கிச்சன் கீர்த்தனா: பிரெட் வடை

Published On:

| By admin

பசியில் இருக்கும் சிறுவர்களுக்கு ஒரு வாழைப்பழத்தின் விலையைவிட பதப்படுத்தப்பட்ட, பொரிக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் 5 ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. இதுபோன்ற முரண்கள்தான் இந்தியாவில் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன’ என்று எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? வீட்டிலேயே செய்து தரப்படும் நொறுக்குத் தீனிகளில் இந்த அதிகபட்ச ஆபத்து குறைவு என்பதால் இந்த பிரெட் வடையைச் செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

  • பிரெட் ஸ்லைஸ் – 4
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய கேரட் – கால் கப்
  • பொடியாக நறுக்கிய பீன்ஸ் – கால் கப்
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • இஞ்சி (தோல் சீவி துருவியது) – ஒரு டீஸ்பூன்
  • அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பிரெட்டை சிறிய துண்டுகளாகப் பிய்த்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கூடவே அரிசி மாவையும் சேர்த்து, கெட்டியான வடை மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கலந்துவைத்த மாவை வடை போலத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share