கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (டிசம்பர் 25) 21 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் இல்லங்கள், விமான நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் என பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில் அவ்வப்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களை ஒவ்வொரு முறை வரும் போதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்கின்றனர். ஆனால் இதுவரை வெடிகுண்டு போன்ற எந்த பொருட்களும் கைப்பற்றப்படாத நிலையில் அது புரளி என்பது தெரிய வருகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் இமெயில் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்குகள், உணவு அருந்தும் இடம், வாகனம் நிறுத்தும் இடம், கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு துறை அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share