பெட்டி பெட்டியாக சிக்கிய ஜெலட்டின் குச்சிகள்… வெடிகுண்டு மிரட்டல் : கோவையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

Published On:

| By Kavi

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலிசார் விசாரித்து வருகின்றனர்.

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தான் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த மின்னஞ்சலில், “படித்தவன் சூதும் வாதும் செய்தால்.. போவான், போவான்.. ஐயோ என்று போவான்!” என்ற பாரதியாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி, ‘4 செ.மீ x 7 செ.மீ அளவுள்ள 2 கருப்புப் பெட்டிகளை தேடி கண்டெடுங்கள். அதை சரியாக செயழிலக்கச் செய்யாவிட்டால் வெடித்துச் சிதறும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அந்த மின்னஞ்சல் புரளி என்பது தெரியவந்தது.

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

இன்று அதிகாலையில் கோவை தீவிரவாத தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரி கருப்புசாமி பாண்டியனுக்கு கேரளாவுக்கு வெடி மருந்துகள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடந்து வாலையாறு செக்போஸ்ட் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சிறிய ரக மகேந்திரா சரக்கு வண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது, லைசென்ஸ் இல்லாத ஜெலட்டின் குச்சிகள் பிடிபட்டது. முதல்கட்ட விசாரணையில் கேரள மாநிலம் மலபுரத்தில் உள்ள குவாரிகளுக்கு வெடிமருந்து வைக்க தருமபுரியில் இருந்து எடுத்துச்செல்லப்படுவதாக ஓட்டுநர் கூறியுள்ளார். அந்த ஓட்டுநரின் பெயர் சுபேர் என்பது தெரியவந்துள்ளது.

அதிக வீரிய தன்மை கொண்ட சுமார் 8000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த ஜெலட்டின் குச்சிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் வேறு ஏதேனும் சதி வேலைக்கு பயன்படுத்த எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

க்யூவ் பிரிவு போலீசாரும் தீவிரவாத தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிசாரும் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும், அதே நாளில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் கோவையில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share