தெலங்கானாவில் தேசிய கட்சிகள் வலுவாக இல்லை என்று பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியும் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா இன்று (நவம்பர் 30) தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
மத்திய சுற்றுலா துறை அமைச்சரும் தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி, பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியும், முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா, காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி தெலங்கானாவில் 8.52 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சி கவிதா ஹைதராபாத்தில் உள்ள பஞ்சார ஹில்ஸ் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறோம். எங்கள் டிஎன்ஏ மக்களுடன் பொருந்தி போகிறது. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை முதலில் உணர்வது பிஆர்எஸ் கட்சி தான்.
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக தெலங்கானா தேர்தலில் பிராந்திய கட்சிகளாக சுருங்கிப்போய் விட்டன. அவர்கள் முன்பு போல் வலுவாக இல்லை.
மேலும், தெலங்கானா மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் மாநிலத்திற்காக உழைக்கிறோம். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் செஞ்சுரி அடிப்போம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை: சுரங்கப்பாதைகளில் மழை நீர் அகற்றம்!