தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியிலிருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு புகார் அளித்துள்ளது.
நடிகர் விஜய் ஆகஸ்ட் 22-ஆம் தேதி தான் ஆரம்பித்த ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தவெக கட்சிக் கொடியின் மத்தியில் இடம் பெற்றிருக்கும் வாகை மலருக்கு இருபுறமும் யானை சின்னம் இடம்பெற்றுள்ளது. அன்றையே தினமே தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆனந்த், தவெக கட்சியினரிடம் யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஒரு காணொலி வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் தேர்தல் சின்னம் உத்தரவு 1968-இல் 2003 வருடம் கொண்டு வந்த திருத்தத்தின் படி, அசாம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர வேறு எந்த தேசிய கட்சியோ அல்லது மாநிலக் கட்சியோ யானை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கிடையில், இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து, யானை சின்னத்திற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுப்பூர்வமான உறவு இருக்கிறது. மக்களிடம் குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க தவெக கட்சிக் கொடியில் இருக்கும் யானை சின்னத்தை நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி!
கடைசி வரை வாய் மூடி மவுனம்… நன்றி கூறி வெளியேறிய மோகன்லால்… இதெல்லாம் நியாயமா லாலேட்டா?