மத்திய பட்ஜெட் 2026 – 27-ஐ நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் தமிழகத்துக்கு ஒரு சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அவை,
அறிவிக்கப்பட்ட 7 முக்கிய அதிவேக ரயில் வழித்தடங்களில்… சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் என இரண்டு தமிழகத்தை இணைக்கின்றன.
அரிய வகை கனிமங்களை வெட்டியெடுக்கவும், சுத்திகரிக்கவும் தமிழகத்தில் பிரத்யேக கனிம வழித்தடம் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஒரு கலாச்சார மையம் அமைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
பழவேற்காடு ஏரி பகுதியில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கோபுரங்கள் அமைக்கப்படும்.
இயற்கைச் சுற்றுலாவை மேம்படுத்த பொதிகை மலைப் பகுதிகளில் டிரக்கிங் வசதிகள் உருவாக்கப்படும்.
ஒடிசாவின் தால்சேர் முதல் தமிழகத்தின் ஆம்பூர் வரை ஒரு உள்நாட்டு நீர்வழிப் பாதை அமைக்கப்படும்.
இவை மட்டுமே தமிழகத்துக்கென இடம் பெற்ற அறிவிப்புகள் ஆகும்.
இதுதவிர அனைத்து மாநிலங்களுக்கான அறிவிப்பில்,
தொழில் மற்றும் விவசாயத்தை பொறுத்தவரை கடலோரப் பகுதிகளில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்கப் புதிய திட்டம். குறிப்பாக, பழைய தென்னை மரங்களை அகற்றிவிட்டு அதிக மகசூல் தரும் கன்றுகளை நட நிதியுதவி வழங்கப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய முந்திரியை உயர்மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
ஜவுளித்துறையை சர்வதேச அளவில் போட்டியிட புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
