கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் அடை!

Published On:

| By admin

சுரைக்காய்… இதைப் பொரியல் பண்ணணுமா, கூட்டு வைக்கணுமா? இன்றைய தலைமுறை பெண்களுக்கு இந்தக் குழப்பம் வரும். ஆனால் சுரைக்காயில் கூட்டு, பொரியல் மட்டுமல்ல… சுவையான அடையும் செய்யலாம். சுரைக்காயில் அதிக புரதம், தாது உப்புகள், மாவுச்சத்து, நார்ச்சத்துகள் கிடைக்கின்றன. காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு, இதுபோல் அடை செய்து கொடுக்கலாம். இதய நோயாளிகளுக்கும் நல்லது.

என்ன தேவை?

  • இட்லி அரிசி – 200 கிராம்
  • பொடியாக நறுக்கிய சுரைக்காய் – 2 கப்
  • காய்ந்த மிளகாய் – 2, துவரம் பருப்பு
  • கடலைப் பருப்பு – தலா அரை கப்
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டுப்பல் – 2
  • எண்ணெய் – 50 மில்லி

எப்படிச் செய்வது?

அரிசியையும் பருப்புகளையும், தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியைக் களைந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். சிறிது அரைந்ததும், ஊறிய பருப்புகள், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு சேர்த்து, அடைமாவுப் பதத்துக்கு அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய சுரைக்காயையும் போட்டுக் கலந்து, தோசைக் கல்லில் மாவைப் பரவலாக ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரு புறமும் சிறிது எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

ADVERTISEMENT

குறிப்பு: சுரைக்காயில் வடை, அல்வா, கூட்டும் செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share