இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் இன்று (மார்ச் 30) நடைபெற்ற நட்சத்திர கால்பந்து போட்டியில் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது பிரேசில் லெஜண்ட்ஸ் அணி. brazil legends catch the hearts of chennai by 2-1 win
2002ஆம் ஆண்டு ஜெர்மனி அணியை தோற்கடித்து பிஃபா உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது பிரேசில் அணி.
அதில் விளையாடிய ரொனால்டினோ, கில்பர்டோ சில்வா, ரிவால்டோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தற்போது பிரேசில் லெஜண்ட்ஸ் என்ற பெயரில் அணியை உருவாக்கி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கண்காட்சி போட்டி விளையாடி வருகின்றனர்.
அதன்படி சென்னையில் முன்னாள் இந்திய கால்பந்து வீரரான ஐ.எம்.விஜயன் தலைமையிலான இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியுடன் இன்று மோதியது ரொனோல்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியைக் காண பலதரப்பில் இருந்தும் மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சரியாக 7 மணிக்கு மைதானத்திற்குள் களம் புகுந்த இரு அணி வீரர்களையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து இருநாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பின்னர் போட்டி தொடங்கியது.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், யாரும் கோல் அடிக்க முடியவில்லை.
சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களிடையே கோல் போட வேண்டிய நெருக்கடி அதிகரித்தது.
இந்த நிலையில் 43வது நிமிடத்தில் வியோலா முதல் கோல் அடித்து பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அடுத்த ஒரே நிமிடத்தில் (44’) இந்தியாவின் பிபியானோ பெர்னாண்டஸ் கோல் அடித்து போட்டியை 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டுவந்தார்.
இதனால் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. போட்டி பெனால்டி ஷூட் அவுட்டுக்கு செல்லுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மாற்று வீரராக களமிறங்கிய ரிக்கார்டோ ஒலிவேரா 63வது நிமிடத்தில் கோல் அடிக்க, பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Invisibilising Fascism by Nalini Taneja
