சிறப்புக் கட்டுரை: குழந்தைமையை நெருங்குவதற்கு வழிசொல்லும் புத்தகம்!

Published On:

| By admin

அ.குமரேசன்

“அப்ப எல்லாம் யாரு குழந்தைகளைப் பார்த்துக்கிட்டது? நாங்களேதான் வளர்ந்தோம்… இப்ப இருக்கிற பெத்தவங்க குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறாங்க… வளர விடுவதே இல்லை” என்ற ரீதியில் வயதானவர்கள் பேசுவதைக் கேட்கலாம். அவர்கள் சொல்வதை அப்படியே நிராகரித்துவிட முடியாது. ஆனால், தெருப்புழுதியில் விளையாடவும் பெரியவர்களுடன் கதையாடவும் முடிந்த அந்தக் காலத்தை இன்றைய குழந்தைகளின் வாய்ப்புகளோடு ஒப்பிட முடியாது.

குறிப்பாக தற்போதைய வீட்டடங்கு சூழலில் நகர்ப்புறக் குழந்தைகள், தெரு விளையாட்டுகளை இழந்துள்ள நிலையில் சக குழந்தைகளோடு ஆட்டம் போட்டுக் கற்றுக்கொள்கிற வாய்ப்புகளே காணாமல் போய்விட்டன. தலைமுறையின் வளர்ச்சிக்கு இது ஒரு பெருந்தடை. ஆகவே குழந்தை வளர்ப்பின் பன்முக அணுகுமுறைகளைப் பெற்றோர்கள் அறிவது ஒரு முக்கியத் தேவை. அதற்கான புத்தகங்கள் இப்போது வரத்தொடங்கியிருப்பது நல்லதொரு வளர்ச்சி.

சிறார் எழுத்தாளரும் குழந்தை வளர்ப்புக்கு ஒரு முன்னுதாரணமாகக் காட்டத்தக்கவருமான விழியன் பங்களிப்பாக இந்தப் புத்தகம் வந்துள்ளது. ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’, ‘ரோபு,‘ ‘மியாம்பூ,’‘அனிதாவின் கூட்டாஞ்சோறு’ உள்ளிட்ட குழந்தைக் கதைகள், விடுதலைப் போராட்டத்தோடு இணைந்த வரலாறு சொல்லும் ‘1650’, பழங்குடிக் குழந்தைகளின் கல்வி நிலையைப் பேசும் ‘மலைப்பூ’ உள்ளிட்ட நாவல்கள் என 20 புத்தகங்களை வழங்கியிருப்பவர் விழியன். ‘உச்சி முகர்’ என்ற பெற்றோர்களுக்கான புத்தகத்தையும் ஏற்கெனவே எழுதியிருக்கிறார்.

குழந்தைகளை நெருங்க வேண்டுமென்றால் குழந்தைமையைப் புரிந்துகொண்டாக வேண்டும். குழந்தைமை என்றால் மழலைத்தனம், வெகுளித்தனம், விளையாட்டுத்தனம் மட்டுமல்ல. அவர்களது உளவியல், சுதந்திரம் எல்லாம் இருக்கிறது. “குழந்தை வளர்ப்பின் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்துக் கூட நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்ல வேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டு நாம் பின்னே செல்ல வேண்டும் என்று அறிந்து புரிந்து நடப்பதே” – குழந்தை வளர்ப்புக் கலை என்று எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துக் கூறுகிறது இந்நூல்.

கருத்து, அறிவுரை என்று பொத்தாம் பொதுவாக நின்றுவிடாமல் நடைமுறை வாழ்க்கையிலிருந்து வழிகளைக் காட்டுவது சிறப்பு. குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்றால், அவர்களிடம் கலைகளைக் கொண்டுசென்று, கலைகளில் நாட்டத்தை ஏற்படுத்துவது பற்றியே பேசுகிறது ஒரு கட்டுரை.

பிடித்தமான கலையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது. இதற்கான முயற்சிகளைப் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் ஆசிரியர்கள் பங்கும் அவசியம். எல்லாப் பெற்றோராலும் இதை முயன்று பார்க்க முடியாது. மிக முக்கியமாக ஒரு கலை பிடிக்குமெனில் அடுத்த கட்ட வழிகாட்டுதல் அவசியம் என்கிறார் விழியன்.

உதாரணமாக, ஓவியம் வரையும் குழந்தைகள் ஒரே நிலையில் நின்றுவிடுவார்கள். அதற்கு அடுத்த கட்டம் என்ன? நம் ஊரில் எங்கே ஓவியங்கள் உள்ளன, சமகால ஓவியங்களின் போக்கு, நம் நாட்டு ஓவியர்கள், என்னென்ன விதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஓவியக் கண்காட்சிகள் எப்போது நடத்தப்படுகின்றன என விரித்துக்கொண்டே போக வேண்டும்.

இது ஒரு ரசனை ஈடுபாடு மட்டுமல்ல. கலைக்கு வேறோர் ஆற்றல் இருக்கிறது. கலை ஒருவரைத் தாங்கிப்பிடித்துக் கொள்ளும். தன் இடர் காலங்களில் ஆசுவாசம் கொடுக்கும். வளர் இளம் பருவத்தில் துணையாக இருக்கும்.

கலை பற்றிச் சொன்னவர் கதை பற்றிச் சொல்லாமல் இருப்பாரா? கதை வேகமான உலக சுழற்சியை நிறுத்திவிடாதுதான். ஆனால் வேகமான வாழ்க்கை சுழற்சியை இலகுவாக்கும் என்கிறார். கதை சொல்வோருடன் குழந்தைகள் நெருங்கிவிடுகிறார்கள். மேலை நாடுகளில் குழந்தைகளுக்குத் தூங்கப் போகும்போது கதை சொல்வது ஒரு முக்கியமான பண்பாடு.

கதை கேட்பதிலும் சொல்வதிலும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யாமலும்கூட தொலைக்காட்சிகளில், கைப்பேசிகளில் வரும் கார்ட்டூன் படங்கள்‌ தாக்கம் செலுத்துகின்றன. அதற்கேற்ற வழிமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

அதீத அறிவுரைகள் வந்தால் குழந்தைகள் ஓடிவிடுவார்கள் எனக்கூறும் ஒரு கட்டுரை, அதைத் தவிர்த்து, உணவை வீணாக்காமல் இருப்பதில் அக்கறை உட்பட சமையல் பணிகளில் அவர்களுக்கு எவ்வாறு ஆர்வத்தை ஏற்படுத்துவது என்று விளக்குகிறது. குழந்தைப் பருவத்திலேயே ஒரு விளையாட்டாக சமையல் ஈடுபாட்டை வளர்க்கிறபோது, அவர்கள் அதில் திறமை பெறுவார்கள் என்பதோடு இது ஏதோ பெண்ணுக்கான வேலையல்ல, எல்லோருக்குமானது என்ற பாலின சமத்துவ எண்ணமும் பாடமாகிவிடும் என்ற சிந்தனை ஏற்படுகிறது.

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சுமார் நான்கைந்து தலைமுறையினர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்த நான்கு தலைமுறைக் கல்வி நம்மில் பெரும் மாற்றத்தையும் ஒழுக்கத்தையும் உண்டாக்கியிருக்க வேண்டும். அதன் முக்கியப் பிரதிபலிப்பு குழந்தை வளர்ப்பில் இருந்திருக்க வேண்டும். ஏனோ அங்கே கவனம் குவியவே இல்லை. கடந்த தலைமுறையில் இது பேசுபொருளாகவே இல்லை என்ற கவலை ஆழமானது.

அந்தக் கவனக் குவியல் ஏற்படுவதற்கு ஒரு சரியான வழி, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் இருவருமே சமமான பொறுப்பு வகிப்பதுதான். ஆனால், இங்கு பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஆண்களின் பங்கு மிகக் குறைச்சல். பள்ளி விழாக்களில் குழந்தைகளோடு கலந்துகொள்வோர் பெருமளவுக்குத் தாய்மார்கள்தான் என்ற பதிவு, பாலின சமத்துவச் சிந்தனைக்கு வலுச் சேர்க்கிறது.

குழந்தைகளுக்குச் சிக்கல் ஏற்படும். அதற்கு ஒரே மாதிரியான ஆயத்தத் தீர்வு கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் கொண்டது. தொடக்கத்திலிருந்தே இதைக் கவனித்து வந்தால் நல்ல தீர்வுகளைக் காண முடியும்.

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைகளின் உலகத்தில் நுழைவது அல்ல, அவர்களின் உலகத்தை புரிந்துகொண்டு விலகி நிற்பதே என்று வாதிடுகிறது ஒரு கட்டுரை. விலகியிருத்தல் என்றால்? கண்டுகொள்ளாமல் விடுவதா? அவர்கள் மீது இருக்கும் பிடிப்பைக் கட்டுப்பாட்டை மெல்லமெல்லத் தளர்த்துதல். அது அவர்களின் மனங்களில் சுதந்திரத்தன்மையை வளர்க்க உதவும் என விளக்கப்படுகிறது. குழந்தையுடன் நெருக்கமாக இருக்கும் பொழுதையும் விலகியிருக்கும் பொழுதையும் சித்திரிக்கிறபோது, என்ன படிக்கிறாய், எப்படிப் படிக்கிறாய் என்று விசாரிப்பது ஒரு சலிப்பை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறது.

இங்கே பேசும் தீர்வுகள், படிப்பு, வருவாய், குடும்பச் சூழல் முதலிய வாய்ப்புகள் உள்ள குழந்தைகளுக்குப் பொருந்தும். அன்றாட வாழ்க்கைக்கே போராடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எப்படிப் போய்ச்சேரும் என்ற சமூக அக்கறையாளர்களின் கேள்வியைச் சந்திக்கிறார் எழுத்தாளர். பள்ளி, ஆசிரியர்கள் அதை ஈடுகட்ட முடியும் என்ற பதிலைச் சொல்கிறார். அரசின் பள்ளித் துறை மட்டுமல்லாமல் ஆசிரியர் அமைப்புகளும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இது. சில அமைப்புகள் இதை ஓர் இயக்கமாகவே மேற்கொள்வது மெச்சத்தக்கது. பரவலாகப் பின்பற்றப்பட வேண்டியது.

இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமான கட்டுரை, “குடும்ப சபை நடத்துவோம்”. சட்ட சபை, கிராம சபை போல வரைமுறைகளோடு குடும்ப சபை நடத்தப்பட வேண்டும். முடிவுகள் கூட்டாக எடுக்கப்படுகின்றன என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட பணியில் யாருக்குப் பொறுப்பு என்றெல்லாம் சபையில் முடிவு செய்யப்பட வேண்டும். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு இது ஏனென்று புரியாமல் போகலாம். ஆனால் வளர வளர ஜனநாயக அணுகுமுறைகள் குழந்தைகளிடம் படிந்துவிடும். சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் வளர்ச்சியல்லவா இது?

இளம் பெற்றோர்கள் வாங்கிப் படிக்கவும், அவர்களுக்குப் பரிசளிக்கவும் ஏற்ற புத்தகம். பெற்றோர்கள் ஈடுபட்டுப் படிப்பதற்கு வசதியாக 48 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். புக்ஸ் ஃபார் சில்ரன் நிறுவனத்தின் சீரிய முயற்சிகளின் தொடர்ச்சியாக இதுவும் இடம்பெறுகிறது. குழந்தைகளைத் திட்டலாமா, அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விகள் இருக்கின்றன. அது பற்றியெல்லாம் மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. எழுத்தாளர் இனிவரும் கட்டுரைகளில் பேசக்கூடும். ஆயினும் இதில் உள்ள அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தாலே, அடிப்பதும் திட்டுவதும் தேவையின்றிப் போய்விடும்

“குழந்தை வளர்ப்பினைப் புரிந்து, குழந்தைமையைக் கொண்டாடி, ஆனந்தமான, வலுவான, செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைப்போம்” என நிறைவடைகிறது புத்தகம். குழந்தை உரிமைகளுக்காக வாதாடுவோரும்

குழந்தை உலகில் சஞ்சரிக்கும் வழியறிந்தோரும், எதிர்கால சமூகம் பற்றிய அக்கறை மிகுந்தோரும் கட்டமைக்க விரும்புவது அதைத்தானே?

குழந்தைமையை நெருங்குவோம்,
எழுதியவர்: **விழியன்,**
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018
பக்கம் 48 – விலை ரூ.45
தொலைபேசி 044 – 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல் **[bharathiputhakalayam@gmail.com](mailto:bharathiputhakalayam@gmail.com)**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share