பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார் பேட்டை, கோட்டூர் புரத்தில் உள்ள முதல்வர் வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
இதேபோல் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து விஜய்யின் நீலாங்கரை வீட்டில் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து மிரட்டல் விடுத்தது யார்? முதல்வர் வீட்டிற்கும், விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே நபரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பள்ளிகள், முதல்வர்களின் இல்லங்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
