உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு யோசனை சொன்ன துரைமுருகன்

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று (டிசம்பர் 11) உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதப் பிரதிவாதங்கள் பற்றிய செய்திகளை அறிவாலயத்தில் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ஒருமணிக்கு மேல், ‘உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடையில்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு’என்ற பிரேக்கிங் நியூஸ் வெளிவந்ததைப் பார்த்ததும் ஸ்டாலின் அப்செட் ஆகிவிட்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன என்பதை தீர்ப்பின் நகல் வந்த பிறகு சொல்லுமாறு டெல்லி வழக்கறிஞர்களுக்கு நிர்வாகிகள் மூலம் தெரிவித்த ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி தனது அதிருப்தியை துரைமுருகனிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அப்போது துரைமுருகன், “நாம கேட்ட எல்லா கேள்வியையும் சுப்ரீம் கோர்ட்டும் கேட்டுச்சு. ஆனா தீர்ப்பு தேர்தல் நடத்தலாம்னு வந்திருக்கிறதா டிவியில நியூஸ் வருது. தேர்தல் நடத்தறதுக்காகவே இவ்வளவு மெனக்கெடும் அதிமுக அரசு, தேர்தல்ல என்னென்ன முறைகேடு பண்ணப் போறாங்கன்னு இப்பவே உறுதியா சொல்லமுடியும்.

அதனால தேர்தல் நடக்கட்டும்… ஆனால் இது சட்ட ரீதியான நியாயமான தேர்தல் இல்லைனு சொல்லி தேர்தலையே நாம புறக்கணிப்போம். இடைத்தேர்தல்களை புறக்கணிக்கிறது இல்லையா, அதுபோல புறக்கணிப்போம். இந்த அரசும், தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களையே எப்படி ஏமாற்றுதுனு பிரச்சாரம் செய்வோம்” என்று ஸ்டாலினுக்கு ஒரு யோசனையை முன் வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

அதைக் கேட்டுக் கொண்டே, ‘தீர்ப்பு முழு விவரம் வரட்டும்’என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறார் ஸ்டாலின்.

“இப்போதே அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி சி.வி. சண்முகம் வரை, ’ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே பயம். திமுகவின் வரலாற்றிலேயே அந்தக் கட்சி தேர்தலை எதிர்த்து இவ்வளவு தூரம் போராடியது இப்போதுதான். ஸ்டாலினால் அந்தக் கட்சியின் சரித்திரத்துக்கே அவமானம்’என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஒருவேளை தேர்தல் புறக்கணிப்பு என்று துரைமுருகன் யோசனையைக் கேட்டு ஸ்டாலின் முடிவெடுத்தால், அது அதிமுகவினரின் கூற்றை உண்மையாக்கிவிடும். எனவே ஸ்டாலின் என்ன முடிவெடுப்பாரோ?” என்று அறிவாலயத்தில் சிலர் பதற்றப் பரபரப்பில் இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் வந்த பிறகு, வழக்கறிஞர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு உடனடி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின். ஏனெனில் வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share