நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் : அரசுக்கு நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி!

Published On:

| By Kavi

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 7) உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படாத தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தது.

ADVERTISEMENT

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49 வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

ADVERTISEMENT

அவர் தனது மனுவில், “புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகத்தை விற்க அனுமதித்தால் அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப் போல் ஆகிவிடும். எனவே, இந்த புத்தகத்தை விற்கக் கூடாது என அரசுக்கு மனு அனுப்பினேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த புத்தகத்தை பறிமுதல் செய்து, விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு புத்தக கண்காட்சி தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இன்று (ஜனவரி 7) தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘நீதிபதிக்கு எதிரான அந்த புத்தகத்தில் களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் உள்ளன. இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “ மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா ?

மிகவும் தீவிரமான இந்த விவகாரம் தொடர்பான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.? கண்காட்சியில் இந்த புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது?” என கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இதுமாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “புத்தக காட்சி நாளை தொடங்குகிறது. முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். இதுபோன்ற செயல்களை முதல்வரும் விரும்பவில்லை. புத்தக காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. புத்தக கண்காட்சியில் நீதிபதிக்கு எதிரான புத்தகம் விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள், புத்தக பதிப்பாளர் கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share