் இருந்ததேயில்லை. பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளும், வரிச்சலுகைகளும் நாட்டுக்கு எந்த வகையில் பயனளித்தன என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. மாறாக, சாதாரண மக்களை அதிகளவில் பாதிக்கும் மறைமுக வரிகளை அரசு தொடர்ந்து கூட்டிக்கொண்டே போகும் போக்கையே நாம் பார்க்கிறோம்.
பொதுத் துறை நிறுவனங்களை விற்பதால் என்ன விளைவு?
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளையும், அரசின் சொத்துகளையும் விற்று நிதியைத் திரட்ட முடியும் என்று பலர் சொல்கின்றனர். இது ஊரக மக்கள் மீதுள்ள அக்கறையிலிருந்து பிறக்கும் பரிந்துரை அல்ல. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க வேண்டும் என்னும் கோரிக்கை பல காலமாகவே இருந்து வந்துள்ளது. அதை ‘சீர்திருத்தம்’ என்று வேறு சொல்லிக்கொள்கின்றனர். அந்த ‘சீர்திருத்தப்’ பாதையில் போனால், நாளை அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளையும் மூடவோ, அல்லது தனியாரிடம் விற்று விடவோ சொல்வார்கள். அதனால், அந்த ஆபத்தான பாதையை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பெரிய அளவில் கடன் வாங்கித்தான் அந்தச் செலவை அரசு மேற்கொள்ள முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நிதிப்பற்றாக்குறை சில விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படாமல், பொருளாதாரத்தை மீட்டெடுக்க துணிச்சலாக நாட்டு மக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி அரசு செலவு செய்யுமா என்பது நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போதுதான் தெரியும்.
சமூகத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியிலேயே தன்னுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்தும் மோடி அரசு, நாட்டு மக்களின் நலனுக்காக பட்ஜெட் எனும் கருவியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த ஒரு சிறிய முயற்சியையாவது எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கட்டுரையாளர் குறிப்பு : நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சியளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com