தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வேஸ் தங்களுக்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக பாகன் தம்பதி பொம்மன் பெள்ளி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர்கள் பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி. இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவர்களை நேரில் சந்தித்தனர். இந்தநிலையில் திரைப்பட இயக்குனர் கார்த்திகி தங்களுக்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக Behindwoods யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாகன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பேட்டியில் பொம்மன் கூறும்போது ,”மும்பையில் ஆஸ்கர் விருதை எங்கள் கைகளில் தந்து புகைப்படம் எடுத்தார்கள். அதன்பிறகு எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. மும்பையிலிருந்து ஊருக்கு திரும்ப விமானத்திற்கு டிக்கெட் மட்டும் போட்டு கொடுத்தார்கள். கோயம்புத்தூருக்கு வந்தபோது கையில் சுத்தமாக காசு இல்லை.
பின்னர் எங்களுக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி தான் தெப்பக்காட்டுக்கு வந்தோம். கார்த்திகி ஊடகங்களில் எங்களுக்கு கார், வீடு, வங்கியில் காசு போட்டதாக பொய் கூறியுள்ளார்கள். அவர் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
படத்தில் வரும் கல்யாண காட்சி படப்பிடிப்பின் போது நாங்கள் தான் 1 லட்சம் ரூபாய் செலவு செய்தோம். அந்த பணத்தையும் திருப்பி தரவில்லை. படம் நல்ல முறையாக அமைந்தால் உங்களுக்கு என்ன வேண்டுமோ செய்து தருவேன் என்று கூறினார்.
ஆனால் எதுவும் தரவில்லை. முதல்வர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் பணம் தந்தார். வேறு யாரும் உதவி செய்யவில்லை. கார்திகிக்கு எப்போது போன் செய்தாலும் அரை மணி நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிடுவார். இதனால் வழக்கறிஞர் மூலம் கார்த்திகிக்கு நோட்டீஸ் அனுப்பினோம். இதற்கு அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை. பின்னர் எங்களை டெல்லிக்கு அழைத்து சென்று 10 ஆயிரம் வாங்கி கொண்டு வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று கார்த்திகி நண்பர்கள் மிரட்டினார்கள்” என்று தெரிவித்தார்

பெள்ளி பேசும்போது, “படப்பிடிப்பின் போது இரவு பகல் பார்க்காமல் எந்த இடத்திற்கு கூப்பிட்டாலும் சென்றுவிடுவேன். இரண்டு மாதம் கொசுக் கடியில் இருந்தேன். என்னுடைய பேத்திகளுக்கு ஏதாவது உதவி செய்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதுவும் செய்யவில்லை.
உங்கள் வீட்டில் படப்பிடிப்பு எடுத்தால் சும்மா விட்ருவீங்களா. ஷூ காலுடன் வீட்டிற்கு சென்றால் கூட நாங்கள் எதுவும் சொல்ல மாடோம். பணம் வந்தவுடன் அவருக்கு எங்களுடைய கஷ்டம் எதுவும் தெரியவில்லை. முதல்வர் தந்த ஒரு லட்சமும் எங்களுடைய மகனுக்கு கால் உடைந்ததால் பணம் செலவாகிவிட்டது.
காசு வச்சிகிட்டு வெளியில் எடுக்கமாட்டாங்க என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் பேத்தி பள்ளி கட்டணத்தை என்னால் கட்ட முடியவில்லை. பணம் இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா.
ஆஸ்கர் விருது வாங்கியவுடன் என் பேத்தி, பேரனுக்கு உதவி செய்ய கார்த்திகியிடம் கேட்டேன். உங்கள் வங்கி கணக்கில் பணம் போட்டுவிட்டேன் என்று சொன்னார். வங்கி கணக்கை பார்த்தால் ரூ.60 தான் இருந்தது. இதுபற்றி கேட்டால் போட்ட பணத்தை நீங்கள் எடுத்துவிட்டீர்கள் என்று கூறினார். ஒரு புள்ள மாதிரி தான் நாங்க நம்புனோம். ஆனால் விருது கிடைத்த பின்பு அவர் எங்களை கண்டுகொள்ளவில்லை. எங்களால் தான் இந்த விருது கிடைத்தது. அதனை அவர் மறந்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரிக்கலாம்” – உச்சநீதிமன்றம்
